பங்கமில்லா வாழ்வுபெறப் பொங்கலை

மண்பானையில் கொண்டாடுவோம்

பொ.ஐங்கரநேசன் அழைப்பு

தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது.  ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து வருகின்றன. அலுமினியப் பானைகள் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு விழாவுக்குப்  பொருத்தமற்றது என்பதோடு, உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. தமிழர் பண்பாடும் உடல் நலமும் பங்கமில்லாத வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கலில் மண்பானைகளின் முக்கியத்துவம்பற்றி பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அலுமினியம் மிகவும் இலேசானது. உலோகம் ஆகையால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலை மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் இடப்படுகிறது.

அலுமினியப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. மேலும், சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமிலகார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு சமையல் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் கரைந்து உணவுடன் கலப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. உடலுடன் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிப்பதுடன் ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்களை மேலும் பாதிப்படையவும் செய்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மட்பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்துளைகள்  ஊடாக வெப்பத்தைப் பரவி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு தவிர்க்கப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையை சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவிற்கு விடுவிக்கப்படுவதால் உணவு கூடுதல் போசணைப்பெறுமானம் பெறுகிறது. மேலும் உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து உணவுக்குக் கூடுதல் சுவையையும் தருகிறது. 

எதனையுமே அவசரகதியில் செய்துவிடத் துடிக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய சமையலையும் அவ்வாறே விரைந்து முடிக்கத் தலைப்பட்டு உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோயின் வாய்ப்பட்டும் வருகிறோம். மட்பாண்டங்களுக்கு முழுமையாகத் திரும்புதல் இயலாததாக இருக்கலாம். எனினும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினைஞர்களது வாழ்வு வளம்பெறவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மூலம்

தமிழர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இதில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப்பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு அதன் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) கோண்டாவிலில் நடைபெற்றது. இவ்வுரையரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தரப்பு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் பேசினாலும் எவரும் வெளிப்படையாகத் தமது வாக்குறுதிகளைத் தரப்போவதில்லை. தமிழர் தரப்புக்கு ஆதரவாகக் காட்டிச் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். வெளிப்படையாகத் தராத எந்தவொரு உத்தரவாதமும் தேர்தலின் பின்னர் கண்டுகொள்ளப்படாது என்பதே கடந்த கால வரலாறு. சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்சவையே இறுதியில் வெல்ல வைக்க முடிந்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

ஒப்பீட்டளவில் தமிழ்த் தரப்பின் முன்னால் உள்ள தெரிவு பொது வேட்பாளர்தான். இதில் ஒருபோதும் தமிழ் வேட்பாளர் வெற்றிபெறப் போவதில்லை. ஆனால், தாம் விரும்பம் அரசியல் தீர்வை வெளிப்படையாக முன்வைத்துத் திரளான தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தமது அபிலாசையை வெளிப்படுத்த முடியும். இது சமஸ்டியாகவும் இருக்கலாம் தனி நாடாகவும் இருக்கலாம். ஒருவகையில் இதனைத் தமிழ் மக்களிடையே நடாத்தப்படும் பொது வாக்கெடுப்பாகக்கூடக் கருதலாம். ஆனால், இதன் வெற்றி என்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வாக்குகளைக் திரட்டக்கூடிய ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கத்தின்

சமகால அரசியல் அரங்கு

கோண்டாவிலில் இடம்பெற்றது

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் அரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) கோண்டாவில் வேதபாராயண சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கு தமிழ் அரசியல் நோக்கில் என்பதைத் தொனிப்பொருளாகக்கொண்டு இடம்பெற்றுள்ளது. உத்தேச கடற்சட்டத்திருத்த வரைவு என்னும் தலைப்பில் சமூகச் செயற்பாட்டாளர் இரேனியஸ் செல்வின், புத்தாண்டை எதிர்கொள்ளல் என்னும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மற்றும் இமாலயப் பிரகடனம் எனனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் தமிழ் அரசியல் நோக்கு நிலையில் இருந்து உரையாற்றியிருந்தனர்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் அரசியலில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகச் சமகால அரசியல் உரையரங்கு என்னும் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சூறையாடப்படும் கடலைப் பாதுகாக்கவேண்டிய பெரும் பொறுப்பு 

நெய்தல் நில மக்களிடமே உள்ளது

கடற்கோள் நினைவு நாளில் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

கடல் வாழ்க்கை நில வாழ்க்கையைவிடச் சவால்கள் நிறைந்தது. கடலில் போனால் திரும்பி வருவோமா என்று தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை மரணபயத்தை அறவே இல்லாததாக்கியது. சூறைக் காற்றுக்கும் கொந்தளிக்கும்  அலைகளுக்கும் எதிராக மேற்கொள்ளும் பயணம் பெரும் பயிற்சியாக அமைந்து உடலையும் மனதையும் வலுவாக்கியது. நிச்சயமற்ற வருவாய் பொருள் இழப்புக் குறித்த கவலையை இல்லாமல் ஒழித்தது. இக்கடல்சார் பாரம்பரிய குணவியல்புகளுடன் இலட்சிய உறுதியும் சேர்ந்து தலைவர் பிரபாகரனுக்குப் பேராண்மையைப் பெற்றுத் தந்தது. அவரால் கடலையும் நிலத்தையும் குறிப்பிட்ட காலம் வரையிலேனும் கட்டிக்காக்க முடிந்தது.  இன்று அவர் இல்லாத நிலையில் சூறையாடப்படும் கடலைப் பாதுகாக்கவேண்டிய பெரும் பொறுப்பு நெய்தல் நில மக்களிடமே உள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கடற்கோள் நினைவுநாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (26.12.2023) மாதகல் விநாயகர் இறங்குதுறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பூமியின்  வெப்பநிலை மிக உயர்வாக இருந்த ஆண்டாக நடப்பு 2023 ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை கைத்தொழில்புரட்சி ஆரம்பமானபோது இருந்ததைவிட 1.5 பாகை செல்சியஸ் அளவில் உயரும் என்று விஞ்ஞானிகளால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது பூமியின் காலநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. பூமி சூடாகுவதால் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் நாம் ஏற்கனவே ஒருபுறம் கடும் மழையும் வெள்ளப்பெருக்கும், இன்னொருபுறம் கடும் வரட்சி, பனிமலைகளின் உருகுதல், கடல்மட்ட உயர்வு, பயிர் உற்பத்தி பாதிப்பு, உயிரினங்களின் அழிவு என்று பல பாதகங்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்.

பூமியின் காலநிலையில் நிலத்தைவிட கடல் ஆற்றுகின்ற பங்களிப்புப் பெரியது. பூமியின் மீது சூரியனில் இருந்து வீழுகின்ற வெப்பத்தின் பெரும் பகுதியைக் கடல்தான் உறிஞ்சிவைத்திருக்கிறது. உறிஞ்சிய வெப்பத்தைச் சமுத்திர நீரோட்டங்களின் மூலம் பூமி முழுவதும் சமனாகப் பரவச்செய்கிறது. பூமியைச் சூடுபடுத்தும் கரியமில வாயுவைத் தன்னுள் ஈர்த்துக் கரைத்துவைத்திருக்கும் மிகப்பெரும் காபன் தொட்டியாகச் செயலாற்றுகிறது. கடல்தான் பூமியின் சூட்டைத் தணிவிக்கும் மழை பொழிவதற்குக் காரணமாகவும் உள்ளது. ஆனால், கடலின் இருப்பும் உயிர்ப்பும் தான் எமது  இருப்பும் உயிர்ப்பும் என்று தெரியாத நாம் கடலை மெல்ல மெல்லச் சாகடித்துக் கொண்டிருக்கிறோம்.

எமது பொருத்தமற்ற மீன்பிடி முறைகளாலும் அளவுக்கு அதிகமான மீன்பிடியாலும், கடலட்டை வளர்ப்புப் போன்ற ஒற்றையினப் பண்ணைகளாலும் கடலில் மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இன்று கடலில் மீன்களை விடப் பிளாஸ்ரிக் துகள்களே அதிகமாகக் காணப்படுகின்றன. கடலில் அதிக அளவில் பிளாஸ்ரிக்கைத் தள்ளிக் கொண்டிருக்கின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை 14ஆவது இடத்தில் உள்ளது. கடலை எமது கழிவுகளைக் குவிக்கின்ற ஒரு குப்பைத் தொட்டியாகவே நாம் பாவித்துக்கொண்டிருக்கின்றோம். சூழல்மாசுபாட்டால் ஒட்சிசன் குறைவு ஏற்பட்டுப் பல இடங்களில் கடல் இறக்கத் தொடங்கியிருப்பதாகக் கடலியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

கடல்தான் காலநிலைமாற்றப் பாதகங்களைத் தடுக்கும் கேடயம் என்பதை உணர்ந்து கடற்சூழற் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். கடலைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைத்து மக்களுக்கும் உண்டு. ஆனாலும் கடலின் பங்காளிகளான, கடலையே வாழ்வாதாரமாகக் கொண்ட கடற்றொழிலாளர்களுக்கு இந்தக் கடப்பாடு அதிகமாகவே இருக்கிறது. அதற்கான பட்டறிவும், பராக்கிரமும் இவர்களிடம்தான் அதிகளவில் இருக்கிறது. கடற்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அவசரப் பணியாக விரைந்து மேற்கொள்வதே பூமியில் எமது இருப்புக்கான உத்தரவாதமாக அமையும். இதுவே, கடற்கோளில் பலியான எம் உறவுகளுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கத்தின் 

கடற்கோள் நினைவுநாள் நிகழ்ச்சி

மாதகல் கடற்கரையில் 

உணர்வுபூர்வமாக இடம்பெற்றது

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கடற்கோள் நினைவுநாள் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.2023) மாதகல் கடற்கரையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன், கலை-பண்பாட்டு பிரிவின் துணைச் செயலாளர் கை.சரவணன், வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம், எந்திரி ச.சர்வராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கடற்கோளில் பலியானவர்களுக்குக் கடலில் மலர் தூவி ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்தோனேசியா, சுமத்திரா தீவுக்கு அருகே கடலின் அடியில் 2004ஆம் ஆண்டு நொவம்பர் 26ஆம் திகதி நிகழ்ந்த பூகம்பத்தால் ஏற்பட்ட கடற்கோள் இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில் இரண்டே கால் இலட்சத்துக்கும் அதிகமானோர்களைப் பலியெடுத்தது. இலங்கையிலும் முப்பத்தையாயிரத்துக்கும் மேலானோர் பலியானார்கள். பலகோடி ரூபா சொத்து அழிவுகள் ஏற்பட்டது. இலங்கையின் வரலாற்றில் தீராத வலியை ஏற்படுத்திச் சென்ற இந்நாளை இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்புத் தினமாகக் கொண்டாடி வருகிறது. வடக்கு மாகாண சபை இந்நாளை இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் ஆண்டுதோறும் கடற்கோள் நினைவுநாளை இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதற்கு அமைவாக, மாதகல் விநாயகர் இறங்குதுறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடற்சூழலின் முக்கியத்துவம், அவற்றின் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர்களைத் தணிவிக்கும் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுரைகள் இடம்பெற்றதோடு, நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியிமிருந்தனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தினூடாகக் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்குத் தொடுவாயில் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (23.12.2023) முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப்புகட்டி அவர்களுக்குச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் க.நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடா - உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தாபகத் தலைவருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கலந்துகொண்டிருந்தார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், விவசாயப் போதனாசிரியர் த.துளசிராம் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றியிருந்தார்கள்.

நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பால் சூழல் விழிப்புணர்வுக் குறிப்பேடுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின்கீழ் நேற்று சனிக்கிழமை (09.12.2023) கொட்டடி, இருபாலை ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது. இதற்கான நிதி அனுசரணையை அமரர் பொ.பரமேஸ்வரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருமதி பராசக்தி பரமேஸ்வரன் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

கொரோனாப் பேரிடர்க் காலத்தில் ஏற்பட்ட பொதுமுடக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவு காரணமாக வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் குடும்பங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டே கொரோனாத் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் இருந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நன்கொடையாளர்களின் அனுசரணையோடு அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற உலருணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை

மூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும்

பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை அறியாது இதனை விற்பனை செய்யத்தொடங்கி உள்ளார்கள். இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது. மூடநம்பிக்கை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

ஆகாயத் தாமரை வீடுகளில் வளர்க்கப்படுவது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயற்கை எந்த உயிரியையுமே தேவையற்றுப் படைப்பதில்லை. ஒவ்வொரு உயிரியும் முக்கியத்துவம் மிக்கவை. அவை பரிணாமிக்கும் சூழலின் சமநிலையில் இன்றியமையாத பங்களிப்பை நல்கி வருகின்றன. ஆனால், அவை இயற்கையாகத் தோன்றிய பிரதேசத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படும்போது அவற்றுள் சில இனங்கள் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகிவிடுகின்றன. புதிய சூழலின் சமநிலையைக் குழப்பிச் சரிசெய்யமுடியாத அளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகின் உயிர்ப்பல்வகைமையை அழித்துவரும் பிரதான காரணிகளில் ஒன்றாக இவ்வந்நிய ஊடுருவல் இனங்கள் உள்ளன. அத்தகைய ஒரு அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரமே ஆகாயத்தாமரை ஆகும்.

ஆகாயத் தாமரை தென் அமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட ஒரு அசுர நீர்க்களை. நீரே தெரியாத அளவுக்கு விரைந்து மூடிவளரும் ஆற்றல் பெற்றவை. இதனால், நீர்ச்சூழற் தொகுதியில் ஏனைய உயிரினங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, நுளம்புகளின் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. குளங்களில் இருந்து தப்பிச்செல்லும் இக்களை வயல் நிலங்களில் பல்கிப்பெருகி நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இலங்கை அரசாங்கம் ஆகாயத் தாமரையை அந்நிய ஊடுருவல் ஆக்கிரமிப்பு இனமாகக் கருதி அழிக்கத் தலைப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆரியகுளத்திலிருந்து இதனை முற்றாக அகற்றுவதற்கு மிகப் பெருந்தொகைப் பணமும் பெருங்காலமும் எடுத்தது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

இன்னும் ஏராளமான குளங்கள் ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்புக்குள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் அதிர்ஸ்ட தேவதை என்ற அந்தஸ்தை வழங்குவது அதற்கு அசுரப் பலத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும். வீடுகளிலிருந்து தவறுதலாக வெளியேறும் இதன் சிறு அரும்பே அதன் பல்கிப்பெருகும் ஆற்றலால் சூழலை அதன் ஆக்கிரமிப்பின்கீழ் விரைந்து கொண்டுவந்துவிடும். ஏற்கனவே பார்த்தீனியம், சீமைக்கருவேலம், இப்பில்இப்பில் போன்ற அந்நியன்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எம் நிலம் ஆகாயத் தாமரையினாலும் வலிகளைச் சுமக்க நேரிடும். எமது விவசாயத் திணைக்களம் ஆகாயத் தாமரை தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சங்கிலியன் பூங்கா  கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி

30ஆம் திகதி வியாழக் கிழமையுடன் நிறைவுறுகின்றது.

நல்லூர்  சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுவரும் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நாளை மறுதினம் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.வடமாகாண சபையின் பிரகடனத்துக்கு அமைவாகக்  கார்த்திகை மாதம் ஆண்டுதோறும் வடமாகாண மர  நடுகை மாதமாகக்  கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது .இம்மாதத்தில் மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாகவும் தரமான மரக்கன்றுகளைப் பொது மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலும் தமிழ்த் தேசியப்  பசுமை இயக்கம் ஆண்டு தோறும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் தாவர உற்பத்தியாளர்களின் பங்கேற்புடன்  கார்த்திகை வாசம் என்ற பெயரில் மலர்க் கண்காட்சியொன்றை நடாத்தி வருகிறது.இந்த ஆண்டில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான இக்கண்காட்சி 30ஆம் திகதி வியாழக் கிழமையுடன் நிறைவுறுகின்றது.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி முன்னிரவு 7 மணிக்கு நிறைவுறும் இக்கண்காட்சியைத் தினமும்  ஆயிரக்கணக்கானவர்கள்  ஆர்வத்தோடு பார்வையிட்டு வருவதோடு மலர்ச் செடிகளையும் ,மரக்கன்றுகளையும்,  வீட்டுத் தோட்டத்துக்கான செடிகளையும் வாங்கிச் செல்கின்றனர் . கண்காட்சியைப் பார்வையிட வருகின்ற மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசியப்  பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம்

கார்த்திகைப் பூச்சூடி உணர்வுபொங்க ஆரம்பம்

பெருந்திரளானோர் பங்கேற்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி நேற்று புதன்கிழமை (22.11.2023) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. கண்காட்சி நடைபெறும் மலர்முற்றம் காட்சித்திடலை வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், சமூக-அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றியிருந்தார்கள். பெருந்திரளானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் நீர்வையூர் பொன்சக்தி கலாகேந்திரா மாணவிகளின் மரநடுகைப்பாடல் நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றது. 

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தைத்  தமிழர் வாழ்வியலில் இம் மாதம் சுற்றுச்சூழல், ஆன்மீகம், பண்பாடு மற்றும் அரசியல் ரீதியாக கொண்டிருக்கும் பல்பரிமாண முக்கியத்துவம் காரணமாக 2014ஆம் ஆண்டு வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. பசுமை இயக்கம் ஆண்டுதோறும் இம் மாதத்தில் மரநடுகையில் ஈடுபட்டுவருகிறது. அத்தோடு, பொதுமக்கள் தரமான மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களின் பங்கேற்புடன் மலர்க்கண்காட்சியையும் ஏற்பாடு செய்து வருகிறது.

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியுள்ள கார்த்திகை வாசம் கண்காட்சி எதிர்வரும் 30ஆம் திகதிவரை தினமும் காலை 8.30 மணி முதல் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்கள் அனைவருக்கும் பசுமை இயக்கத்தால் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

கறுவா மரக்கன்றுகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக இன்று வியாழக்கிழமை (09.11.2023) பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. பாடசாலை அதிபர் ச. விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டு மரநடுகையில் மாணவர்களின் வகிபாகம் குறித்து உரையாற்றியதோடு, மரக்கன்றுகளையும் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்குக் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்துவரும் பெங்களுர் அல்சூர் றோட்டரிக் கழகத்தினரும்  , கல்வி சக்தி அமைப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

கறுவா மரம் தென் இலங்கையில் காணப்படுகின்ற இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஒரு தாவரம் என்பதோடு பெருமளவு அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் வர்த்தகப் பயிராகவும் விளங்குகின்றது. இதன் பொருளாதாரப் பயன்கருதி அண்மைக்காலமாக வடக்கிலும் கறுவாச் செய்கை முக்கியத்துவம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாவடியில்  பசுமை இயக்கத்தின்

அற்றார் அழிபசி தீர்த்தல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு உல ர் உணவுப் பொருட்களை வழங்கும் அற்றார் அற்றார் அழிபசி தீர்த்தல்  திட்டம்  தாவடியில் நேற்று திங்கட் கிழமை [06-11-2023] முன்னெடுக்கப்பட்டுள்ளது . தாவடியின் பல்வேறு  பகுதிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட  107 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள்  அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுசரணையை அல்சூர் றோட்டரிக் கழகம்  வழங்கி இருந்தது .

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால்

உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. ‘பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) அரியாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பொருளாதாரரீதியான வருவாயைத் தேடித்தரவல்ல கறுவாச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவருக்கும் கறுவா மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையை கனடாவின் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ந.கேதீஸ்வரசிவம் அனுப்பிவைத்துள்ளார்.

கொரானாப் பேரிடர்க்காலத்தில் ஏற்பட்ட தொழில் இழப்பைத் தொடர்ந்து தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பொருளாதாரரீதியாக ஏற்கனவே நலிவுற்ற குடும்பங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கொரானாப் பேரிடர்க்காலத்தில் ஆரம்பித்த ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ திட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் 

மரக்கன்றுகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்டுவரும் வடமாகாண மரநடுகை மாதத்தை மிகச் சிறப்பாகக் கடைப்பிடித்து வருகிறது. இக்காலப் பகுதியில் மரக்கன்றுகளை நடுகை செய்து சிறப்பாகப் பராமரிப்போம் என்ற உத்தரவாதத்தை வழங்கும் பொது அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக மரக் கன்றுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும், வடமாகாண மரநடுகை மாதம் நொவெம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கோரிக்கையின் பேரில் அவர்களுக்கு இன்று (03.11.2023) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும்

பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம்

மரநடுகை மாத அறிக்கையில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு

இயற்கையைக் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று வகுத்து இயல்பாகவே இயற்கையோடு இசைந்த வாழ்வியலைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். நெருக்கடிகள் மிகுந்த போர்ச் சூழலிற்கூட இயற்கை எனது நண்பன் என்று சொல்லி எமது சூழலைப் பேணி பாதுகாத்த மரபினர் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் கடுமையான விளைவுகளில் இருந்தும் எம்மைக் காப்பாற்றும். அந்த வகையில் மாவீரர்களைப் போற்றும் இக்கார்த்திகை மாதத்தில் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாக வடக்கு மாகாண சபையால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றம் மிக மோசமாகத் தனது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த பூகோளச் சராசரி வெப்பநிலையைக் கொண்ட மாதமாக இந்த ஆண்டின் யூலை மாதம் பதிவாகியுள்ளது. காட்டுத்தீயும் வெப்ப அலைகளும் முன்னெப்போதையும்விட மூர்க்கம் கொண்டு பொசுக்கி வருகிறது. இந்த ஆண்டில் கனடாவில் மட்டும் காட்டுத்தீ ஒன்றரை இலட்சம் சதுரக் கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான காட்டுப் பரப்பை சாம்பலாக்கியிருக்கிறது. கடந்த கோடையில் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகள் 61,000க்கும் அதிகமான மக்களைப் பலியெடுத்திருக்கிறது. இன்னொருபுறம், இந்த ஆண்டு லிபியாவில் கடும்மழை கொட்டித்தீர்த்ததில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதோடு பத்தாயிரத்துக்கும் மேலானோர் காணாமல் போயுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்குதல்களுக்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. பூமி சூடாகுவதால் துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருகி வருவதன் காரணமாக உயர்ந்து வரும் கடலால் இலங்கையின் கரையோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வால் யாழ் குடாநாடு ஆனையிறவுப்பகுதியில் கடலால் துண்டிக்கப்பட்டுத் தனித் தீவாக உருவாகும் என் எதிர்வு கூறப்பட்டுள்ளது. உலகம் இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ள இந்த அனர்த்தங்களுக்குக் கரிக்காற்றை உறிஞ்சுகின்ற காடுகளை அளவுகணக்கில்லாமல் கபளீகரம் செய்துவருவதே அடிப்படைக் காரணமாகும். நாமும் யுத்தம் தின்றது போக எஞ்சியிருக்கும் காடுகளையும் அபிவிருத்தியின் பெயரால் அழிக்கத் தலைப்பட்டிருக்கிறோம். தமிழின் அடையாளமான பனை மரங்களைக்கூட நாம் விட்டுவைப்பதாக இல்லை.

பூமி வெப்பமடைதல் வெறுமனே காலநிலை மாற்றத்துடன் அடங்கிப் போய்விடும் ஒன்று அல்ல இதன் எதிர்விளைவுகளாகக் கடும் வரட்சி ஏற்பட்டுக் குடிநீருக்காக நெடுந்தொலைவு அலைய வேண்டி ஏற்படும். பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். கால்நடை வளர்ப்பைக் கைவிடவேண்டி ஏற்படும். வளியில் மாசுகள் அதிகரித்துச் சுவாசநோய்களால் அல்லாட வேண்டி ஏற்படும். மனஅழுத்தம் உருவாகித் தற்கொலை உணர்வு தூண்டப்படும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே போரின் கொடிய வலிகளைச் சுமந்து நிற்கும் ஈழத்தமிழினம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு இப்போதிருந்தே பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் கற்பனைக்கும் எட்டாத் தாங்கொணாத் துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

காசாவில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டுவரும் யுத்த நெறிமுறைகளையும் மீறிய தாக்குதல்களினால் மிகப்பெரும் மனிதப்பேரழிவுக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு நீதி வேண்டியும், இஸ்ரேலைக் கண்டித்தும் இன்று சனிக்கிழமை (21.10.2023) யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு பாலஸ்தீன மக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

இனவழிப்புக்கு ஆளாகும் பாலஸ்தீனிய மக்களுடன்

மனதளவிலாவது தமிழ்மக்கள் துணைநிற்க வேண்டும்

பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு

 

காசாப் பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுத்ததையடுத்து  இஸ்ரேல் காசாவின் மீது கொடூரமான யுத்தமொன்றை ஆரம்பித்திருக்கிறது. மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் என்று பாராது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை வீசி  காசா முழுவதையுமே துடைத்தழிக்கும் நோக்கில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாகத் தாக்கி வருகிறது. இந்த யுத்தம் ஹமாஸ் இயக்கத்தினரைச் சாட்டாக வைத்து  பாலஸ்தீனியர்களைக் கருவறுக்கும் இனவழிப்பு யுத்தம் ஆகும். இந்நேரத்தில்,  இலங்கையில் இனவழிப்புக்குத் தொடர்ச்சியாக  முகங்கொடுத்துவரும் ஈழத்தமிழ் மக்கள் இனவழிப்புக்கு ஆளாகும் பாலஸ்தீனிய மக்களுடன் மனதளவிலாவது துணைநிற்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தாக்குதல் தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா நிலப்பரப்பை இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு பலவந்தமாக ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். காசா வெறும் 365 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. உலகின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாக விளங்கும் இங்கு 20 இலட்சத்துக்கும் அதிகமான  மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்குட்பட்ட இளயதலை முறையினராவர். இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் என்னும் குறுகிய நிலப்பரப்பில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் திட்டமிட்டுச் சிக்கவைத்து அவர்களைக் கொத்துக்குண்டுகள் வீசி அழித்தொழித்ததைப் போன்றே இன்று  மிகக்குறுகிய காசா நிலத்துண்டில்   பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஐனநாயக வழிமுறைகளிலிருந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணாமித்தபோது தமிழ் விடுதலை இயக்கங்களில் பலர்  பாலஸ்தீன விடுதலைப் போராளிகளிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இதைத் தங்களின் பெருமையாகவும் வலிமையாகவும் சிலாகித்தவர்கள் இன்றும் எம்மத்தியில் உள்ளனர். பாலஸ்தீனியர்களிடமிருந்து  ஆயுதப் பயிற்சி பெற்றதை  நாம் எவ்வாறு மறக்கவியலாதோ, அதே போன்று இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவினரின் ஆலோசனையின்பேரில் தமிழ் மக்களை இலங்கை அரசு தாக்கி அழித்ததையும்  நாம் மறந்துவிடலாகாது. ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்காக நாம் குறைந்த பட்சம் தற்போது அனுதாபங்களையாவது வெளிப்படுத்தாதுவிடின் வரலாறு எம்மை ஒருபோதும் மன்னிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியற் கட்சிகளை வழிப்படுத்த

மக்கள் இயக்கமொன்று பலம் பெற வேண்டும்

பொ.ஐங்கரநேசன்  சுட்டிக்காட்டு

 

விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் அவர்களின் அரசியல் துறையே தமிழ்த் தேசியக் கட்சிகளின் வழிகாட்டும் பீடமாக இருந்தது. அவர்கள் எதை முன்மொழிந்தார்களோ அதையே எமது கட்சித் தலைவர்கள் வழிமொழிந்தார்கள். தமிழ் மக்களுக்கான ஒரு தேசியத் தலைமை இல்லாத நிலையில் தமிழ் அரசியற் கட்சிகள் ஒவ்வொன்றும் திக்கொன்றாக  அவற்றினது எஐமானர்களின் அல்லது நிதியூட்டு நபர்களின் மனங்கோணாதவாறு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கட்சிகளை வழிப்படுத்த மக்கள் இயக்கமொன்று பலம் பெற வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர்  பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டிள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை.(15.10.2023.) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

 அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆறுகள் ஒரு போதும் பின்னோக்கிப் பாய்வதில்லை. அது போன்றுதான் வரலாறும் பின்னோக்கிப் பாயாது. வரலாறு எங்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதோ, அந்த இடத்திலிருந்துதான் வரலாறு தந்த படிப்பினைகளையும் உள்வாங்கிக் கொண்டு நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால, இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தயாராக இல்லை. முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள்  முப்பது, நாற்பது வருடங்கள் பின்னால் சென்று அங்கிருந்து போராட நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் காலப்பொருத்தமற்று அடிக்கடி அறிவிக்கப்படும் கடையடைப்புப் போராட்டங்கள்.

தமிழ்க்கட்சி ஒன்றின் தலைவர் தாங்கள் ஆயுதங்களைக் கைவிட்டதைப் பிழையென்று தற்போது உணர்வதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார். ஆயுதங்களைக் கீழே போட்டு ஓடி விட்டு இப்போது கைவிட்டது என்று கூறுவது நகைப்புக்கிடமானது. ஆயுதம் பற்றிய வெட்டிப் பேச்சை  மக்கள் இனியொருபோதும் இரசிக்க மாட்டார்கள். அதற்கு நிகரான வீச்சுடன் மக்களை அணிதிரட்டி காலிமுகத்திடல் அரகலிய போன்று போராட முன்வாருங்கள். புகைப்படங்கள் எடுப்பதற்கு முண்டியடித்து முன்னால் நிற்கும் தலைவர்களாக இல்லாமல் சொல்லாலும் செயலாலும் முன்மாதிரியாக உள்ள தலைவர்களின் பின்னால் அணிவகுத்து வருவதற்கு மக்கள் தயராக இருக்கிறார்கள். 

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தேர்தலை மாத்திரமே இலக்காக கொண்டுள்ள கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கியிருக்கிறோம். இந்தக் கையறு நிலையிலேயே வலுவான சிவில் சமூகம் அல்லது மக்கள் இயக்கம் ஒன்றின் அவசியம் உணரப்படுகிறது. இருக்கின்ற மக்கள் அமைப்புகள் ஒன்றில் அரசியற் கட்சிகளின் பினாமிகளாகச் செயற்படுகின்றன. அல்லது சிவில் சமூகப் பிரதிநிதியாகப் பிரபலம் பெற்று விட்டால் அவரிடம் தேர்தல் ஆசை தொற்றிக் கொள்கிறது. இவற்றுக்கு இடங்கொடாது கட்சிகளின் மூக்கணாங் கயிறாகச் செயற்படக்கூடிய மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்ப எமது புத்திஜீவிகள் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 

சமகால அரசியல் உரையரங்கு.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று ஞாயிறுக்கிழமை [15-10-2023] நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ..ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்களும் , இஸ்ரேல் - ஹமாஸ் போர் :பிராந்திய அரசியலில் மாற்றங்களும் விளைவுகளும் என்ற தலைப்பில் யாழ் .பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே .ரி .கணேசலிங்கம் அவர்களும்

உரையாற்றியிருந்தார்கள்.வரவேற்புரையை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சண் . தயாளன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம்

பேரினவாதம் உயிரோடிருக்கும்வரை தமிழினம் அனுமதியாது

பசுமை இயக்கத்தலைவர் ஐங்கரநேசன்

ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ் - மாவட்டச் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியுள்ளது. தமிழர் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இக்கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. ஆனால், அரசதரப்பு எத்தகைய தீவிரங்காட்டினாலும் போரில் உயிரிழந்த அனைவருக்கம் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்குப் பேரினவாதம் உயிரோடிருக்கும்வரை தமிழினம் அனுமதியாது. என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிச் செயலகம் போரில் உயிர்நீத்தவர்களுக்கான பொதுநினைவுச் சின்னமொன்றை அமைக்க முற்பட்டிருப்பது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்துக்கமைவாக நல்லாட்சி அரசாங்கம் தான் ஏற்றுக்கொண்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் கீழ் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகப் போரில் உயிர்நீத்தவர்களுக்கான பொது நினைவுச் சின்னமொன்றை அமைப்பதற்கு முடிவெடுத்திருந்தது. போராளிகளையும் பொதுமக்களையும் அவர்களைக் கொன்றொழித்த படைத்தரப்பையும் ஒன்றாக நினைவிற் கொள்ளும் இம்முடிவிற்குத் தமிழ் மக்கள் அப்போதே தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். இவ்வெதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, அதனை எவ்வடிவத்தில் அமைப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இக்கலந்துரையாடல் பொது அழைப்பும் ஊடகங்களின் பங்கேற்பும் இல்லாது நிபுணர்குழு தெரிவுசெய்து அழைத்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினருடன் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.

போர்முடிவுற்று பதின்னான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ சமிக்ஞையினையும் அரசதரப்பு வெளிக்காட்டவில்லை. போர்மரபுகளையும் மீறி மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைத்தழித்த அரசதரப்பு, யுத்தவெற்றியைப் பறைசாற்றும் விதமாகப் படைத்தரப்பினருக்கான நினைவுச் சின்னங்களைத் தமிழர்தாயகப் பகுதியெங்கும் அமைத்துள்ளது. ஆனால், அகிம்சை வழியில் போராடி உயிர்துறந்த திலீபனின் நினைவுகூருதலை சிங்களக் குண்டர்களின் மூலமும், தனது ஏவல்துறையான காவல் துறையின் மூலமும் குழப்பி வருகின்றது. திலீபனின் நினைவேந்தல் நாட்களிலேயே இனநல்லிணக்கத்தின் பெயரால் பொது நினைவுச் சின்னமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடலையும் நிகழ்த்துகிறது. உலகை ஏமாற்றும் அரசாங்கத்தின் இந்நிகழ்ச்சி நிரலுக்குத் தமிழ்மக்கள் ஒருபோதும் ஒப்புதல் வழங்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின்கீழ் வேலணை, உரும்பிராய், நாவற்குழி ஆகிய பகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் நேற்று சனிக்கிழமை (09.09.2023) வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நன்கொடையாளர் நடராஜா குகானந்தன் கலந்துகொண்டு உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

யுத்தம், கொரோனாப் பேரிடர் போன்ற காரணங்களால் ஏற்கனவே பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், அப்பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு முன்பாகத் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொண்டு அவர்களை மோசமாகப் பாதித்துள்ளது. 

இதனைக்கருத்திற்கொண்டே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் கொரோனாப் பேரிடர் காலத்தில் ஆரம்பித்த அற்றார் அழிபசி தீர்த்தல் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணாக்க உழவர் - 2023

வீட்டுத்தோட்டப் போட்டிக்கான விதைகள்

இலவச விநியோகம்

 தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மாணாக்க உழவர் என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவுற்பத்தி, மாணவர்களை மனஅழுத்தங்களில் இருந்து விடுவித்தல் ஆகியவனவற்றை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இப்போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தற்போது இலவசமாக விதைப்பொதிகளை வழங்கி வருகின்றது.

இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் யாழ்ப்பாணம், அரசடிவீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தையும், விதைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இம் மாதம் 16, 17, 18 ஆகிய திகதிகளில் தினமும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை பெற்றோர் சகிதம் வந்து மாணவர்கள் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் சிறப்பாக வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்பவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

- பாராளுமன்றில் பதின்மூன்று -

தமிழர்களுக்குத் தலையையும்  சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும்

ரணில் விக்கிரமசிங்கவின் விலாங்குத் தந்திரம் 

ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால்,  மிகவும் நாசூக்காக நாடாளுமன்றத்துக்கு அதனைக் கொண்டு சென்றிருப்பதோடு 13 தொடர்பாக தமிழர் தரப்புக்குச் சாதகம் போலக் காட்டும் சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறார்.  ஆனால் இப்பரிந்துரைகள் எதையும் சிங்களவர்கள் மிகப்பெரும்பான்மையாக உள்ள பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தும் பாராளுமன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பது தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டுகின்ற அவரின் விலாங்குத் தந்திரமே ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது பற்றி  ஆலோசனைகளைச் சமர்ப்பித்திருப்பது தொடர்பாக பொ. ஐங்கரநேசன்  வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாணசபைச் சட்டங்களில் உடனடியாகச் சில மாற்றங்களைச் செய்து விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தவுள்ளார் என்ற தோற்றத்தைத் தனது பாராளுமன்ற உரையின்போது வெளிப்படுத்தியிருக்கிறார். மாகாணசபைச் சட்டம் நடைமுறைக்கு வருவதோ, மாகாணசபைத் தேர்தல் நடைபெறப்போவதோ உடனடிச் சாத்தியம் இல்லாதவை. உள்ளூராட்சித் தேர்தலையே நடாத்தவிடாமல், வேட்புமனுத் தாக்கல் செய்த பின்பும் பல தந்திரங்களைச் செய்து தேர்தலைக் காலவரையின்றி ஒத்திப்போட்ட ரணில் விக்கிரமசிங்க மாகாணசபைத் தேர்தலை நடாத்துவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறிவிலித்தனம் மாகாணசபைச் சட்டங்களில் திருத்தங்கள் செய்து தமிழ்மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்வார் என்று நினைப்பது அதைவிட அறிவிலித்தனமானது

ரணில் விக்கிரமசிங்க  மாகாணசபை விவகாரத்தைக்  கையிலெடுத்திருப்பதன் முதலாவது நோக்கம் மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு கோரும் இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதாகும். இரண்டாவது நோக்கம், ஐனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடாத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் தான் ஜனாதிபதியாக நீடிப்பதை  உறுதி செய்வதாகும்.  ரணில் தீர்வு தருவார் என்ற நம்பிக்கையைத் தமிழ்மக்களிடையே ஏற்படுத்தி அவர்களின் வாக்குகளைக் கபளீகரிப்பதும், மாகாணசபை விவகாரத்தைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு சென்று அதனை நிறைவேற்ற முடியாமல் செய்வதன் மூலம் சிங்கள மக்களினது வாக்குகளை வாரிச் சுரட்டுவதுமே அவரது இலக்குகளாகும். தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விலாங்குத்தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை மனஅழுத்தங்களில் இருந்து மீட்க

வீட்டுத்தோட்டம் சிறந்த பரிகாரமாக அமையும்

 மாணாக்க உழவர் நிகழ்சியில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு 

எமது மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மனஅழுத்தங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே அவர்களால் சரிவரக் கற்றலை மேற்கொள்ள முடியவில்லை. போதை, வன்முறை என்று சமூகப்பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் ஒருசாரார் தற்கொலை முடிவை நோக்கியும் செல்கிறார்கள். இவர்களை மனஅழுத்தங்களில் இருந்து விடுவிக்க வீட்டுத்தோட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துவதுதான் சிறந்த பரிகாரமாக அமையும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர்  திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விதைப் பொதிகளையும்  செயன்முறைப் பயிற்சிகளையும் வழங்கும் நிகழ்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.08.2023) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டி உள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வீட்டுத்தோட்டங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தின் முதற்படி. வீட்டிலேயே எங்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதோடு வீட்டுக்கழிவுகளைப் பசளையாகப் பயன்படுத்துவதால் நஞ்சற்ற உணவையும் நாம் பெறக்கூடியதாக உள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும், உணவு நெருக்கடிக்கும் வீட்டுத்தோட்டம் சிறந்த தீர்வாக அமையும். இந்த அனுகூலங்களைவிட மேலான அனுகூலமாக  வீட்டுத்தோட்டங்கள் மனதை அலைபாயவிடாமல் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் உதவுகின்றது.

தோட்டங்களில் மண்ணைக் கைகளால் அளையும்போது, மண்ணில் உள்ள பக்றீரியங்களைத் தொடும்போது உடலில் செரற்ரோனின் என்ற ஓமோன் சுரப்பது தூண்டப்படுகிறது. ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை இது. செரற்ரோனின்  மனச்சோர்வைக் களைந்து, மனஅழுத்தங்களில் இருந்து விடுபடவைத்து, மனஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இரசாயனம் ஆகும். இயற்கையாக செரற்ரோனின் உருவாகுவதைத் தூண்டும் வீட்டுத்தோட்டச் செய்கையில் மாணவர்களை ஈடுபடுத்தினால் செயற்கையாக உற்சாகத்தைத் தூண்டும் ஆபத்தான போதைக்கு அவர்கள் அடிமையாக மாட்டார்கள்.

ஆசிரியர்கள் வீட்டுத்தோட்டம் என்றால் அது விவசாயம் பயிலுகின்ற மாணவர்களுக்கு மாத்திரம்தான் என்று நினைக்கிறார்கள். பெற்றோர்கள் வீட்டுத்தோட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களின் படிப்புப் பாழாகிவிடும் என்று கருதுகிறார்கள். இந்த மனோநிலைகளில் மாற்றம் வேண்டும். பயிர்களைப் பீடிக்கும் பூச்சிகளால் பயிர்களுக்கு மாத்திரம்தான் சேதம். ஆனால், புத்தகப் பூச்சிகளாகவே வளரும்  மாணவர்கள் தமக்கும் சமூகத்துக்கும் கேடாகவே அமைவார்கள். இதைப் புரிந்துகொண்டு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை வீட்டுத்தோட்டங்களில் ஈடுபடவைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர் - 2023

விதைப்பொதிகள் விநியோகமும் செயன்முறை விளக்கமும்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.08.2023) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பிரதித்திட்டப் பணிப்பாளர் வி விஜிதன் , விவசாயப் போதனாசிரியர் ச.பாலகிருஸ்ணன் ஆகியோர் வீட்டுத்தோட்டச் செயன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும்,ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் அனைவருக்கும் வீட்டுத்தோட்டத்துக்கான பத்து வகையான விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும்; தொடர் மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, உணவுக்கான நெருக்கடி, இயற்கைப் பசளைகளின் மூலம் நஞ்சற்ற உணவு உற்;பத்தி, பாரம்பரிய விதைகளின் பாதுகாப்பு, மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக் கழிக்க வேண்டிய அவசியம் ஆகிய பல காரணங்களைக் கருத்தில் கொண்டே மாணாக்க உழவர் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டிலிருந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில்

கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை

ஆடிப்பிறப்பு விழாவில் ஐங்கரநேசன் ஆதங்கம்

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை, இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதற்கெனக் கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது.; போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்பாடு குறித்த உணர்வுபூர்வமான பிரக்ஞை மக்களிடமும் ஏற்படுத்தப்பட்டது. தென்னிலங்கையிலும் தமிழ்-சிங்கள கலைக்கூடல் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லாமல் போய்விட்டது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா நேற்று திங்கட்கிழமை (17.07.2023) அராலியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆடிப்பிறப்பு தமிழ் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு பண்டிகை. பன்மைத்துவம் மிக்க ஆரோக்கிய உணவைக் கூடிப்பகிர்ந்துண்ணும் உணவுப் பண்பாட்டை எடுத்தியம்புகின்ற ஆடிப்பிறப்பு நாளில் பாடசாலைகளில் விடுமுறை வழங்கிய காலம் ஒன்றிருந்தது. ஆனால், இன்று “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்று பாடிய சோமசுந்தரப் புலவரின் பாடல் மாத்திரம்தான் மிஞ்சியுள்ளது. பண்பாட்டுச் செயற்பாடுகளுக்காகத் தனியார்கல்வி நிறுவனங்களிடம் விடுமுறையைக் கோருகின்ற நாம் பாடசாலைகளில் ஆடிப்பிறப்புக்கான விடுமுறையை மீளப் பெறுவதற்கும் முன்வரவேண்டும்.

சிங்களபௌத்த மேலாதிக்கத்தினாலும் உலகமயமாக்கலினாலும் ஒருபுறம் தமிழ்ப் பண்பாடு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் தமிழ் மக்களினது உதாசீனத்தாலும் தமிழ்ப் பண்பாடு அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேடைகளில் தமிழ்த் தேசியம் குறித்து முழங்கும் எங்களது அரசியல் கட்சிகள் எதுவும்; தேசியத்தில் பண்பாட்டின் வகிபாகம் குறித்துக் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. பண்பாட்டை உள்வாங்காத தேசியம்; ஒருபோதும் முழுமை பெறாது. அது உள்ளீடற்ற கொழுக்கட்டை போன்றதே என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசியம் பற்றி அரசியல்வாதிகள் அதிகம் பேசினாலும் அது மக்களிடம்தான் உள்ளது. மக்களே அதனை அடைகாக்கிறார்கள். ஓர் இனத்தை மற்றைய இனங்களிடமிருந்து வேறுபிரித்துக்காட்டும் தனித்துவமான வாழ்வியல் முறைமையே தேசியமாகும். இதில் முதுகெலும்பு போன்று பண்பாடு வகிக்கும் பாத்திரம் பிரதானமானது. இதனாலேயே ஓர் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் முதலில் பண்பாட்டைச் சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இதனை எதிர்கொள்வதற்கு நாம் கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயற்பாடுகளை அரசியலுடன் சேர்த்து ஒர் பேரியக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா

அராலியில் சிறப்பாக இடம்பெற்றது

 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று திங்கட்கிழமை (17.07.2023) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக அராலியில் கொண்டாடியுள்ளது. அராலி களவத்துறை விளையாட்டு மைதானத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன் தலைமையில்  நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், துணைப் பொதுச் செயளாளர் சண். தயாளன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

களவத்துறை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி மு.அகநிலாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் பரிமாறப்பட்டதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. விழா நிறைவில் விளையாட்டு மைதானத்தில் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழர்களுக்கே உரித்தான ஒரு பண்பாட்டு அடையாளமான ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் தற்போது அருகிவந்துள்ளன. இந்நிலையில், மீளவும் அதனை வெகுசனமயப்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறம் கிராம மட்டத்தில்  பொதுமக்களுடன் இணைந்து ஆடிப்பிறப்பைச் சிறப்பான முறையில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.07.2023) நாவற்குழி வடக்கு மற்றும் அராலி மேற்கு ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் அடங்கிய இப்பொதிகளைக் தமிழ்த்;தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அப்பகுதிகளுக்குச் சென்று வழங்கிவைத்துள்ளார்.

ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்கள் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பனைஅபிவிருத்தி வாரம்  மாகாணசபையின் ஏற்பாடு

கைவிடவோ மாற்றியமைக்கவோ  திணைக்களத்துக்கு அதிகாரமில்லை

பொ.ஐங்கரநேசன் கண்டனம்

வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சு கூடடுறவுத் திணைக்களத்தையும் பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களையும்; பனை அபிவிருத்திச்சபையையும் இணைத்து ஆண்டுதோறும்  யூலை 22 தொடங்கி 28 வரையான ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனைஅபிவிருத்தி வாரமாக 2015ஆம் ஆண்டிலிருந்து மிகச்சிறப்பாகக்  கொண்டாடி வந்துள்ளது.  ஆனால், கடந்த சில வருடங்களாகப்  பனை அபிவிருத்தி வாரத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் அதனைக் கொண்டாடாமல் தவிர்த்தோ அல்லது மாற்றியமைத்தோ  மாகாணக் கூட்டுறவுத் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது பனைஅபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதனைக் கைவிடவோ, மாற்றியமைக்கவோ கூட்டுறவுத் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

வடமாகாணக் கூட்டுறவுத் திணைக்களம்  ஆடிப்பிறப்பை முன்னிட்டு யூலை 14 தொடங்கி 16 வரையான மூன்று நாட்கள் நல்லூர் கிட்டு பூங்காவில் பனையுற்பத்திப் பொருட்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்மக்களின் பண்பாட்டைப் ‘பனைப் பண்பாடு’ என்று சொல்லும் அளவுக்கு உணவு முதல் உறையுள் வரை எமது வாழ்வியலில் பிரதான இடம் பிடித்துவந்த பனைவளம் தற்போது எமக்கு அந்நியமான ஒரு வளமாக மாறியுள்ளது. பனைப் பொருட்களின் பயன்பாடு அருகிவருவதன் காரணமாக, இப்பனை வளத்தைத் தொழில் மூலாதாரமாகப் பயன்படுத்தி வந்த மக்கள் திரளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அத்தோடு, போரக்காலத்தில் பெரும் அழிவைச் சந்தித்த எமது பனைவளம் போருக்குப் பின்னரும் அனுமதியின்றிப் பெருமளவுக்கு அழிக்கப்படுகிறது. இது இயற்கைச் சூழலின் சமநிலையைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது.

இவற்றைக் கருத்திற் கொண்டே பனை வளத்தைப் பெருக்கவும், நவீனகாலத்துக்கு ஏற்பப் பனைப் பயன்பாட்டை நுகர்வோரை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும், இதன்மூலம் பனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் அறிஞர்களினதும் பொதுமக்களினதும் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் தாலகாவலர் அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களின் நினைவு தினமான யூலை 22ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை 2015ம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்கள் பனை அபிவிருத்திச்சபை தோற்றம் பெறுவதற்கு முன்பாகவே தனியொருவராகத் தமிழர் தாயகம் முழுவதும்  பனை விதைகளை விநியோகித்து பனந்தோப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தார். இவர் பனை அபிவிருத்திச் சபையி;ன் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து பனை அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியவர். இவர் ஆற்றிய பணிகளுக்காக அமரத்துவத்தின் பின்னர் இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. தாலகாவலரான அன்னாருக்கு உயரிய கௌரவம் வழங்கும் பொருட்டே வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்துக்குரிய காலப்பகுதியாக, அவரது நினைவு தினமான யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஒப்புதலுடன் உயரிய நோக்குடன் கொண்டாடப்பட்டு வந்த பனை அபிவிருத்தி வாரத்தைத்  தனியே  ஆடிப்பிறப்புக் கூழுக்குத் பனங்கட்டி விற்பதுடன்  சுருக்கிக் கொள்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. இதன் பல்பரிமாணத்தை வடமாகாணக் கூட்டுறவுத் திணைக்களம் புரிந்துகொண்டு அடுத்த ஆண்டிலிருந்தாவது உரிய காலப்பகுதியில், உரியமுறையில் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வரங்குகளோடு மிகச் சிறப்பாகக் கொண்டாட முன்வர வேண்டும். தவறின் தமிழரின் மாண்புமிகு அடையாளமான பனைக்குத் தவறிழைத்த வரலாற்றுப் பிழையைச் சுமக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் சீனித்தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்

பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை! 

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பு, இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய்ச் சிலாகித்து வருகிறது. ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்  என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை {07.07.2023} நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கும்போது திட்டத்தின் பொருத்தப்பாட்டை அறிந்துகொள்ள நீர் அடிச்சுவடு றயவநச கழழவ pசiவெ}  என்ற நீர்த் தேவையே சூழலியற் குறிகாட்டியாக முதலில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கரும்பினதும் சீனியினதும் நீர்அடிச்சுவடு மிகவும் உயர்வானது. ஒரு கிலோ கரும்பை உற்பத்தி செய்வதற்கு 210 இலீற்றர் தண்ணீரும் ஒரு கிலோ சுத்திகரிக்கப்பட்ட சீனியை உற்பத்தி செய்வற்கு 1780 இலீற்றர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கரும்பு வருடம் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டிய ஒரு பல்லாண்டுப் பயிருமாகும். இவற்றின் அடிப்படையில் பேராறுகள் எதுவுமே இல்லாத வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும். நீர்ச்சமநிலையைக் குழப்பி அத்தியாவசிய உணவுப்பயிர்களின் உற்பத்தியிலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஈற்றில் அம்மண்ணைப் பாலையாக்கியும் விடும்.

கரும்பு மிக அதிகளவில் இரசாயன உரங்களையும், பீடைகொல்லி – களைகொல்லி நஞ்சுகளையும் வேண்டி நிற்கும் ஒரு பயிர். தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களால் குளிப்பாட்டப்படும் மண்ணில் நுண்ணங்கிகள் அழிந்து தொடர்ந்து பயிரிடமுடியாதவாறு மண் மலடாகி விடுகிறது. கந்தளாய்ச் சீனித்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டிருப்பதற்குக் கரும்பில் இருந்து இனிமேலும் அதிக விளைச்சலைப் பெறமுடியாத அளவுக்கு நிலம் தரம் இழந்ததும் ஒரு காரணம். விவசாய இரசாயனங்கள் நீரோடு கலந்து குடிநீரையும் மாசடையச் செய்கிறது. வவுனியா ஏற்கனவே சிறுநீரக நோய்களின் ஆபத்து அதிகமாகவுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  விவசாய இரசாயனங்கள் கலந்த குடிநீரை அருந்தியதால் ஏராளமானோர் சிறுநீரகங்கள் செயலிழந்து  அவதிப்படுகின்றனர். இந்நிலையில் கரும்புச் செய்கை வவுனியாவின் நிலத்தினதும் மக்களினதும் ஆரோக்கியத்துக்குப் பெருங்கேடாகவே முடியும்.

கரும்புச் செய்கைக்கும் சீனித்தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்ட காணியின் அளவு வவுனியாவின் மொத்தப்பரப்பில் ஆறு விழுக்காடுக்கும் அதிகம். இந்தப் பாரிய இடத்தைக் காடுகளை அழித்தே பெறமுடியும். மக்கள் போரினால் இடம்பெயர்ந்ததன் காரணமாகக் கைவிடப்பட்ட மேயிச்சல் தரைகளையெல்லாம் அங்கு மரங்கள் வளர்ந்ததைக் காரணங்காட்டிக் காடுகள் என எல்லைகள் போட்ட வனவிலங்குத் திணைக்களம் இப்போது அதே காடுகளை கரும்புச் செய்கைக்கு விடுவிப்பதற்கு இணங்கியுள்ளது. காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படப்போகும் நாடுகளது பட்டியலில் இலங்கையும் அடங்கியுள்ள நிலையில் அதனைக் கருத்திற் கொள்ளாது காடுகளை அழித்து சீனித் தொழிற்சாலையை அமைப்பது குருட்டுத்தனமான முடிவாகும். இது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும்.

சீனித்தொழிற்சாலை சிங்களக் குடியேற்றத்துக்கும் வித்திடும் என்ற சந்தேகமும் உள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் விவசாயத்தை மேம்படுத்தல் என்று சொல்லப்பட்டபோதும் அதன் உள்ளார்ந்த நோக்கம் சிங்களக் குடியேற்றமாகும். அதுவும், குடியேற்றப்படும் இடத்தின் இனவகிதாசாரப்படி இல்லாமல் இலங்கையின் இனவிகிதாசாரத்தின்படியே குடியேற்றங்களை மேற்கொள்வது மகாவலி அதிகார சபையின் எழுதப்படாத அதிகாரம். மகாவலியுடன் இணைக்கப்பட்ட கந்தளாய்க் குளத்தை மையப்படுத்தி நிகழ்ந்த பயிர்ச்செய்கையே தமிழ் நிலமான கந்தளாயை இன்று முற்றுமுழுதாக சிங்களவர்களின் நிலமாக்கியது. வவுனியாவிலும் கரும்புக்கு நீர்பாய்ச்சுகிறோம் என்று சொல்லி வவுனியாவின் குளங்களோடு மகாவலியைத் தொடுத்து நிலங்களை மகாவலி அதிகாரசபை தன்வசமாக்கலாம். மகாவலியில் நீர்வரத்து இருக்கிறதோ இல்லையோ இதனூடாகச் சிங்களக் குடியேற்றம் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் வாழ்வை மேம்படுத்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். ஆனால், வடக்கின் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது எவ்வித்திலும் பொருந்தாத சீனித் தொழிற்சாலையை வரவேற்பது அறிவுடையோரினதோ, தமிழ்த் தேசியப் பற்றாளர்களினதோ செயலாக இருக்காது. நீண்ட நெடிய வலிமிகுந்த தேசிய விடுதபை; போராட்டத்தை முன்னெடுத்த இனம் நாம். இப் போராட்டம் எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வுக்காக மண்ணிண் வளங்களைக் காப்பாற்றி அவர்களிடம் கையளிப்பதையும் உள்ளடக்கியதுதான். மண்மீட்கப் புறப்பட்ட நாம் அம்மண் பாலையாகுவதற்கோ மலடாகுவதற்கோ எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாவற்குழியில் பசுமை அறிவொளி

பசுமை இயக்கத்தின் சூழல்தின நிகழ்ச்சி

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் நேற்று திங்கட்கிழமை (05.06.2023) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழி முத்தமிழ் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை ‘பிளாஸ்ரிக் மாசைத் தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. இக்கருப்பொருளுக்கு அமைவாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு, பங்கேற்ற மாணவர்களுக்கு ‘பிளாஸ்ரிக்கின் பிடியில்’ என்ற கைநூலையும் வழங்கி வைத்தார். அத்தோடு, ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு மாணவர்கள் அனைவருக்கும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்ரிக் மயமாகிறது மனித உடல்

விழித்துக் கொள்ளாவிடில் விபரீதம்

சூழல் தின அறிக்கையில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

எங்கு பார்த்தாலும் பிளாஸ்ரிக் மயமாகிவரும் உலகில் மனித உடலும் பிளாஸ்ரிக் மயமாகிக் கொண்டிருக்கிறது. காற்றிலும் நீரிலும் நிரம்பியுள்ள பிளாஸ்ரிக் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமும் உணவின் மூலமும் மனித உடலினுள் நுழைந்து நுரையீரலிலும் உள் இழையங்களிலும் தேங்கி வருகிறது. இவ்வாறு வாரமொன்றுக்கு 5 கிராமளவுப் பிளாஸ்ரிக் நுண்துகள்கள் மனித உடலைச் சென்றடைந்து கொண்டிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பலநூறு இரசாயனங்களின் சேர்க்கையினால் ஆன பிளாஸ்ரிக் நுண்துகள்கள் தொடர்பாக விழித்துக் கொள்ளாவிடில் சுவாசக் கோளாறுகள் முதல் புற்றுநோய்கள் வரை பல்வேறு விபரீதங்களை எதிர் கொள்ள நேரிடும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் தினம் யூன் 5ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிளாஸ்ரிக் மனுக்குலத்துக்குப் பெறுமதியான பல பயன்களைத் தந்து கொண்டிருந்தபோதும், கூடவே சீர்செய்ய முடியாத பல மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இயற்கைப் பொருட்கள் யாவும் காலவோட்டத்தில் உக்கிக் கரைந்துபோக, செயற்கைப் பிளாஸ்ரிக் மட்டும் அதன் பிரம்மாவான மனிதனிடம் சாகாவரம் வாங்கி வந்துள்ளது. காலன் இல்லாததால் கழிவுகளாக மலைபோலக் குவிந்து சூழலுக்குத் தாங்கொணாத உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று நிலம், நீர், காற்று என்று இயற்கையின் மேனி முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளின் கோரப் பற்கள் ஆழப்பதிந்துள்ளன.

பிளாஸ்ரிக் கழிவுகள் நிலத்தைப் போர்த்தி மண்ணினுள் மழைநீர் இறங்குவதை அனுமதிக்காததோடு காற்றுப்புகுவதையும் தடை செய்கிறது. பிளாஸ்ரிக் கழிவுகளை உயிரினங்கள் உணவோடு சேர்த்தும், உணவென நினைத்தும் விழுங்குவதால் தரையில் யானைகள் முதல் கடலில் மீன்கள் வரை பல மில்லியன் கணக்கான உயிர்கள் ஆண்டுதோறும் அற்ப ஆயுளில் பலியாகி வருகின்றன. பிளாஸ்ரிக் கழிவுகளை எரிப்பதால் வெளிவரும் கொடும் டையொக்சின் வாயு மனிதர்களை மலடாக்கி வருகிறது. தற்போது பிளாஸ்ரிக் கழிவுகள் நுண்துகள்களாக மனித உடலினுள்ளும் தேங்க ஆரம்பித்துள்ளது.

பிளாஸ்ரிக்கின் நல்லாட்சியைவிடச் சமநிலையைச் சீர்குலைத்து இயற்கையைச் சாகடிக்கும் அதன் வல்லாட்சியே மேலோங்கியுள்ளது. இதனாலேயே ஐக்கிய நாடுகள் சபை 2023ஆம் ஆண்டின்  சுற்றுச்சூழல் தினக் கவனக்குவிப்பாகப் ‘பிளாஸ்ரிக் மாசைத் தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. முற்றுகையிட்டிருக்கும் பிளாஸ்ரிக் கழிவுகளில் இருந்து இயற்கையையும் எம்மையையும் உடனடியாக மீட்டெடுப்பது இலேசானதொன்றல்ல. எனினும், அதன் தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவல்ல வியூகங்களையேனும் வகுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

தேவையற்ற பிளாஸ்ரிக் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது எம்முன்னால் உள்ள முதற்தெரிவாகும். இயன்றவரை நீண்டகாலம் பயன்படுத்துவது, கழிக்க முன்னர் இன்னொருமுறை பயன்படுமா என்று சிந்திப்பது, கழிவுகளில் இருந்து பிளாஸ்ரிக்கைப் பிரித்தெடுப்பது போன்ற கழிவு மேலாண்மைகளையும் கையில் எடுக்க வேண்டும். கூடவே, ஒரு நாள் பயன்படுத்தித் தூக்கி வீசும் பிளாஸ்ரிக்குக்கு மாற்றாகக் கடதாசி, துணி, இலைகள் போன்றவற்றினாலான இயற்கைப் பொருட்களுக்குத் தாமதமின்றித் திரும்பவேண்டும். தவறின் பிளாஸ்ரிக் அதனைப் பிரசவித்த மனுக்குலத்தையே விரைவில் தின்று செரித்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் கணக்கெடுப்புக்கான காலக்கெடு - மே 31

பதிவை உறுதிசெய்யுமாறு பசுமை இயக்கம் வேண்டுகோள்

இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் 2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பின் இறுதித் திகதி மே மாதம் 31ஆம் திகதி என அறிவித்துள்ளது. இக்காலப்பகுதிக்குள் கிராம சேவையாளர்கள் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு வீடுகளுக்கு வருகை தராவிடில் வாக்காளர்கள் உடனடியாகத் தங்கள் பகுதிக்குரிய கிராம சேவையாளரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை உதாசீனம் செய்யாது வாக்காளர்கள் அனைவரும் இந்த ஆண்டுக் கணக்கெடுப்பில் தங்கள் பெயர் பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் மகேசன் கஜேந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வாக்காளர் கணக்கெடுப்பில் ஒருதடவை பெயர்களைப் பதிவுசெய்தால் போதுமானது எனக்கருதிப் பலர் தொடர்கணக்கெடுப்புக் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இதனால், புதிய தேருநர் இடாப்பில் அவர்களது பெயர் நீக்கப்பட்டு விடுகிறது. இதைக் கருத்திற்கொண்டு கிராமசேவையாளர்கள் தற்போது மேற்கொண்டுவரும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதிசெய்வது அவசியமாகும். 

இலங்கையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டுவரும் யூன் 01 ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்த இலங்கைக் குடிமகனாகவுள்ள எவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். வாக்காளர்களாகத் தகுதி பெற்றுள்ள புதியவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தேருநர் இடாப்பில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் மாத்திரமே வாக்களிக்கும் உரிமை உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக, 1989ஆம் ஆண்டு யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப் பட்டிருந்தனர். தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததன் காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைவடைந்துள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லுதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களில் மாத்திரம் குறைவை ஏற்படுத்தும் ஒன்றல்ல. மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதி, மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை போன்றவற்றிலும் குறைவை ஏற்படுத்தும். அந்தவகையில், வாக்களிக்கத் தகுதி  பெற்ற அனைவரும் தங்களை வாக்காளராகப் பதிவு செய்தல் ஒரு தேசியக் கடமையாகும்.

எனவே, வாக்காளர்கள் அனைவரும் தாமதமின்றித் தமது கிராமசேவையாளருடன் தொடர்பு கொண்டு இந்த ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பில் தங்கள் பெயர் இடம்பெறுவதைத் தவறாது உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (18.05.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அதன் தலைமைப் பணிமனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. போரில் புதுமாத்தளனில் தனது கணவனைப் பலிகொடுத்த திருமதி தக்சாயினி அருள்நேசநாதன் நினைவுத்தீபம் ஏற்றி வைக்க, போரில் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் இடம்பெற்றது.

இக்கஞ்சி வழங்கல் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொதுச்செயலாளர் ம. கஜேந்திரன், துணைப் பொதுச்செயலாளர் சண்.தயாளன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். வீதியால் பயணித்தோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் வாங்கி அருந்திச்சென்றனர்.

2009ஆம் ஆண்டு இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனவழிப்பை நினைவுகூரும் முகமாக மே 12 தொடங்கி 18 வரையான நாட்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகத் தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாட்களில், போரின் இறுதிக்காலத்தில் முற்றுகைக்குள் ஆளாகியிருந்த தமிழ் மக்களின் ஒரேயொரு உயிர்காப்பு ஆகாரமாக விளங்கிய கஞ்சி முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. போர்க்காலத்தில் தமிழ் மக்கள் பட்ட வதைகளை நினைவிற்கொள்ளும் முகமாகவும், பட்ட வலிகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் விதமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு ஒரு குறியீடாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கந்தரோடையில் புதிதாக விகாரை அமைக்கப்படுவதற்கு 

எதிரான போராட்டம்

இலங்கை அரசாங்கம் வடக்குக்கிழக்கு எங்கும் பௌத்த விகாரைகளைப் புதிதாக அமைத்து வருவதன் தொடர்ச்சியாகக் கந்தரோடையிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கந்தரோடையில் தமிழ்ப் பௌத்தத் துறவிகளின் சமாதிகள் காணப்படும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கொள்வனவு செய்து விகாரை கட்டுவதற்கு வழங்கியுள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பௌத்தத் துறவிகளின் சமாதிகள் அமைந்துள்ள இடத்திலும் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டு இராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தமிழர் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் பௌத்த மயமாக்கலைக் கண்டித்தும் கந்தரோடையில் புதிதாக விகாரை அமைப்பதை நிறுத்துமாறு கோரியும் பொது அமைப்புகள், பிரதேச மக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் ஒருங்கிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) ஆர்ப்பாட்டப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

தமிழ்ப் பௌத்தத் துறவிகளின் சமாதிகள் அமைந்துள்ள இடத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட போராட்டக்காரர்கள் புதிதாக விகாரை அமையவுள்ள இடத்திற்குச் சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டிருந்தது.

வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும்

ரணிலின் தந்திரத்துக்குப் பலியாக வேண்டாம்

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள்

இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பேன் என்று கூறிவருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். முதற்கட்டமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மே 09ஆம் திகதி பேசவுள்ள ஜனாதிபதி, மே 11, 12, 13ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான அழைப்பையும் விடுத்திருக்கிறார். வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும் ரணிலின் இந்தத் தந்திரத்துக்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலியாக வேண்டாம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசுவதற்கு விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி விடுக்கும் அழைப்பொன்றைத் தமிழர்தரப்பு நிராகரிக்க முடியாது. அவர் தீவிர சிங்கள-பௌத்த மேலாதிக்க நிலைப்பாடு உடையவராக இருப்பினுங்கூட நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அவருடன் பேசியே ஆகவேண்டும். ஆனால், தனித்தனிக்கட்சிகளாக அல்லாது அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் உள்வாங்கி ஒருமித்த தமிழ்த்தேசியத்தின் குரலாகப் பேச்சுவார்த்தை மேடையில் அமருதல் வேண்டும். அப்போதே பேச்சுவார்த்தையை வலுவுடன் எதிர்கொள்ளமுடியும்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை வடக்குக்கான பிரச்சினையாகத் தென்னிலங்கை உருவகித்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்களிலும் அரச ஆதரவு நிலைபாடு உடையவர்களே அதிகம். இந்நிலையில் பேச்சுவார்த்தை மேடையில் வடக்கும் கிழக்கும் தனித்தனியாகப் பங்கேற்பது தமிழ்த்தேசியத்தின் குரலைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும்.

ரணில் விக்கிரமசிங்க தந்திரமான அரசியல் நகர்வுகளுக்கு மிகவும் பிரசித்தமானவர். நல்லாட்சிக் காலாத்தில் அவர் ஆரம்பித்த தீர்வுத்திட்டம் பிசுபிசுத்துப்போனதையும் நாடறியும். அவரது தற்போதைய பேச்சுவார்த்தைக்கான அழைப்பின் பின்னால் இருக்கக்கூடிய அபாயங்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழர்தரப்பில் தாமே பெரும்பாண்மை என்ற இறுமாப்பைப் புறந்தள்ளி, ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் கருத்துகளையும் உள்வாங்கித் தனது சந்திப்பின்போது பிரதிபலிக்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது சந்திப்பில் ஜனாதிபதி வடக்குக்கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனியாகச் சந்திக்கும் அழைப்பை அடியோடு நிராகரிக்க வேண்டும். வடக்குக்கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்திப்பதற்கான கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்க வேண்டும். தவறின், ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரத்துக்கு முன்னால் மீண்டும் தோற்றவர்களாகிவிடுவோம். மீண்டும் மீண்டும் தவறிழைத்த தரப்பாகவே தமிழர்கள் இருந்ததாக வரலாறும் பதிவுசெய்ய நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டியில் சட்டவிரோத புத்தவிகாரையை அகற்றக்கோரிப் போராட்டம்


யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தையிட்டியில் இராணுவம் நூறு அடி  உயரமான  புத்தவிகாரை ஒன்றை அமைத்து வருவதற்கு எதிராக இன்று அப்பகுதி மக்களும்  அரசியல் தரப்பினரும்   இணைந்து  கவனயீர்ப்புப்  போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்,கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகப்  பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தியிருக்கும்  இராணுவம்  அவர்களிடம் காணிகளை விடுவிக்காது சட்டவிரோதமான முறையில்  அப்பகுதியில் புத்தவிகாரையை அமைத்துவருகின்றது. 


பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே மீளவும் ஒப்படைக்கக்கோரியும், புத்தவிகாரையை உடனடியாக அகற்றக்கோரியும் இப்போராட்டம்  விகாரைக்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இப்போராட்டத்தை   வெசாக் தினமான ஜூன் 5ஆம் திகதிவரை தொடர்ந்து முன்னெடுப்பதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பைத்தெரிவிக்கும் முகமாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட  காணிச் சொந்தக்காரர்களுக்கும்   பொதுமக்களுக்கும்  ஆதரவைத் தெரிவுக்கும் முகமாகவும்  தமிழ்த்தேசியப் பசுமைஇயக்கமும் இப்போராட்டத்தில்  கலந்து கொண்டிருந்தது.

நல்லூரில் 

எழுச்சி பூர்வமாக இடம்பெற்ற

பசுமை இயக்கத்தின் 

செம்பசுமை மேதினம்

 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக் கூட்டம் நேற்;று திங்கட்கிழமை (01.05.2023) நல்லூரில் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா.பார்த்தீபன் தலைமை தாங்கினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ,அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ,தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தார்கள்.

 

உலகம் பூராவும் கொரோனாப் பெருங்கொள்ளை நோய் தொழில் முடக்கத்தை ஏற்படுத்திப் பொருளாதாரத்தைப் பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில்,காலநிலை மாற்றம் காரணமாக விரைவில் பில்லியன் கணக்கானோர் தொழில் வாய்ப்பை இழக்க வேண்டி ஏற்படுமென்று ஐக்கியநாடுகள் சபை எச்சரித்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தொழிலாளர் தினத்தைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பே உழைப்புக்கான உத்தரவாதம்’ என்ற கருப்பொருளில் செம்பசுமை மேதினமாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக்கான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு

எமது பெற்றோர்களே தடையாக இருக்கிறார்கள்

ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் மட்டுமே ஒரு மாணவனை முழு மனிதனாக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. ஆனால், ஒரு மாணவனை முழு மனிதனாக்கும் வாழ்க்கைக்கான கல்வி வகுப்பறைகளுக்கு வெளியேயே இருக்கிறது. துரதிஸ்டவசமாக அந்தக் கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு எமது பெற்றோர்களே தடையாக இருக்கிறார்கள் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (29.04.2023) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனுபவத்தைவிட சிறந்த ஆசான் உலகில் வேறெதுவும் இருக்கமுடியாது. ஆனால், அந்த அனுபவத்தைப் பெறமுடியாதவாறு பாடசாலை வகுப்பறைகளுக்குள்ளும் தனியார் கல்வி நிறுவனங்களின் கொட்டகைகளுக்குள்ளுமே எமது மாணவர்களின் பெரும்பொழுது கழிகிறது. பிறநிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்துகொண்டால் கல்வி பாதிக்கப்படும் என்றே பெற்றோர்கள் கருதுகிறார்கள். இதனால், உயர்ந்த சித்திகளைப் பெற்றிருந்தாலுங்கூட கல்வியை முடித்து வெளியே வரும் மாணவன் வாழ்க்கையில் தடுமாற நேரிடுகின்றது.

வாள்வெட்டும், போதைப்பொருள் பாவனையும் என்று எமது பண்பாட்டுச் சூழல் சீர்கெட்டிருக்கும் நிலையில் பிள்ளைகளை வெளியே அனுப்பினால் அவர்களும் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். வெளியே மாத்திரமல்ல ; இன்று பிரபல்யமான பாடசாலைகளில் பயிலுகின்ற மாணவர்கள்கூட போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் பிள்ளைகள் மீது சந்தேகம் கொள்ளாமல் அதேசமயம் அவர்களைக் கண்காணித்தவாறு இதர நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

வகுப்பறைகளுக்கு வெளியே இயற்கை எங்களுக்கு ஏராளமான விடயங்களைக் கற்றுத் தருகிறது. இயற்கையைப் புரிந்துகொண்டதும் இயற்கையின் மீதான நேசிப்புத் தானாகவே ஏற்பட்டுவிடும். இயற்கையை நேசிப்பவர்கள் சுற்றுச்சூழலைச் சீரழிக்காதவாறு இயற்கையுடன் இசைந்து வாழ்வதற்குக் கற்றுக்கொள்வார்கள். அதுமாத்திரமல்ல, மனிதன் உட்பட சகல உயிரிகளையும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். சகமனிதர்கள் மீதான நேசமே இன்று சமூக வன்முறைகளைக் களைவதற்கான தீர்வாகவும் அமையும்  என்றும் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சி

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (29.04.2023) நல்லூரில் நடைபெற்றது. மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் பற்றிய அறிவையூட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழற்பாதுகாப்பில் பங்கேற்க வைக்கும் நோக்குடனும், அவர்களின் பன்முக ஆளுமையை விருத்திசெய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்ற பெயரில் மாணவர்களுக்கான வலுவூட்டல் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே நல்லூரில் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

ஓய்வுநிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பின் தாபகத் தலைவருமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிறப்புரைஞர்களாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் ச.சர்வராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

ஓய்வுநிலை ஆசிரியர் பா. காசிநாதன் வரவேற்புரையாற்றியிருந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். கலந்துகொண்டிருந்த மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அனுசரணையுடன் சூழல் விழிப்புணர்வுக் குறிப்பேடுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பூமி தினத்தில் வெப்ப அலைகளின் மூலம்

பூமி எமக்கான செய்தியை அனுப்பியுள்ளது

-பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

பூமியின் வளங்களை வருங்காலச் சந்ததிகளுக்காகப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி பூமி தினம் கொண்டாடப்படுகிறது. பூமி தினம் மட்டுமல்ல ; சுற்றுச்சூழல் தினம், உயிர்ப்பல்வகைமை தினம், தண்ணீர் தினம், மண் தினம், சமுத்திரங்கள் தினம், வனவிலங்குகள் தினம், மலைகள் தினம், காடுகள் தினம், ஓசோன் பாதுகாப்புத் தினம் என்று சர்வதேச நாட்காட்டியில் ஏனைய விடயங்கள் தொடர்பான தினங்களைவிடப் பூமியைப் பாதுகாப்பதற்கான தினங்களே அதிகம். எனினும் எமது தலைமுறைக்குக்கூட மிச்சம்மீதி எதையுமே விட்டுவைக்காத வேகத்தில் வளங்களை நாம் சுரண்டி வருகிறோம். இவற்றுக்கான எதிர்வினைகளைப் பூமி அவ்வப்போது ஆற்றிவருகின்றபோதும் நாம் கண்டுகொள்வதாக இல்லை. இந்தப் பூமி தினத்திலும் வெப்ப அலைகளின் மூலம் பூமி 'இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்' என்று எமக்கான வலுவான செய்தியை அனுப்பியுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூமி தினம் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள (22.04.2023) ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பூமியின் மத்திய கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள தென்னாசிய நாடுகளில் கோடைகால மாதங்களில் அதிக வெப்பநிலை நிலவுவது வழமை. ஆனால், அண்மைய வருடங்களில் இக்காலப்பகுதியில் வழமைக்கு மாறாகத் தாங்கொணாத வெப்பம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடந்த ஒரு நூற்றாண்டின் மார்ச் மாதங்களில் நிலவிய வெப்பநிலையைவிட மிகக் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மார்ச் தொடங்கி மே மாதம் வரையில் 280 தடவைகள் வெப்ப அலைகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்த ஆண்டும் சித்திரையில் கடந்த ஒரு நூற்றாண்டின் சித்திரை மாதங்களில் நிலவியதைவிட கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்ப அலைகளின் தாக்குதலுக்கு இலங்கையும் தப்பவில்லை.

தாக்குகின்ற வெப்பஅலைகளின் எண்ணிக்கையும் அவற்றின் சூட்டுத்திறனும் அண்மைய வருடங்களில் அதிகரித்து வருவதற்குப் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதே பிரதான காரணமாகும். நாம் பெற்றோலியப் பொருட்களை அளவுகணக்கின்றி எரித்துத்தள்ளுவதும், கரிக்காற்றை உறிஞ்சவேண்டிய காடுகளை வரம்பின்றி அழித்துத்தள்ளுவதுமே பூமி சூடாகி வருவதற்கான காரணங்களாகும். காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான குழு இன்னும் இருபது வருடங்களில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5பாகை செல்சியஸ் அளவால் அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறது. இது வருங்காலங்களில் நாம் வெப்ப அலைகளின் தாக்குதல்களுக்கு மேலும் மிகமோசமாக ஆளாகவுள்ளோம் என்பதற்கான எச்சரிக்கையாகும்.

வெப்ப அலைகள் எமது இதயம், நுரையீரல், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, வெப்பவாதத்துக்கு ஆட்படுத்தி மரணத்துக்கும் இட்டுச்செல்கிறது. பூமியை வெப்பப்படுத்தி எம்மில் நாமே எரிதணலைக் கொட்டுகிறோம் என்பதற்கும் அப்பால், பூமியின் ஆரோக்கியத்திலும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். பூமி சூடாகுவதால் பனி மலைகள் உருகிக் கடல் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. சூறாவளிகளின் தாக்குதிறன் மூர்க்கமாகி வருகிறது. ஒருபுறம் வறட்சி வாட்ட இன்னொருபுறம் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. உயிர்ப்பல்வகைமை அழிய ஆரம்பித்துள்ளது. பூமி வெப்பஅலைகளின் மூலம் விடுத்திருக்கும் செய்தியை நாம் உணர்ந்து இயற்கையோடு இசைந்து வாழ இப்புவி தினத்திலாவது உறுதியேற்போம் தவறின், ஒட்டுமொத்தப் பூமியின் அழிவுக்கும் நாமே காரணமாகி விடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். 

குரங்குகளின் ஏற்றுமதி -

விவசாய அமைச்சர் துறைசார் அறிவு இல்லாததால் 

தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்

ஊடகவியலாளர் சந்திப்பில் (21.04.2023) பொ. ஐங்கரநேசன்

342445982_1223297941907767_5616457699923033318_n.mp4

குரங்குகளின் ஏற்றுமதி குருட்டுத்தனமான முடிவு

சூழல் விரோதமானதும் சாத்தியம் இல்லாததும்

- ஐங்கரநேசன் சாடல்

குரங்குகளினால் விவசாயத்தில் ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் செங்குரங்குகளைச் சீனாவின் மிருகக்காட்சிச் சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்ததையடுத்துப் பலத்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, கொழும்பு சீனத்தூதுவராலயம் இவ்வாறானதொரு கோரிக்கையைத் தாம் முன்வைக்கவில்லையெனத் தற்போது அறிவித்துள்ளது. சீனாவின் தனியார் விலங்குப் பண்ணையொன்றின் எழுத்துமூல கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி முடிவெடுத்த விவசாய அமைச்சும் சுருதி இறங்கி முதற்கட்டமாக ஐந்நூறு குரங்குகளை அனுப்ப இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இம்முடிவு குருட்டுத்தனமானதும் சூழல் விரோதமானதும் நடைமுறைச் சாத்தியம் இல்லாததும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சாடியுள்ளார்.

இலங்கையில் இருந்து சீனாவுக்குக் குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள (20.04.2023) ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அழிந்துவரும் காட்டுயிரிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்படிக்கையைச் சீனா ஏற்றுக் கொண்டிருப்பதால் குரங்குகளின் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்றும் சீனத் தூதுவராலயம் தெரிவித்திருக்கிறது. ஆனால், சட்டபூர்வமான அனுமதி இல்லாத நிலையிலும்; குரங்குகள் உட்பட அழிந்துவரும் பல காட்டுயிரிகளின் மிகப்பெரும் கறுப்புச்சந்தையாக இன்றளவும் சீனாவே இயங்கி வருகிறது. சீன உணவகங்களில் குரங்கிறைச்சி அதிவிருப்பத்திற்குரிய தெரிவு என்பதாலும் ஆய்வகங்களில் குரங்குகள் சோதனை விலங்குகளாக அதிகம் தேவைப்படுவதாலும் சீனாவில் குரங்குகளுக்கான தட்டுப்பாடு எப்போதுமே நிலவுகிறது. இதனை ஈடுகட்டவே, ஜீவகாருண்யர்களின் தண்டனைகளில் இருந்து தப்ப மிருகக்காட்சிச் சாலைகளுக்கென்ற பெயரில் குரங்குகளின் வர்த்தகத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குரங்குகளால்; பயிர்களின் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஆனால், கடந்த சில தசாப்தங்களாகக் குரங்குகளின் கணக்கெடுப்பு நிகழாத நிலையில் குரங்குகளை ஏற்றுமதி செய்ய முற்படுவது இதற்கான தீர்வாக அமையாது. மாறாக, பின்நோக்கிச் சுடுவது போன்று பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். குரங்குகள் தமது உணவு முறையால் காட்டுவெளியெங்கும் விதைகளைத் தூவி மரங்களை இயற்கையாகவே நடவு செய்கின்றன. இதனால், காடுகளின் கட்டுமானத்தில் மையக்கல் இனங்களாகக் (key stone species) கருதப்படும் இக்குரங்குகள் அழிந்தால் காட்டுப் பரப்பளவு சுருங்கி இயற்கைச்சூழலின் சமநிலை குலையும். காபன் உறிஞ்சிகளான காடுகள் சுருங்குவதால் பாதகமான காலநிலை மாற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டு விவசாயமும் வீழ்ச்சியுறும்.

செங்குரங்குகள் இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஓர் உள்நாட்டு இனம். இதனைச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. சீனாவைப் போன்றே இலங்கையும் அழிந்து வரும் காட்டுயிரிகளின் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் எதனையுமே விற்று டொலர்களாக்கும் முனைப்பில் உள்ள அரசாங்கம் சட்டபூர்வமான முறையில் நடைமுறைச்சாத்தியமற்ற செங்குரங்குகளின் ஏற்றுமதி குறித்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். கூடவே, குரங்குகளினால் விவசாயத்துறைக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் களைய ஒருங்கிணைந்த மாற்றுப் பொறிமுறையொன்றையும் விரைந்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டியில் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சி

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (01.04.2023) சிறுப்பிட்டியில் நடைபெற்றது. மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப்புகட்டி அதனூடாக சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணர்களிடையே பன்முக ஆளுமைத்திறனை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை கிராமங்களில் முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே இப்பசுமை அறிவொளி நிகழ்ச்சி சிறுப்பிட்டியில் அண்ணமா மகேஸ்வரர் ஆலய கலாசார மண்படத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சிறுப்பிட்டி மேற்கின் இணைப்பாளர் கு. மயூதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பைச் சார்ந்த மரியாம்பிள்ளை மரியராசா கலந்துகொண்டிருந்தார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் வகிபாகம் தொடர்பாக உரையாற்றினார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொருளாளர் க. கேதீஸ்வரநாதனும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அனைவருக்கும் சூழல் விழிப்புணர்வு மேற்கோள்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. இதற்கான அனுசரணையை ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கோலாகலமாக நிகழ்ந்தேறிய

பசுமை அமைதி விருதுகள் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று சனிக்கிழமை (18.03.2023) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றுள்ளது.


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் பேராசிரியர் சிவசாந்தினி குகநாதன், வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச. சர்வராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.


மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொதுஅறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 100 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன. முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி மாணவி அபிநயா சிவகரன் தங்கப்பதக்கம் வழங்கியும், இரண்டாம் இடத்தைப் பெற்ற திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி அம்சனா பேரின்பசிவம் வெள்ளிப்பதக்கம் வழங்கியும், மூன்றாம் இடத்தைப்பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி மாணவன் சிவகரன் அபிசாய்ராம் வெண்கலப் பதக்கம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப் பட்டுவரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை இம்முறை முல்லைத் தீவைச் சேர்ந்த திரு. நாகலிங்கம் கனகசபாபதிநேசன் பெற்றிருந்தார். இவருக்கு விருதோடு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் சிறந்த செய்கையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மாணாக்க உழவர்களாகவும், இராசதானியத் திட்டத்தின் கீழ் சிறுதானியச் செய்கையைச் சிறப்பாக மேற்கொண்டவர்கள் மாண்புறு உழவர்களாகவும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்விழா அரங்கு நிறைந்த பார்வையாளர் களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பசுமை அமைதி விருதுகள் 

 2022

பரிசளிப்பு விழா 

 18.03.2023

 தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகளை வழங்கும் பரிசளிப்பு விழா இம்மாதம் 18ஆம் திகதி (சனிக்கிழமை) தந்தை செல்வா கலையரங்கத்தில் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகில்) பிற்பகல் 2.30 மணிக்கு நடை பெறவுள்ளது.


இவ்விழாவில் கடந்த ஆண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொதுஅறிவுப் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்கள் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகளும், 2022ஆம் ஆண்டின் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளர் தால காவலர் மு.க.கனகராசா ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.


மேலும், இவ்விழாவில் 2022ஆம் ஆண்டில் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாணாக்க உழவர் மதிப்பளிப்பும், இராசதானியத் திட்டத்தின்கீழ் சிறுதானியச் செய்கையைச் சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு மாண்புறு உழவர் மதிப்பளிப்பும் இடம் பெறவுள்ளது.


இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் பேராசிரியர் சிவசாந்தினி குகநாதன் அவர்களும் வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ச. சர்வராஜா அவர்களும் கலந்து சிறப்பிக்க வுள்ளனர்.

தேர்தல்களை எதிர்கொள்ளும் திராணியற்ற ரணில்

ஜனாதிபதியாகத் தொடர்வது ஜனநாயகத்துக்குச் சவால்

பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்துவதற்கு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டைகளைப் போட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான காரணமாக நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளையே சுட்டிக்காட்டி வந்தார். இப்போது, இன்னுமொரு காரணமாகத் தேர்தல்கள் ஆணையம் தேர்தல்களை அறிவித்தது சட்டபூர்வமற்றது என்று தெரிவித்திருக்கிறார். புதிதுபுதிதாகக் காரணங்களை அவர் தேடிக்கொண்டிருந்தாலும் உண்மைக்காரணம் தேர்தல் தோல்விப் பயம்தான். தேர்தல்களை எதிர்கொள்ளும் திராணியற்ற ரணில் ஜனாதிபதியாகத் தொடர்வது எதிர்காலத்தில் ஜனநாயகத்துக்குப் பெரும் சவாலாகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல்கள் ஆணையம் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களைக்கோரி ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டன. உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினது ஐக்கியதேசியக் கட்சியும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்களை நடாத்துவதற்கென ஜனாதிபதி தான் நிதியமைச்சர் என்ற வகையில் ஒரு தொகுதி நிதியைத் தேர்தல்கள் ஆணையத்துக்கு விடுவித்தும் உள்ளார். இந்நிலையில், இப்போது தேர்தல்கள் ஆணையம் விடுத்த தேர்தல் அறிவிப்பு செல்லாது என்று அவர் தெரிவித்திருப்பது எந்தக் கீழ்நிலைக்கு இறங்கியேனும் தேர்தல்களை நிறுத்துவதற்கு அவர் தவியாய்த் தவிக்கின்றார் என்பதையே காட்டுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவினது ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு ஆசனத்தையும் வென்றிருக்கவில்லை. தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான போராட்டங்களை மிகத் தந்திரமாகக் கையாண்டு தனது நெடுங்காலக் கனவான ஜனாதிபதிக் கதிரையை எட்டிப்பிடித்துள்ளார். வாராது வந்த அந்தக் கதிரையை விட்டு இறங்குவதற்கு அவர் தயாரில்லை. உள்ளூராட்சித் தேர்தல்கள் தனது ஐக்கியதேசியக் கட்சிக்கும் தன்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலேயே தேர்தல்களுக்குத் தன்னாலான சகல தடைகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

வாக்களிப்பது ஒருவரின் ஜனநாயக உரிமை. அரசின் அதியுயர் பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க வாக்களிப்பு உரிமைக்கு எதிராகத் தேர்தல்களுக்குத் தடை ஏற்படுத்துவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.  உள்ளூராட்சித் தேர்தல்கள் மாத்திரமல்ல; பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களிலும் மக்கள் அவருக்கு எதிராகவே வாக்களிப்பர் என்பதால் இத்தேர்தல்களையும் ஏதாவது காரணங்களைக்காட்டி நிறுத்தவே முயல்வார். இந்த ஜனநாயக விரோதச் செயற்பாடு கடைசியில் சர்வாதிகார ஆட்சியை நோக்கியே இட்டுச்செல்லும். இதற்கு இடங்கொடாது தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்துவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் கட்சி பேதங்களைக் கடந்து போராட முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

போதை அரசியல்வாதிகளால் மக்களுக்குச் 

சரியான பாதையை வழிகாட்ட முடியாது

போதை ஒழிப்பை உள்ளூராட்சி வேட்பாளர்களில் இருந்து ஆரம்பிப்போம்

பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் 

யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்களிடையே போதைப்பொருட் பாவனையும் இதன் விளைவாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. போதையில் மிதக்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கும் இழிவு அரசியலே இங்கு நிலவுகிறது. போதை அரசியல்வாதிகளால் மக்களுக்கு ஒருபோதும் சரியான பாதையை வழிகாட்ட முடியாது. எனவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் போதை வேட்பாளர்களையும் வாக்குகளுக்காக மதுபானங்களை விநியோகிக்கும் வேட்பாளர்களையும் நிராகரிப்போம். போதை ஒழிப்பை உள்ளூராட்சி வேட்பாளர்களில் இருந்து ஆரம்பிப்போம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் பிரதேசசபைத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றது. இதன் பரப்புரைக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.02.2023) கோண்டாவிலில் இடம்பெற்றபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

விகிதாசார முறையில் நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலில் ஒவ்வொரு சபைக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியிடுகின்றார்கள். இவர்கள் நண்பர்களாகவும் அயலவர்களாகவும் உறவினர்களாகவும் இருக்கும்போது யாருக்கு வாக்களிப்பதென்று முடிவெடுக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். தேர்தல்களில் வேட்பாளர்களின் தெரிவு நட்புநிலை சார்ந்தும் உறவுநிலை சார்ந்தும் அமைந்தால் ஒருபோதும் தகுதியான வேட்பாளர்களைத் தெரிவு செய்யமுடியாது. எனவே, மக்கள் தெரிந்தவர்கள், உறவினர்கள் என்ற வட்டங்களையும் தாண்டிச் சிந்தித்துத் தகுதியானவர்களை அடையாளங்கண்டு வாக்களிக்க முன்வர வேண்டும்.

உள்ளூராட்சிச் சபைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் நிறைவேற்றிக் கொடுப்பதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புகள். மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையில் அபிவிருத்திப் பணிகளைத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களினூடாக முன்னெடுப்பதே இவற்றின் முதன்மைப்பணி. இவை தேசிய அரசியலைப் பேசும் களங்கள் அல்ல. ஆனாலும், தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் அரசியல் நிலைப்பாடு பற்றிக் கவனங்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் தெரிவுசெய்யப்படுபவர்கள் தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து ஒருபோதும் வழுவாதவர்களாக இருப்பதை வாக்காளர்கள் உறுதிசெய்யவேண்டும்.

தமிழ்த்தேசிய நிலைப்பாடு மட்டுமே ஒரு வேட்பாளரின் தகுதியாக இருக்கமுடியாது. உள்ளூராட்சிச் சபைகளில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களிற் பலரின் நடவடிக்கைகள் முகஞ்சுழிக்க வைப்பதாகவே இருக்கின்றன. மக்கள் நலன்களைப் புறந்தள்ளி ஆட்சிக்கவிழ்ப்பிலே குறியாக இருப்பவர்களாகவும் சபையிலேயே சாதியம் பேசுபவர்களாவும் இருக்கிறார்கள். வாக்கு வங்கிக்காக வன்முறைக் கும்பல்களை வளர்த்தெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, தெரிவுசெய்யப்படும் ஒருவர் அரசியல் அறம் கொண்டவராகவும் தனிமனித ஒழுக்கம் பேணுபவராகவும் இருப்பதை வாக்காளர்கள் உறுதிசெய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

இலங்கையின் சுதந்திரதினம் இனிமேல்

சிங்களதேசத்துக்கும் இருண்ட கரிநாள்தான்

பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

இலங்கையை விட்டுப் பிரித்தானிய ஆட்சி நீங்கிய நாளைத் தென்னிலங்கைச் சிங்களதேசம் சுதந்திர நாளாகக் கொண்டாடி மகிழ, தமிழர் தேசம் அதனைக் கரிநாளாகவே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழர் தேசத்தை ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் வலுக்கட்டாயமாக முடக்கி வைத்திருக்கும் அரசியலமைப்பில் இந்நாளைச் சுதந்திர நாளாகத் தமிழர்களால் ஒருபோதும் கொண்டாட இயலாது. ஆனால், 75ஆவது சுதந்திர தினத்தைக் கோலாகலமாக இலங்கை அரசாங்கம் கொண்டாடுவதற்குத் தயாராகிவரும் நிலையில் அது சிங்கள தேசத்துக்கும் இருண்ட கரிநாளாகவே அமைந்திருக்கிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுதந்திரதினம் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள தன்சானியா நாடு அண்மையில் தனது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை இரத்துச் செய்துள்ளது. அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தங்கும் இல்லங்களை அமைப்பதற்குப் பயன்படுத்துமாறு அந்நாட்டின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தன்சானியாவைவிட மிகவும் மோசமான பொருளாதாரச் சீரழிவுக்குள் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி உணவின்றித் தவிக்கும் தன் சிங்களதேசத்தைப் பற்றியேனும் சிந்திப்பவராக இல்லை. பெருமெடுப்பில் சுதந்திர தினக்கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறார்.

இலங்கைத் தீவின் பொருளாதாரம் இன்று மீண்டெழ முடியாத படுகுழிக்குள் வீழ்ந்து கிடப்பதற்குத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழர் தேசத்தின் மீது தொடுத்து வந்த யுத்தமே பிரதான காரணம். இதற்கு வித்திட்டது பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுகின்ற இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு முறைமையே ஆகும். பிரித்தானியர்களிடம் இருந்து சிங்களத் தலைமைகளிடம் ஆட்சி கைமாறிய நாளில் இருந்து ஒற்றையாட்சி முறைமையின்கீழ் தமிழர் தேசம் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர்.

போரின் தாங்கொணாக் கடன் சுமையை தமிழ் மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களும் சுமந்து நிற்கின்றனர். தென்னிலங்கை அரசியல் தலைமைகள் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக, தொடர்ந்தும் தமிழர் தேசத்தை அடக்கி ஒடுக்குவதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. தமிழர் தனியானதொரு தேசம் என்று இலங்கையின் அரசியலமைப்பு அங்கீகரிக்காதவரை தமிழர்களுக்குச் சுதந்திரதினம் கரிநாளாகவே இருக்கும். தமிழர்களுக்கு விடிவு கிடைக்காத வரைக்கும் சிங்களதேசமும் இருண்டதாகவே இருக்கும் என்ற நிதர்சனத்தைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால்

உலர்  உணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அற்றார் அழி பசி தீர்த்தல் என்ற திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை [20-01-2023] சங்கானையில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன்  கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

பசுமை இயக்கத்தின் இராசபோசனம்

சிறப்பாக இடம்பெற்ற 

சிறுதானியப் பொங்கல் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொங்கல் விழாவை இம்முறை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடியுள்ளது. இராசபோசனம் என்ற பெயரில் இப்பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை (16.01.2023) மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லாரை வளர்பிறை முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலாநிதி பாலசிவகடாட்சத்தின் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் ‘பயன் அறிந்து உண்க’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி ச.முகுந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் சோ. பத்மநாதன் பங்கேற்றிருந்தார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் பிரதான இடத்தைப் பெற்றிருந்த சிறுதானியங்களை மீளவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்கனவே இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சிறுதானியங்களை மீளவும் முடிசூட்டுவோம் என்ற கருப்பொருளில் அமைந்த இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகள் இலவசமாக வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இம்முறை பொங்கல் விழாவை சாமை அரிசியில் பொங்கிச் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடியுள்ளது.

கலை நிகழ்ச்சிகளும் பாராம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருந்த இப்பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை ;

வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகம்

பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு

கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) ஆகும். தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் கடலட்டை எவ்வாறு இல்லையோ, அதேபோன்றே இந்த ரக அரிசியும் இல்லை. சீனா மனிதாபிமான நோக்கில் அரிசியை வழங்கியிருந்தால் எங்களது பயன்பாட்டிலுள்ள அரிசியைத் தெரிவு செய்து வழங்கியிருக்கும். ஆனால், இந்தச் சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை ; வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் “அற்றார் அழிபசி தீர்த்தல்” என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. நேற்று 29.12.2022 (வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியால் முழு இலங்கையிலும் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் ஏற்கனவே யுத்தத்தினாலும் கொரோனாவாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருகிறது. பசியோடு இருக்கும் மக்களைச் சீன அரிசியை நிராகரிக்குமாறு எவருமே கோரமுடியாதபோதும் இந்த அரிசியிலுள்ள அரசியலை எமது மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீரப்போவதில்லை. இதனாலேயே அரசாங்கம் பயன்படுத்தாமலுள்ள காணிகளை எடுத்து இராணுவத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது உணவு உற்பத்தி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தும்  மறைமுக நோக்கத்தையும் கொண்டுள்ளது. வடக்குக் கிழக்கில் உள்ள வெற்றுக் காணிகளில் எமது பொது அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட முன்வரவேண்டும். பல வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். குத்தகை அடிப்படையிலேனும் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பசியால் ஒரு சிறுவன் இறந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.  இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குமே இழுக்காகும். போர்க்காலத்தில் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தபோதுகூட பட்டினியால் எவரும் இறந்ததில்லை. பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர் பிரிவுரீதியாகப் பட்டினியை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்களின் விபரங்கள் உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே அன்னதானங்கள் என்று இல்லாமல் இக்குடும்பங்களின் சிலநாள் பசியையேனும் போக்க எமது ஆலயங்களும் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடல்சார் வளங்களைச் சூறையாடுவதை நிறுத்துவதே

கடற்கோளில் பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி

பொ. ஐங்கரநேசன் இடித்துரைப்பு 

இலங்கையைக் கடற்கோள் தாக்கியபோது கரையோரச் சூழற்தொகுதிகள் அழிக்கப்பட்ட இடங்களில் உயிர்ப்பலியெடுப்பு உச்சத்தைத் தொட்டது. இதன்மூலம் கடற்கோள் “இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” என்ற வலுவான பாடத்தை எமக்குப் போதித்தது. ஆனால், நாம் பட்டும் திருந்தாத பாவிகளாகவே இன்னமும் உள்ளோம். ஒருபுறம், தொடர்ந்தும் கடல்சார் வளங்களைச் சூறையாடிகொண்டு, இன்னொருபுறம் கடற்கோளில் பலியானவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறோம். கடல்சார் வளங்களைச் சூறையாடுவதை உடனடியாக நிறுத்துவதே கடற்கோளில் பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இடித்துரைத்துள்ளார்.

இலங்கையை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி கடற்கோள் தாக்கி முப்பத்தையாயிரத்துக்கும் அதிகமானோரைப் பலியெடுத்திருந்தது. அதன் 18ஆவது நினைவை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு உரைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

எல்லா வளங்களையும் போன்றே கடல்சார் வளங்களும் மனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் வருங்காலத் தலைமுறைகளுக்குமானவை. இங்கு உண்ணுவதும் உணவாவதும், எடுப்பதும் கொடுப்பதும் இயற்கையின் நியதி. இயற்கைச் சூழலின் சமநிலை விதியும் இதுவே. ஆனால், பேராசை மிக்க மனிதர்கள் கடல் வளங்கள் அனைத்தும் தமக்கு மட்டுமே உரித்தானதென வளங்களைச் சூறையாடுவதற்குத் தலைப்பட்டுள்ளார்கள். இதனால், இயற்கைச் சமநிலை குழம்பி இயற்கைச் சீற்றங்கள் பேரனர்த்தங்களாக வெளிப்பட்டு வருகின்றன.

இழுவைப் படகுகளின் மூலம் கடலடி வளங்களை வாரிச்சுருட்டி வருகின்றோம். கடலகப் பவளப் பாறைகள் துவம்சம் செய்யப்படுகின்றன. கடலட்டைப் பண்ணைகளையும் இறாற் பண்ணைகளையும் இயற்கைக்கு விரோதமான ஒற்றையினக் கடல் வேளாண்மையாக விரிவாக்கி வருகிறோம். கரையோரக் கண்டற்காடுகள் தீமூட்டி அழிக்கப்படுகின்றன. மணல் மலைகள் அனுதினமும் கொள்ளை போகின்றன. இப்படி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் சேர்த்து வாழ்வளிக்க வேண்டிய கடல்சார்ந்த வளங்களை இலாப வேட்கைக்காகத் தொடர்ந்தும் சீரழித்து வருகிறோம்.

அளவுக்கு மிஞ்சிய மீன்பிடியால் கடலில் மீனினங்கள் அருகி வருகின்றன. ஒற்றையினக் கடற்ப் பண்ணைகளால் கடலின் உயிர்ப்பல்வகைமை கேள்விக்குறியாகி வருகிறது. கடலில் நாம் சேர்த்துவரும் இரசாயனங்களால் கரையோரக்கடல் இறக்கத் தொடங்கியுள்ளது. விரோதமான செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ளாத கடல் இன்னுமொருதடவை பொங்கிச் சீறமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடற்கோளின் படிப்பினையை ஏற்று கடற்சூழற்தொகுதிக்கு விரோதமான செயற்பாடுகளை நிறுத்துவோமெனக் கடற்கோள் நினைவுநாளில் உறுதியேற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஈழ மண்ணின் விவசாயிகள் ஒவ்வொருவரும்

தமிழ்த்தேசியப் போராளிகளே!

விதைகள் மீளளிப்பு நிகழ்ச்சியில் 

ஐங்கரநேசன் புகழாராம்

தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு நமது அரசியல்வாதிகளிற் பெரும்பாலானவர்கள் தங்களைத் தமிழ்த்தேசியப் போராளிகளாக வெளிக்காட்டி வருகின்றனர். அவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக இருக்கும்போது, எமது விவசாயிகள் செயல்வீரர்களாக இருக்கிறார்கள். உண்மையில், ஈழ மண்ணின் விவசாயிகள் ஒவ்வொருவரும் தமிழ்த்தேசியப் போராளிகளே!. இவ்வாறு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் விவசாயிகளுக்குப் புகழாராம் சூட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டத்தின்கீழ் விதைகளைப் பெற்ற விவசாயிகளிடமிருந்து அறுவடையின் பின்னர் விதைகளை மீளப்பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை (17.12.2022) அளவெட்டியில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த்தேசியம் என்ற வார்த்தை இன்று அரசியல்வாதிகள் உச்சரிக்கும் ஒரு சொல்லாக மாத்திரமே உள்ளது. தேசியம் என்பது அரசியல்வாதிகளுக்குரிய ஒன்றாக மாத்திரமே மக்களாலும் கருதப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், தேசியம் என்பது மக்களின் வாழ்நிலம், அவர்கள் பேசும் மொழி, அவர்களின் பண்பாடு, அவர்களின் பொருளாதாரம் ஆகிய நான்கு தூண்களில் கட்டப்பட்ட ஓர் உணர்வுபூர்வமான பிரக்ஞை ஆகும். அந்தவகையில், தமிழ்த்தேசியம் என்பது தமிழ் மக்களிடமேயே வாழ்கின்றது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதாரநெருக்கடியால் இலங்கையிலுள்ள விவசாயிகள் அனைவரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பசளைகள் இல்லாததாலும், எரிபொருள் இல்லாததாலும் எந்தவொரு விவசாயியாலும் உரிய அறுவடையைப் பெறமுடியவில்லை. ஆனால், வடக்குக்கிழக்கு விவசாயிகள் ஏற்கனவே போரால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்றவகையில் தற்போது இரட்டிப்பு மடங்காகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

போர் நெருக்கடிகளின்போதும் எமது விவசாயிகள் மண்ணைவிட்டு இடம்பெயரவில்லை. அறுவடை பொய்த்தபோதும் விவசாயத்தைவிட்டு விலகவில்லை. அடுத்தமுறையாவது அறுவடை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வயலில் கண்ணீரோடும் வியர்வையோடும் இன்றளவும் உழுது கொண்டுதான் இருக்கிறார்கள். எமது மக்களின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இன்றையநிலையில் விளைநிலங்களில் நாளாந்தம் போராடும் எங்களின் விவசாயிகளை விடவா வேறு தமிழ்த்தேசியப் போராளிகள் இருக்கப்போகிறார்கள்? என்றும் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நேற்று புதன்கிழமை (14.12.2022) உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. நாவாந்துறை மற்றும் பழம் வீதி ஆகிய பகுதிகளில் இருந்து இக்குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

உலருணவுப் பொதிகள் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் அதன் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை அமரர் பொ. பரமேஸ்வரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பிள்ளைகள் வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருமதி பராசக்தி பரமேஸ்வரன் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் சர்வகட்சிக் கூட்டம் தொடர்பாகத்

தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடி ஆராய்வு

தமிழர் விவகாரத்தைக் கையாளுவதற்குத் தனியானதொரு கட்டமைப்பை உருவாக்க முடிவு


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டிசம்பர் 13ஆம் திகதி தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது குறித்து ஆராய்வதற்காகப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளதும் கூட்டத்தை நடாத்துவதற்கு அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்க்கட்சிகள் எடுக்கவேண்டிய பொது நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.12.2022) தமிழ்த்தேசியக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் ராஜா கிறிம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரனின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், கே. தவராசா, ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க. அருந்தவபாலன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்வில் பா. கஜதீபன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பில் பொ. ஐங்கரநேசன் பங்கேற்றிருந்தார்கள். இவர்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சமூகச் செயற்பாட்டாளர் ம. இரேனியஸ் செல்வின் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகை ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். 

கலந்துகொண்ட பலரும், அரசாங்கம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சர்வதேச உதவிகளைப்பெற்றுத் தணிவிக்கும் உள்நோக்குடனேயே பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. இதில் தமிழர் தரப்பிற்குத் தீர்வு கிட்டப்போவதில்லையாயினும் அரசின் அழைப்பை நிராகரிப்பது அரசாங்கத்துக்கே சாதகமாக அமைந்துவிடும் என்பதால் பங்கேற்பதே பொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்தனர். மேலும், பேச்சு வார்த்தையில் பங்கேற்பவர்கள் உடனடிப் பிரச்சினைகளான காணி அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை வலியுறுத்துவதோடு, அரசியல் அமைப்பில் குறிப்பிட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும் என்பதையும் தெரிவித்தனர். அத்தோடு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வை எட்டக் கால எல்லை நிர்ணயித்துப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும், இது வேறு நாடுகளின் மத்தியஸ்தத்துடன் நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்கள். 

கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த பெரும்பாலானவர்கள், அரச தரப்புகள் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடும்போது மாத்திரம் கூடிக்கலைந்து போகாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கையாள்வதற்கு நிலையானதொரு கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். அது வெறுமனே அரசியல் ரீதியான பிரச்சினைகளை மட்டும் கையாளாமல் பொருளாதாரம், அபிவிருத்தி, பண்பாடு சார்ந்த பல்வேறுபட்ட செயற்பாடுகளிலும் ஈடுபடும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். இதற்கு அமைவாகக் கலந்துரையாடலின் முடிவில், இலங்கை அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட தமிழர்தரப்பின் அரசியல் முன்னெடுப்புகளையும் இதர விடயங்களையும் கையாள்வதற்கான துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களையும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் உள்ளடக்கித் தனியானதொரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

Vaname - Music Video.mp4

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தயாரிப்பில் உருவான பூவன் மீடியாக் கலைஞர்களின் 

வனமே என் இனமே - காணொலிப்பாடல்

வனமே என் இனமே காணொலிப்பாடல் வெளியீடு

வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நேற்று வெள்ளிக்கிழமை (25.11.2022) வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்துள்ள மலர்க்கண்காட்சியின்போதே இக் காணொலிப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைச்செயலாளர் கை. சரவணனின் தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் இசைவாணர் கண்ணன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு காணொலிப்பாடலின் முதல் திரையிடலைத் தொடக்கி வைத்தார். திரையிடலைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் சி. ரகுராம் கருத்துரையை வழங்கினார்.

வனமே என் இனமே பாடலை பூவன் மதீசன் எழுதிப்பாடி நடிக்க ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். இது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஒரு தயாரிப்பாகும்.

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள

சங்கிலியன் பூங்காவின் 

கார்த்திகை வாசம்

ஞாயிறு இறுதி நாள்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு  நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற மலர்க் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மலர் முற்றம்’ என்ற காட்சித் திடல் சங்கிலியன் பூங்காவில் கடந்த 18ஆம் திகதி (வெள்ளிக் கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மலர் முற்றத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர். இதனைத் தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதோடு மலர்ச் செடிகளையும் மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழமைபோன்றே இந்த ஆண்டும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு, ஆலயங்களுக்கும் அதன் பழமுதிர்ச்சோலை திட்டத்தின் கீழ் இலவசமாகப் பழமரக்கன்றுகளை வழங்கி வருகிறது. பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இக் கார்த்திகை வாசத்தில் காட்சிக் கூடங்கள் எதிர்வரும் 27ஆம் திகதிவரை  (ஞாயிற்றுக் கிழமை) தினமும் காலை 8.30 மணிமுதல் முன்னிரவு 7.00 மணிவரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

முள்ளியான் ஆலயங்களில் பழமரநடுகை

தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆலயங்களில் பழமரச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் பழமுதிர்ச்சோலை என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நேற்று ஞாயிற்றுக் கிழமை (20.11.2022) வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியிலுள்ள ஆலயங்களில் பழமரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேவில் முத்துமாரியம்மன் ஆலயம், வேதக்குளம் மயிலிய வைரவர் ஆலயம், உணவத்தை கண்ணகை அம்மன் கோவில், வெற்றிலைக்கேணி செல்வவிநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களின் அறங்காவல் குழுவினரிடம் பழமரக்கன்றுகளைக் கையளித்ததோடு பழமரக்கன்றுகளை நாட்டியும் வைத்தார். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மரநடுகை மாதத்தை முன்னிட்டுக் கார்த்திகை வாசம் என்ற மலர்க்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் முறையாகப் பராமரிக்கக்கூடிய ஆலயங்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பழமரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகைப்பூ தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம்

பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப் புலிகள் தேசியமலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதால் அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம். அந்தவகையில், அது தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.11.2022) ஆரம்பமாகியுள்ளது. கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமான இதன் தொடக்கவிழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லை. அந்த அளவுக்குத் தமிழ்மக்களின் வாழ்வியலில் கார்த்திகைப் பூவுக்குத் தனியானதொரு இடமுண்டு. இதனாலேயே, இந்தியாவில் தமிழ்நாடு தனது மாநில மலராகக் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்துள்ளது. கார்த்திகைப்பூவின் பிரகாசமான மஞ்சள், சிவப்பு வர்ணங்களும் மாவீரர்களை நினைவேந்தும் கார்த்திகையில் மலரும் அதன் பண்பும் மேலதிக காரணங்களாக அமைய, விடுதலைப்புலிகளும் கார்த்திகைப்பூவைத் தேசியமலராக அறிவித்தார்கள்.

விடுதலைப்புலிகள் இப்போது இல்லை என்பதற்காகக் கார்த்திகைப்பூ தமிழ்மக்களின் தேசிய அடையாளங்களில் ஒன்று என்ற அந்தஸ்தை ஒருபோதும் இழந்துவிடாது. அது யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுபோன்று ஆண்டுதோறும் கார்த்திகையில் மொட்டவிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவை காரணமாகவே கார்த்திகை மாத மரநடுகை விழாக்களில் கார்த்திகைப்பூச்சூடுவதை நாம் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். இதன்மூலம் எமது சுற்றுச்சூழல் பற்றியும் வரலாறுபற்றியும் இளையதலைமுறைகளுக்கு நாம் எடுத்தியம்புகிறோம். 

கார்த்திகைப்பூவை அதிலுள்ள நஞ்சு காரணமாக நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். பூக்கும் தாவரங்கள் எல்லாமே ஏதோவொரு அளவில் ஏதோவொரு நஞ்சை எதிரிகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகக் கொண்டிருக்கின்றன. கார்த்திகைப்பூச்செடியிலுள்ள நஞ்சு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் கார்த்திகைப் பூச்செடி பயிரிடப்படுகிறது. பலகோடி ரூபாய்கள் அந்நியச்செலாவணியாகக் கிடைக்கிறது. நாமும் கார்த்திகைச்பூச்செடிகளை பெரும்பண்ணைகளாக அமைக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார். 

பசுமை இயக்கத்தின் பழமுதிர்ச்சோலை

மரநடுகைமாத செயற்றிட்டம் ஆரம்பம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாகப் பழமுதிர்ச்சோலை என்ற திட்டத்தை இந்த ஆண்டு முன்னெடுத்துள்ளது. ஆலயங்கள் தோறும் பழமரங்கள் நாட்டுவோம் என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (07.11.2022) சம்பிரதாயபூர்வமாகப் பூநகரியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி ஸ்ரீ சர்வவிக்கின விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலய அறங்காவலர் குழுவினர்களிடம் பழமரக்கன்றுகளை வழங்கியதோடு, மரக்கன்றுகளை நாட்டியும் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பூநகரி பிரதேசமருத்துவமனை மருத்துவ பொறுப்பு அதிகாரி ஸ்ரீ. ஆனந்தசிறி அவர்களும் கலந்துகொண்டிருந்தார். தொடர்ந்து, பூநகரி ஞானிமடம் கொட்டிலுப் பிள்ளையார் ஆலயம் மற்றும் பூநகரி பிரதேசமருத்துவமனைக்கும் பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாணசபை 2014ஆம் ஆண்டு கார்த்திகையை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. கார்த்திகை மழைவீழ்ச்சிகூடிய மாதம் என்பதோடு தமிழ்த்தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். தமிழ்மக்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்யும் பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளனர். மாவீரர்களை நினைவேந்தும் நாட்களும் இம்மாதத்திலேயே அடங்குவதால் இம்மரநடுகை மாதத்தைப் பொதுஅமைப்புகளும் பொதுமக்களும் ஆண்டுதோறும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல; 

தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்

- பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு


வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டுமுதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு;

பூமி சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளன. கடும் வறட்சி, காலம்தப்பிய பெருமழை, வேகமெடுக்கும் சூறாவளிகள், கடல்மட்ட உயர்வு, உயிரினங்களின் அழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். 

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப்பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள்,  இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப்  போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது தமிழ்த்தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ்மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன்கூடிய ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும். 

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். 

- இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலனோம்புச் செயற்பாடுகளுக்கான நன்கொடை வழங்கல்  -  Donation for Social Welfare Activities 

திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள்

எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம்

ஐங்கரநேசன் ஆதங்கம்

திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் இவற்றால் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள். அவர்களால் மக்கள் மனங்களிலிருந்து நினைவுகளை அழிக்க முடியவில்லை. ஆனால், எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தியாக திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எந்நாளும் நினைவுகூரப்படவேண்டியவர்கள். இது வெறுமனே நினைவுகளை மனத்திரையில் மீட்கும் சடங்குகள் அல்ல. மாறாக, அவர்களின் போராட்ட நியாயங்களையும் போராட்டத் தியாகங்களையும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகின்ற உயிர்ப்பான அரசியற் செயற்பாடுகளுமாகும்.

அரசியற் காரணங்களுக்காகப் போராடி மடிந்தவர்களின் நினைவேந்தல்களில் அரசியல் நீக்கம் செய்வது அவர்களின் போராட்ட நியாயங்களைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். இத்தகைய நினைவேந்தல்களில் இனத்துவ அரசியலைத் தாண்டிக் கட்சி அரசியல் மேலோங்குவது போராட்டத் தியாகங்களைச் சூறையாடுவதாகும். ஆனால், துரதிர்ஷ்டமாகத் தமிழ்த்தேசிய அரசியற் களத்தில் இன்று இவையே அதிகம் நிகழ்ந்தேறுகின்றன. 

நினைவேந்தல் குழப்பங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கும் அப்பால் இவை நிகழ்ந்திருக்கவே கூடாது என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வேதனைக் குரலாக உள்ளது. கட்சி வேறுபாடுகள் தாண்டிப் பேரினவாதிகள் ஒன்றுபட்டு நினைவேந்தியவர்களைக் கைதுசெய்யுமாறு கொக்கரிக்கிறார்கள். ஆனால், நாமோ பொது நினைவேந்தல்களிற்கூட ஒன்றுபட முடியாமல் தமிழ்த்தேசியத்தை மழுங்கடித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை இயக்கத்திடம் விதைகளை மீளளித்த  விவசாயிகள்

மாண்புறு உழவர் சான்றிதழ் வழங்கிக் கௌரவிப்பு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தில் விதைகளைப் பெற்ற விவசாயிகள் அறுவடையின் பின்னர் விதைகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் மீள வழங்கும் மாண்புறு உழவர் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (24.09.2022) நவக்கிரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது விதைகளை மீளக்கையளித்த விவசாயிகள் மாண்புறு உழவர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் பிரதான இடத்தைப் பெற்றிருந்த சிறுதானியங்கள் தற்போது வழக்கொழிந்து வருகின்றன. சிறுதானியங்கள் வறண்ட நிலத்துக்குப் பொருத்தமான அதிக கவனிப்புத் தேவையில்லாத போசாக்கு நிறைந்த பயிர்களாகும். நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருக்கும் உணவுப்பற்றாக்குறைவைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சிறுதானியங்களை மீள மூடிசூட்டுவோம் என்ற கருப்பொருளில் இராசதானியத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இராசதானியத் திட்டத்தில் விதைகளைப் பெறும் விவசாயிகள் அறுவடையின் பின்னர் பெற்றுக்கொண்ட விதைகளின் இரட்டிப்பு மடங்கு விதைகளை ஏனைய விவசாயிகளுக்கு வழங்குவதற்காகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் மீளக் கையளிக்கவேண்டும் என்ற உடன்பாட்டுடன் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விதைகளைப் பெற்று ஆர்வத்தோடு சிறுதானியச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் அறுவடையை முடித்த ஒரு தொகுதி விவசாயிகளே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனிடம் விதைகளைக் கையளித்துள்ளனர்.

நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக விவசாய விஞ்ஞானி கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் ம. இரேனியஸ் செல்வின், நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச. சர்வராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் குரக்கன் கஞ்சி வழங்கி உபசரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளைச் சந்திக்க உறவினர்கள் கொழும்பு பயணம்

சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு

நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலையை நோக்கிய பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஜெனீவாவில் திங்கட்கிழமை (12.09.2022) ஆரம்பமாகின்ற நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அதன்கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாகச் சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் வகையில் உறவினர்களது இந்தப் பயணம் கடந்த சனிக்கிழமை (10.09.2022) ஆரம்பமாகியது. குரல் அற்றவர்கள் குரல் அமைப்பு யாழ். ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பை நிகழ்த்திய பின்னர், ஊடக அமையத்தின் முன்றலில் இருந்து ஒழுங்குசெய்யப்பட்ட பேருந்தில் கொழும்பை நோக்கிய இப்பயணம் ஆரம்பமானது. 

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலையை நோக்கி மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக அவர்களை அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து வழியனுப்பி வைத்துள்ளனர். வழியனுப்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன், யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், சிவபூமி அறக்கட்டளையின் முதல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ் மாநகரசபையின் பிரதி மாநகரபிதா து. ஈசன், மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்தீபன், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் யாழ். மாவட்டப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இவர்களால், அரசியல் கைதிகளுக்கு வழங்குவதற்கென உலர் உணவுகள் அடங்கிய  அத்தியாவசியப் பொருட்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பயணத்துக்கான ஒழுங்குபடுத்தல்களை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் மேற்கொண்டிருந்தார். 

பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர்

வீட்டுத்தோட்டப் போட்டிக்கான விதைகள் விநியோகம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்துகின்றது. இதற்கான விதைப் பொதிகளை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (03.09.2022) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற விதைப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் விவசாய விஞ்ஞானியும், யாழ் பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி, ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் ஆகியோர் வீட்டுத்தோட்டச் செயன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் அனைவருக்கும் வீட்டுத்தோட்டத்துக்கான பத்து வகையான விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் தொடர் மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் அறிவைப்புகட்டி அவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழற்பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்கில் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டும் சூழலுக்கு இசைவான சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் தற்போது ‘மாணாக்க உழவர்’ என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்துவது குறிப்பிடத்தக்கது.  

பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர்

மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டி


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘மாணாக்க உழவர்’ என்ற பெயரில் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டியொன்றை நடாத்துகின்றது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செயன்முறை வழிகாட்டற் கருத்தமர்வும் விதைப்பொதிகள் விநியோகமும் எதிர்வரும் 03.09.2022 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நல்லூர், சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ஓய்வுநிலைப்பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன், விவசாய விஞ்ஞானி கலாநிதி எஸ். ஜே அரசகேசரி ஆகியோர் உரையாற்ற உள்ளனர். 

நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை மற்றும் உணவுக்கான நெருக்கடி ஆகியனவற்றைக் கருத்திற்கொண்டு வீட்டுத்தோட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களை 01.09.2022 மாலை 5.00 மணிக்கு முன்பாக 0777969644 அல்லது 0741471759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் ‘மாணாக்க உழவர்’ சான்றிதழ்களும், சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை இயக்கத்தின் 

ஆடிப்பிறப்பு விழா

உரும்பிராயில் சிறப்பாக இடம்பெற்றது


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது. உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன் சனசமூகநிலைய முன்றலில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்> கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன் ஆகியோருடன் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன் கலந்து கொண்டிருந்தார்.

திருமதி ரேணுகா அன்ரன்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் பரிமாறப்பட்டதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. 

தமிழர்களுக்கே உரித்தான ஒரு பண்பாட்டு அடையாளமான ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் தற்போது அருகிவந்துள்ளன. இந்நிலையில், மீளவும் அதனை வெகுசனமயப்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொதுமக்களுடன் இணைந்து ஆடிப்பிறப்பைச் சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளது.  

வவுனியாவில் 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சி இடம்பெற்றது


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (15.07.2022) வவுனியாவில் நடைபெற்றது. மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவைப் புகட்டி அவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமைத்திறனை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே வவுனியா கோயிற்குளத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சோ. சிவநேசன் தலைமையில் கோயிற்குளம் விஷ்ணு ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினராகச் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி. தேவராஜ் கலந்துகொண்டிருந்தார். பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து உரையாற்றியிருந்தார். இந்நிகழ்ச்சியில் கண்ணன் அறநெறிப் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆலய அறங்காவற் குழுவினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மாணவர்கள் அனைவருக்கும் கனடா ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் அனுசரணையுடன் சூழல் விழிப்புணர்வு மேற்கோள்கள் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

சிறுப்பிட்டியில் சிறுதானிய விதைகள் விநியோகம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் சிறுப்பிட்டியைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உரங்கள் மற்றும் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் உணவுற்பத்தி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு குறைந்தளவு நீரும் பசளைகளுமே போதுமான சிறுதானியச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற திட்டத்தைக் கடந்த மாதம் முதல் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நேற்று திங்கட்கிழமை (27.06.2022) சிறுப்பிட்டியில் 50 விவசாயிகளுக்குக் குரக்கன், பயறு, காராமணி ஆகியவற்றின் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. 

சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூக நிலையத்தில் கு. மயூரதன் தலைமையில் நடைபெற்ற விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இராசதானியத் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார். வளவாளராகக் கலந்துகொண்ட ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் குறைந்தளவு நீர்ப்பாசனத்துடனும் பசளைகளுடனும் எவ்வாறு சிறுதானியச் செய்கையினை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் பயிர்களில் பீடைகளின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

வழங்கப்படுகின்ற விதைகளின் நிறையின் இரட்டிப்பு மடங்கு விதைகளை விவசாயிகள் அறுவடையின் பின்னர் சுழற்சி முறையில் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இராசதானியத் திட்டம் முனனெடுக்கப்பட்டு வருகின்றது. விதை இரட்டி என்ற இந்த முறைமை எமது பண்டைய விவசாய மரபில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

திக்கம் வடிசாலை தென்னிலங்கை நிறுவனத்துக்குத் தாரை வார்ப்பு

பனை அபிவிருத்திச்சபைத் தலைவரின் பேரினவாத எதேச்சாதிகாரம்


பொ. ஐங்கரநேசன் கடுங்கண்டனம்

எதிர்த்துப் போராட அணிதிரளுமாறும் அழைப்பு


திக்கம் வடிசாலையின் உரிமத்தைத் தங்களிடம் மீளவும் கையளிக்குமாறு அதை நிர்வகித்துவரும் வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்டகாலமாகக்கோரி வருகின்றனர். பல போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். ஆனால், இப்போது இவர்களைப் புறந்தள்ளி, இவர்களுக்கே தெரியாமல் பனைஅபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ திக்கம் வடிசாலையைத் தென்னிலங்கையைச் சேர்ந்த வி.ஏ டிஸ்ரிலறிஸ் என்ற நிறுவனத்துக்கு 25 வருடக் குத்தகைக்குத் தாரை வார்த்துள்ளார். பேரினவாத எதேச்சாதிகாரப் போக்குடன் வடமராட்சி பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைத் தட்டிப்பறித்து தனது இனத்தவர்களிடம் கையளித்துள்ளார் என்று தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திக்கம் வடிசாலை தொடர்பாக இன்று சனிக்கிழமை (25.06.2022) பொ. ஐங்கரநேசன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. இதிலிருந்து பொருளாதார ரீதியாக அதியுச்சப் பயனை அறுவடை செய்யவேண்டும் என்ற நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை தாபிக்கப்பட்டது. ஆனால், இதன் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் பனை பற்றிய பட்டறிவையோ, படிப்பறிவையோ கொண்டிராமல் அரசியற் சிபார்சை மட்டுமே தகுதியாகக் கொண்டிருந்தார்கள். ஆளுங்கட்சியில் அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ்க்கட்சிகளில் இருந்து தேர்தலில் தோற்றுப்போனவர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர்களால் பனைத் தொழில் சீரழிந்து இறங்கு முகமே கண்டது. இப்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜவும் அதையே கனக்கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார். 

திக்கம் வடிசாலை 1983 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும் பனை, தென்னைவள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் நிதியிலும் உருவாக்கப்பட்டது. சுயாதீனமாக இலாபத்தோடு இயங்கிவந்த இந்த வடிசாலை 1987இல் வடமராட்சியில் இடம்பெற்ற ஒப்பறேசன் லிபறேசன் இராணுவத் தாக்குதல் காரணமாகப் பலத்த சேதமடைந்தது. இதனால், பனை அபிவிருத்திச்சபையிடம் இருந்து உதவிபெற நேரிட்டது. ஆனால். ஒட்டகத்துக்கு இடம்கொடுத்த கதையாகப் பனைத் தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2001ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் திக்கம் வடிசாலை பனை அபிவிருத்திச் சபையின்கீழ்க் கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்தே திக்கம் வடிசாலையின் சுயாதீனம் பறிபோனது. 

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்கள் அரசியல் நியமனம் என்பதால் அவர்களின்கீழ் இருந்துவந்த திக்கம் வடிசாலையின் வளங்களும் அரசியற் தேவைகளுக்கே பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனாலேயே, திக்கம் வடிசாலையை பனைஅபிவிருத்திச் சபையிடமிருந்து விடுவிக்க வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். பனை தமிழர்களின் தேசியவளம் என்பதால் இது ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரச்சினையும் ஆகும். திக்கம் வடிசாலையைத் தென்னிலங்கை முதலாளிகளிடமிருந்து மீட்கவும் பனைஅபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜவின் பேரினவாத எதேச்சாதிகாரத்தைக் கண்டித்தும் பனைசார் உற்பத்தித் தொழிலாளர்களின் பின்னால் தமிழர்களாக நாம் அனைவரும் அணிதிரண்டு போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.   

பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டம்

அளவெட்டியிலும் முன்னெடுப்பு


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியத் திட்டத்தின்கீழ் அளவெட்டியில் விவசாயிகளுக்குத் தானியங்களை வழங்கியுள்ளது. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக விரைவில் உணவுப்பஞ்சம் ஏற்படலாமென பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இதற்கு முகங்கொடுக்கும் விதமாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் இருந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாகவே அளவெட்டியில் நேற்று திங்கட்கிழமை (20.06.2022) விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

அளவெட்டி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் விவசாயச் சம்மேளனத்தின் தலைவர் வை. சின்னப்பு தலைமையில் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார். ஓய்வுநிலைப்பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் தானியங்களின் செய்கைமுறை பற்றி விளக்கமளித்ததோடு விவசாயிகளின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் அளவெட்டி மற்றும் அயற்கிராமமான மல்லாகம் கல்லாரையைச் சேர்ந்த 25 விவசாயிகளுக்குக் குரக்கன், வரகு, பயறு, காராமணி விதைகள் உடனடி விதைப்புக்கென வழங்கப்பட்டுள்ளன.

வழங்கப்படும் விதைகளின் எடையின் இரட்டிப்பு மடங்கு விதைகளைச் சுழற்சிமுறையில் வேறு விவசாயிகளுக்கு வழங்கும்பொருட்டு அறுவடையின் பின்னர் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்கவேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதும் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கன. 

மீட்பர்கள் எவருமிலர்; 

பட்டினிச் சாவில் இருந்து

எங்களை நாங்களேதான் காப்பாற்ற வேண்டும்

பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீர்ந்து விடப்போவதில்லை. உணவுப் பற்றாக்குறைவு தானாகத் தீரும் என்று எவரும் காத்திருக்கவேண்டாம். மீட்பர்கள் எவருமிலர்; பட்டினிச் சாவில் இருந்து எங்களை நாங்களேதான் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதைகள்  வழங்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (14.06.2022) அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார். 

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு மீண்டெழப் பதினெட்டு மாதங்கள் ஆகும் என்று அறிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தங்களால் ஐந்து வருடங்களில் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சாதாரண மக்கள் அடுத்த மாதம் பற்றியோ, அடுத்த வருடம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. அடுத்த வேளைக்குச் சாப்பாடு கிடைக்குமோ என்றே அங்கலாய்க்கின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தலாம் என்று ஜக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை அல்ல. உணவுற்பத்தி குறைந்து வருவதாலும் உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாலும் ஒருவர் நாளாந்தம் எடுக்கும் உணவின் அளவு குறைந்து வருகிறது. பசியால் மயங்கி விழுகின்ற சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. 

பொருளாதார நெருக்கடி எப்போது தீரும் என்று எமது தலைவர்கள் சோதிடக்காரர்கள்போல ஆருடங்களை மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளிடம் இருந்து கடன்பெறுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். மக்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு எந்தவொரு தீர்வையும் அவர்கள் முன்வைக்கவில்லை. நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய அவர்களால் அதற்கான தீர்வை முன்வைக்கவும் இயலாது. 

போர்க்காலங்களில் தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கும் நெருக்கடிகளைவிட மிகமோசமான நெருக்கடிகளையெல்லாம் அனுபவித்திருந்தார்கள். ஆனால், அப்போது மக்களின் பாதி வலிகளை விடுதலைப்புலிகள் தங்கள் தோள்களில் தாங்கியதால் நெருக்கடிகளை எங்களால் கடந்துவர முடிந்தது. தற்போது, ஒவ்வொருவரும் எங்களால் இயன்றளவு உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் மாத்திரமே ஏற்படவுள்ள உணவுப் பஞ்சத்துக்கு முகங்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டம் அராலியில் முன்னெடுப்பு

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டத்தின் கீழ் அராலியில் 50 விவசாயிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (14.06.2022) விதைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சி அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலைய மண்டபத்தில் தே. மிதுசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், செயலாளர் ம. கஜேந்திரன், ஓய்வுநிலைப் பிரதி விவசாயப்பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதோடு, தெரிவுசெய்யப்பட்ட 50 விவசாயிகளுக்குக் குரக்கன், காராமணி (கௌபி), பயறு ஆகிய விதைகளையும் வழங்கி வைத்துள்ளனர்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் காலநிலை மாற்றங்களையும் கருத்திற்கொண்டு, சிறுதானியச் செய்கைகளை ஊக்குவிக்கும் முகமாக இராசதானியம் திட்டத்தை விவசாயக் கிராமங்களில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராசதானியம் திட்டம் சங்கானையில் முன்னெடுப்பு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (12.06.2022) சங்கானையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப்பசுமை இயக்கம் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்று கருப்பொருளில் இராசதானியம் என்ற திட்டத்தை விவசாயக் கிராமங்களில் முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இத்திட்டத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கானை மடத்தடியில் இடம்பெற்றுள்ளது.

மடத்தடி வரசித்தி விநாயகர் ஆலய முன்றலில் தி. சத்தியேந்திராவின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் இராசதானியத் திட்டம் தொடர்பான கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். ஓய்வுநிலைப் பிரதி விவசாயப்பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் சிறுதானியங்களின் செய்கை முறைபற்றிய வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார். 

இதன்போது ஐம்பது விவசாயிகளுக்குக் குரக்கன், காராமணி (கௌபி), பயறு விதைகள் வழங்கி வைக்கப்பட்டன. இலவசமாக வழங்கப்பட்ட விதைகளின் இரட்டிப்பு மடங்கு விதைகள் சுழற்சி முறையில் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும்பொருட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இவ்விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள உணவுப் பஞ்சத்துக்கு முகங்கொடுக்கும் விதமாக அதிக நீரும், அதிக உரங்களும் தேவைப்படாத குறுகிய காலப்பயிர்களான சிறுதானியங்கள் மற்றும் அவரையினப் பயிர்களை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பசுமை  இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி 

கொல்லங்கலட்டியில் நடைபெற்றது 


தமிழ்த்தேசியப்  பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிறுக்கிழமை [09-06-2022]தெல்லிப்பளை கொல்லங்கலட்டியில் நடைபெற்றுள்ளது .தமிழ்த்தேசியப்  பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்கோடும்  அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கோடும் கிராமங்கள் தோறும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே கொல்லங்கலட்டியில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.


பா.நவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சில் தமிழ்த்தேசியப்  பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன் , சி.சிவகஜன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள். அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் மரநடுகை மேற்கோள்கள் அடங்கிய அப்பியாசக்கொப்பிகள்  வழங்கப்பட்டன. இவ்வப்பியாசக்கொப்பிகள் ரொறன்ரோவின் மனித நேயக்குரல் என்னும் அமைப்பின் அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பூமியை நாம் சூடுபடுத்துவதால் கொரோனாவைவிடக்

கொடும் நோய்கள் தாக்கும் அபாயம்


சூழல்தின நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

கொரோனா நோய் இதுவரையில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி எடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகையும் முடக்கிப் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா ஓர் முடிவல்ல. இதைவிடக் கொடிய நோய்களை எல்லாம் மனுக்குலம் அனுபவிக்கப்போகிறது. பூமியை நாம் சூடுபடுத்துவதால் கொரோனாவைவிடக் கொடும் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு சூழல்தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் எரிபொருட்களை அளவுகணக்கின்றி எரித்துத்தள்ளுகிறோம். இதனால் வெளியேறும் கரிக்காற்று நாளுக்கு நாள் பூமியைச் சூடுபடுத்தி வருகிறது. இவ்வெப்பம் காரணமாகத் துருவப்பகுதிகளில் உறைந்திருக்கும் பனி உருகிவழியத் தொடங்கியுள்ளது. பனிப்பாளங்களின் கீழே மனிதன் பூமியில் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய வைரசுக்கள் இப்போதும் உறைநிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பனி உருகுவதால் இவ்வைரசுக்கள் வெளியேறி மனிதர்களைத் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

காட்டு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தாவித் திரிபடைந்த வைரசுக்களே கொரோனாக் கிருமிகள். இவை மனிதர்களுக்குப் புதியவை என்பதாலேயே இவற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களிடம் இருக்கவில்லை. இதனாலேயே கொரோனா பெருங்கொள்ளை நோயாக உருவெடுத்து உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உறைபனிகளின் கீழிருந்து வெளிப்படும் வைரசுக்களும் மனிதர்களுக்குப் புதியவை என்பதால் இவை தொற்றும்போதும் புதுப்புதுக் கொள்ளை நோய்களாகவே உருவெடுக்கும்.

எமது பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான வெள்ளுடுத்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு வெள்ளுடுத்தொகுதியிலும் பில்லியன் கணக்கான கிரகங்கள் உள்ளன. ஆனால், பூமிக் கிரகம் ஒன்றே ஒன்றுதான். உயிரினங்கள் வாழுகின்ற வேறு கிரகங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால், நாம் பூமியின் அத்தனை வளங்களையும் சூறையாடி வருகின்றோம். இருக்கின்ற ஒரேயொரு பூமியை நாம் பாதுகாத்தாலே நோய்நொடியின்றி நாமும் வாழ்ந்து ஏனைய உயிரினங்களும் இந்தப் பூமியில் வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கத்தின் 

சூழல்தின உரையரங்கு

ஆவரங்காலில் இடம்பெற்றது


தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) சிறப்பாக நடைபெற்றுள்ளது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் தலைமையில் ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் சபா. குகதாசன் வரவேற்புரை நிகழ்த்த யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் ச. ரவி, தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் சுற்றுச்சூழல் தொடர்பாகச் சிறப்புரையை ஆற்றியிருந்தார்கள். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கிலும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகவே உலக சூழல் தின உரையரங்கு நடைபெற்றுள்ளது. இவ்வுரையரங்கில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தார்கள். 

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் தொடர்பான வினாக்கள் வினவப்பட்டுச் சரியாக விடையளித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சூழல் பாதுகாப்பு மேற்கோள்கள் அடங்கிய அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் அப்பியாசக் கொப்பிகளுக்கான அனுசரணையை கனடாவிலுள்ள ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் எனும் அமைப்பு வழங்கியிருந்தது.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்காவிடின்

உணவுத்தட்டுப்பாடு விரைவில் உக்கிரமடையும்

பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய டீசலையும் மண்ணெண்ணையையும் தடையின்றிப் பெற்றுக்கொடுக்க அரச உயர் அதிகாரிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எரிபொருள் வழங்காவிடின் உணவுத்தட்டுப்பாடு விரைவில் உக்கிரமடையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

விவசாயிகள் எரிபொருட்களைப் பெறுவதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசின் தவறான நிதித் திட்டமிடுதலினாலும் தவறான விவசாயக் கொள்கையினாலும் நாடு உணவு உற்பத்தியில் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த பெரும்போகம் எதிர்பார்த்த அறுவடையைத் தராத நிலையில், சிறுபோக விளைச்சலும் 50 வீதமாகக் குறைவடையும் அபாயம் நேர்ந்துள்ளது. உணவுத் தானியங்களின் இறக்குமதிக்கும் அரச கருவூலத்தில் பணம் இல்லாததால் நாடு மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 

நாடு பட்டினியை எதிர்நோக்கியுள்ள நிலையிலுங்கூட உணவுற்பத்தியில் அரசு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இதுவரையில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களில் குறுகிய காலப் பயிர்களான சிறுதானியங்களினதும் அவரை இனப் பயிர்களினதும் செய்கையை ஊக்குவிப்பது அவசியமாகும். இதற்கு வேண்டிய விதைகள் கையிருப்பில் இருக்கின்றபோதும் உழவுக்கும் இறைப்புக்கும் வேண்டிய எரிபொருட்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசு இதுவரையில் முன்னுரிமை வழங்கவில்லை. 

உணவுற்பத்தியை ஓர் அவசர காலச் செயற்பாடாகக் கருதி விவசாயிகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைக்க வழி செய்யவேண்டும். இதற்கு மாவட்டச் செயலர்களும், பிரதேச செயலர்களும் கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளும் தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளும் இதற்கான அழுத்தங்களைக் கொடுக்க முன்வரவேண்டும். தவறின் உணவுத்தட்டுப்பாடு மென்மேலும் உக்கிரமடைவதோடு பட்டினிச் சாவுகள் நேர்வதும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியம்

சிறுதானிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற பெயரில் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற மகுட வாசகத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இராசதானியத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (29.05.2022) அச்சுவேலி பத்தமேனியில் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக ஓய்வுநிலை பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன், சமூகச் செயற்பாட்டாளர் ம. செல்வின் இரேனியஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.  

சிறுதானியங்கள் தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் முதன்மை இடத்தைப் பெற்றிருந்தன. தற்போது இவை வழக்கொழிந்து வரும் நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியையும், காலநிலை மாற்றங்களையும் கருத்திற்கொண்டு மீளவும் இவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அச்சுவேலிப் பகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 விவசாயிகளுக்கு குரக்கன், வரகு, பயறு ஆகியவற்றின் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

விவசாயிகள் பெற்றுக்கொண்ட விதைகளின் இரண்டு மடங்கு விதைகளை அறுவடையின் பின்னர் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கட்டணம் எதுவுமின்றி வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளுடனேயே விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சிறுதானிய உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வசதிகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் விவசாயிகளுக்குச் செய்துகொடுக்கும் எனவும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்துடன் தொடர்புகொண்டு சிறுதானிய விதைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி காலங்களில் வழிகாட்டுவதற்குத்

தமிழர்களுக்கு இப்போது

 தலைமை இல்லை

பசுமை அறிவொளி நிகழ்ச்சியில் 

பொ. ஐங்கரநேசன்

இலங்கை முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், யுத்த காலத்தில் பாரிய நெருக்கடிகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டோம் என்ற மனோநிலையில் இருக்கும் தமிழ்மக்கள் இந்தப் பிரச்சினைகளை அவற்றின் பாரதூரம் புரியாமல் இலகுவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

யுத்த காலத்தில் தமிழ் மக்களை வழிப்படுத்த விடுதலைப்புலிகள் இருந்தார்கள். ஆனால், நெருக்கடி காலங்களில் வழிகாட்டுவதற்குத் தமிழர்களுக்கு இப்போது ஒரு தலைமை இல்லை. இப்போதைய நெருக்கடிச் சூழலை நாம் சரியான முறையில் கூட்டாக எதிர்கொள்ளத் தவறினால் தமிழினம் பாரிய எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் நேற்று திங்கட்கிழமை (23.05.2022) நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பெற்றோர்களினதும் மாணவர்களினதும் மத்தியில் உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் பெரும் மூலதனம் கல்வி ஒன்றுதான். இதனாலேயே யுத்த நெருக்கடிகளின் மத்தியிலும் விடுதலைப்புலிகள் கல்விக்கென்று தனியானதொரு பிரிவை உருவாக்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கூடிய சிரத்தை எடுத்திருந்தார்கள். இடப்பெயர்வுகளின் மத்தியில் குப்பி விளக்குகளில் படித்தும்கூட மாணவர்களால் சிறந்த பெறுபேறுகளை எட்டக்கூடியதாக இருந்தது. ஆனால், இப்போது தமிழ்மக்கள் தொடர்ந்து கல்வியில் வீழ்ச்சியையே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் இப்போது இல்லாத நிலையில் வன்முறைகளுக்கும் போதைப் பொருள் பாவனைக்கும் மாணவர்கள் திட்டமிட்டுப் பழக்கப்படுகிறார்கள். இந்தத் திசைதிருப்புதல்களுக்கும் மேலாக, கொரோனாப் பெருங்கொள்ளை நோயால் பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டதாலும் மாணவர்கள் கல்வியில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்கள். இவற்றுடன் இப்போது நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவும் கல்வியைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. 

போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ முடியாமல் இருக்கும் தமிழ் மக்களைப் பொருட்களின் உச்ச விலையேற்றம் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. வறுமை கல்வியை மோசமாகப் பாதிக்கும். ஏழைக் குடும்பங்கள் மாணவர்களை வேலைக்கு அனுப்புகின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கடுமையான சூழ்நிலையிலும் எதற்காகவேனும் பிள்ளைகளின் கல்வியை நாம் பலியிட்டுவிடக்கூடாது. இவ்விடயத்தில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் உடனடியாகக் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாவற்குழியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் நேற்று திங்கட்கிழமை (23.05.2022) நாவற்குழியில் இடம்பெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களிடையே சூழல் அறிவைப் புகட்டி சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கோடும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நேற்று நாவற்குழி ஐயனார் கோவிலடியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். மாணவர்கள் அனைவருக்கும் சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்ட மாணவர் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. இக்குறிப்பேடுகளுக்கான அனுசரணையைக் கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல் அமைப்பு வழங்கியிருந்தது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (17.05.2022) இடம்பெற்றது. 

தமிழினப் படுகொலை நாளான மே-18 ஐ நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் மே-12 இல் இருந்து 18 வரையான ஒருவார காலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகத் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அதன் தலைமைப் பணிமனையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் நினைவுச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உணவின்றித் தவித்த மக்களுக்கு விடுதலைப் புலிகளினாலும், பொது அமைப்புகளினாலும் தயாரித்து வழங்கப்பட்ட உப்புக் கஞ்சியே ஒரேயொரு உயிர் ஆகாரமாக இருந்து வந்தது. 

இதனால், எமது எதிர்கால சந்ததிகளுக்குப் போரின் வலியையும் தமிழினம் பட்ட வதையையும் எடுத்துச்சொல்லும் விதமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்

மே18 இல் முள்ளிவாய்க்கால் வரவேண்டும்

மேதினக்கூட்டத்தில் பொ. ஐங்கரநேசன் அழைப்பு


அரசாங்கத்தில் இருந்து ராஜபக்சாக்களை வெளியேறக்கோரி கோட்டா கோ கம என்று காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தமிழில் தேசியகீதம் பாடுவதாலோ, தமிழ் இசைக்கருவியான பறைகளை முழங்குவதாலோ போராட்டக்காரர்கள் தமிழ்மக்களின் மனங்களை வெல்லமுடியாது. பண்டாரநாயக்காவின் சிலையில் கண்களைக் கறுப்புத் துணியினால் கட்டுவதால் புரையோடிப்போயுள்ள பேரினவாதம் அற்றுப்போய்விடும் என்று தமிழ்மக்கள் நம்பத்தயாராக இல்லை. இந்த மாற்றங்கள் இதயசுத்தியானது என்பதைத் தமிழ்மக்கள் நம்புவதற்கு நீங்கள் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டும். மே18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வாருங்கள். மாவீரர்களுக்கு விளக்கேற்ற நாம் கோரவில்லை. போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசாங்கம் இன்றுவரை தடைவிதித்து வரும் நிலையில் மே18 அன்று எங்களுடன் சேர்ந்து அஞ்சலிக்க வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2022) அன்று நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அரசாங்கத்துக்கு எதிராகத் தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டங்களில் இன்றுவரையில் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்றிக்கவில்லை. நாடுதழுவிய போராட்டங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ்மக்கள் பார்வையாளர்களாக மாத்திரமே இருந்து வருகிறார்கள். இதற்கான காரணங்களைப் போராட்டக்காரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 

போராட்டக்காரர்களின் இலக்கு ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்புவதாக மாத்திரமே இருக்கிறது. இதற்கான காரணங்களாக ராஜபக்சாக்களின் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்பனவற்றையே முன்வைக்கிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும்விட இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவுகளுக்குப் பின்னால் சிங்கள பௌத்தப் பேரினவாதமே உள்ளது. இதனைப்பற்றிப் போராட்டக்காரர்கள் இன்றுவரை பேச முன்வரவில்லை. 

ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்புவதால் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. தீர்வைப் போராட்டக்காரர்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனவாத ஒடுக்குமுறைகளும் அதனால் மூண்டபோருமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் என்ற உண்மையை வெளிப்படையாக நீங்கள் உரத்த குரலில் பேசவேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் உங்களோடு சேர்ந்து போராடத் தமிழ்மக்கள் முன்வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுப்பு


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சூழற் பாதுகாப்பில் அவர்களைப் பங்குபற்றுநர்களாக்கும் நோக்கோடு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்துள்ள இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.03.2022) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பின் தலைவருமான என்.ஆர்.லோகேந்திரலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் விரிவுரையாளர் பா.பாலகணேசன், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் மு. கனகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் திட்டம் தொடர்பான விளக்கவுரையை ஆற்றியிருந்தார். 

திட்டவுரையில் பொ. ஐங்கரநேசன் தெரிவிக்கையில்,

ஒரு அரசியற்கட்சி மேடைகளில் வெறுமனே அரசியலை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அரசியல் மக்களுக்கானது என்ற வகையில், சமூகத்தைப் பாதிக்கும் அனைத்து விடயங்களிலும் அது கரிசனை கொள்வது கட்டாயமானதாகும். அதன் அடிப்படையிலேயே, பரீட்சைகளை மையப்படுத்திய கல்வி முறையால் வகுப்பறைகளுக்குள் புறொயிலர் கோழிகள் போல முடக்கப்பட்டிருக்கும் மாணவர்களை வகுப்பறைகளுக்கு வெளியே அழைத்து வந்து அவர்களிடையே இயல்பாகவே குடிகொண்டிருக்கும் இயற்கை மீதான ஆர்வத்தைச் சூழல் மீதான அக்கறையாக மாற்றும் வகையில் அவர்களுடன் சூழல் சார் அறிவைப் பகிர்ந்து கொள்ளவுள்ளோம். இதன் மூலம் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களைச் சூழல் பாதுகாப்பில் பார்வையாளர்களாக இல்லாது பங்குபற்றுநர்களாக ஆக்க முடியும். இதனை முன்னெடுப்பதற்கு வளவாளர்கள் கிராமங்கள் தோறும் மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நிகழ்த்தவுள்ளார்கள். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல்பாதுகாப்பு அணியும் மாணவர் அணியும் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம் கட்சி அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் அப்பாற்பட்டது. சூழல் நலனை, அதன் மூலம் இனத்தின் நலனை மாத்திரமே குறியாகக் கொண்டதாகும். இத்திட்டம் தங்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டும் என்று விரும்பும் பொது அமைப்புகள், பொது மக்கள் பசுமை இயக்கத்துடன் தொடர்பு கொண்டால் ஒழுங்கு செய்து தரப்படும் என்று குறிப்பிட்டார். 

அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

மாணவர்கள் சுற்றுச்சூழலின்மீது

 அக்கறை கொள்வது

தேசியத்துக்கான அவர்களின் அதிசிறந்த பங்களிப்பாக அமையும்

பசுமை அமைதி விருது விழாவில் 

ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

 

தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை, வாழிடம் என்று பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் முறைமையாகும். மொழி, உணவு, உடை, வாழிடம் என்று எல்லாமே அவை சார்ந்துள்ள இயற்கைச் சூழலாலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இயற்கைச் சூழல்பாதிக்கப்படும்போது இவையாவுமே பாதிக்கப்பட்டுக் கடைசியில் தேசியமே கேள்விக்கு உள்ளாகிறது. அந்தவகையில், மாணவர்கள் இயற்கையோடு இசைந்து வாழ்வதும் சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொள்வதும் தேசியத்துக்கான அவர்களின் அதிசிறந்த பங்களிப்பாக அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்களாகக் கொரோனாப் பெருங்கொள்ளை நோயும், காலநிலை மாற்றமும் உள்ளன. இரண்டும் மனுக்குலத்துக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இரண்டும் இயற்கையை நாம் அழித்ததால் ஏற்பட்டுள்ள விளைவுகளேயாகும். இதனை, இயற்கையை நாம் அழித்ததால் இயற்கை எமக்கு வழங்கிய தண்டனைகளாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா சீனாவின் தயாரிப்பா இல்லையா என்பது விவாகத்துக்கு உரியது. ஆனால், இந்நோய் காட்டு விலங்குகளில் உறையும் வைரசுக்கள் விகாரம் பெற்று மனிதர்களுக்குத் தாவியதால் ஏற்பட்டுள்ளது என்பதே அறிவியல். அந்த வகையில், காடுகளில் இருக்க வேண்டிய விலங்குகளை, இயற்கையையும் மீறி நாட்டுச் சந்தைக்குள் கொண்டுவந்ததன் விளைவே இன்று முழு உலகத்தையும் முகக்கவசம் மாட்ட வைத்திருக்கிறது.

நாம் எரிபொருட்களை எரித்து வளியில் குவித்துக் கொண்டிருக்கும் கரிக்காற்றே பூமியைச் சூடுபோட்டு வருகிறது. பூமி வெப்பம் அடைவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வழிகின்றன. இதனால், இவற்றுக்கு கீழே உறங்கு நிலையிலுள்ள, மனிதன் தோன்ற முன்னரே தோற்றம் பெற்ற வைரசுக்கள் வெளிக்கிளம்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவை பரவ ஆரம்பித்தால் அது கொரோனாவைவிடப் பன்மடங்கு கொடிய நோய்களை ஏற்படுத்துவதாக அமையும்.

கொரோனா என்ற கொள்ளை நோயாகவும், காலநிலை மாற்றங்களாகவும் இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளாது, நாங்கள் அனைவருமே இயற்கையுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகவே செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இதில் மாணவர்களே பெரும் பங்காற்ற முடியும். அதனாலேயே மாணவர்களுக்குச் சூழற்கல்வி, சூழல் விழிப்புணர்வு, சூழல்பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்குடன் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை அமைதி விருது விழாவில்

தவில்-நாத இசை மழை

 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) அன்று வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் விதமாக விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சிறார்களின் தவில்-நாத இசை மழை இடம்பெற்றது. பிரபல நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களின் புதல்வர் சரண்ஜன், பிரபல தவில் வித்துவான் செந்தில்நாதன் அவர்களின் புதல்வர் சபரிஷன் ஆகிய இரு சிறார்களும் இணைந்து நாதஸ்வர இசை மழை பொழிய இவர்களுக்கு இணையாக செந்தில் நாதன் அவர்களின் இன்னுமொரு புதல்வரான பிருத்விகன், தவில் வித்துவான் பிரபாகரன் அவர்களின் புதல்வர் வேந்துஷன் ஆகிய இருவரும் இணைந்து தவில் வாத்திய இசை முழங்கினர்.

தங்கள் தவில் நாதஸ்வர இசையால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியின் துணைப் பொதுச் செயலாளர் கை. சரவணன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பை வழங்கினார்.

மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறிய

பசுமைஅமைதி விருதுகள் விழா

 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கடந்த ஆண்டு தேசிய ரீதியில் மாணவர்களிடையே இணைய வழியில் சூழல் பொதுஅறிவுப் பரீட்சையொன்றை நடாத்தியிருந்தது. இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றிருந்த இப்பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பசுமை அமைதி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இவர்களோடு விசேட சித்தி மற்றும் அதிதிறமைச் சித்தி பெற்ற மாணவர்களில் ஒரு தொகுதியினர் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் சிவகரன் அபிசாய்ராம் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும், யாழ் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி ஷண்முஹி கருணாநிதி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும், மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த செல்வி டிலுக்சினி டன்ஸ்ரன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்துக்கொண்டார்கள். இவ்விருதுகள் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான பசுமை அமைதி விருதை இயற்கை விவசாயி அல்லைப்பிட்டி மகேஸ்வரநாதன் கிரிசன் பெற்றுக்கொண்டார். தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட இவ்விருதோடு, ஒரு இலட்சம் ரூபா பொற்கிழி வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வரவேற்புரையை தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல்பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் ஆற்ற, நன்றியுரையை பொதுச் செயலாளர் ம. கஜேந்திரன் நிகழ்த்தியிருந்தார். பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்த இவ்விழாவுக்கான அனுசரணையை புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பு  வழங்கியிருந்தது.

பசுமை அமைதி விருதுகள் - 2021

பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 

மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் 03.10.2021 அன்று இணைய வழியில் நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற முதல் 100 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 30.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்மாணவர்களுக்கு இதுதொடர்பான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்கள் தங்களின் வருகையை இம்மாதம் 24, 25, 26ஆம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை 0741471759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு இலக்கத்தைத் தெரியப்படுத்தி உறுதிப்படுத்துவது அவசியமாகும். அப்போது அவர்களுடன் சேர்ந்து வருகை தருபவர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுதல் வேண்டும்.

தொலைபேசியின் ஊடாக உறுதிப்படுத்துபவர்கள் மாத்திரமே பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும்போது அழைப்புக் கடிதத்தைத் தவறாது கொண்டு வருவதும், பாடசாலைச் சீருடையுடன் சமுகமளிப் பதும், தங்களை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணம் ஒன்றை எடுத்து வருவதும், அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் அமருவதும் அவசியமாகும்.

கொரோனா பேரிடர்க்கால சுகாதார நடைமுறை களைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும்.

தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை அல்ல - அது

தமிழ்ப்  பண்பாட்டைக் கட்டிக்காப்பதற்கான வேட்கை

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பொ. ஐங்கரநேசன்


தமிழ் மக்கள் தங்கள்  வாழ்வில் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை மதம் சார்ந்தவையாகவும், அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. ஆனால், தைப்பொங்கல் மட்டும் சாதி, மத, பொருளாதார பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பொதுவான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் பண்டிகை அல்ல ; தமிழ்ப்  பண்பாட்டைக் கட்டிக்காப்பதற்கான வேட்கை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


தமிழ்மக்கள் இயற்கையைக் கடவுளாகப் பூசித்த தொல்வழிபாட்டுப் பண்பாட்டைக் கொண்டிருந்தவர்கள். அதன் தொடர்ச்சியாகவே மாரி மழை ஓய்ந்து கோடை ஆரம்பிக்கும்போது முதல் அறுவடையில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கும்  பண்பாட்டு வெளிப்படுத்துகையாகக்  தைப்பொங்கல் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் தங்களைப் போன்றே இயற்கையை நேசிக்கும் பண்பாட்டு மரபைக் கொண்டிருந்தவர்கள். அதன் தொடர்ச்சியாகவே அவர்களோடு உணவு உற்பத்தியில் உழைத்த காளைகளுக்கும் பொங்கல் செய்து படைக்கும் பண்பாட்டு நீட்சியாகப் பட்டிப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.  தமிழ் மக்கள் புறமணம் புரியும் பண்பாட்டு உறவைக் கொண்டுள்ளவர்கள். கிராமங்களை இணைப்பதற்கு வீதிகள் இல்லாத அக்காலப்பகுதியில் தைபிறந்தால் வழிபிறக்கும் என்று மாரி  மழை ஓயும்வரை காத்திருந்து பாதைகள் தெரிய ஆரம்பித்ததும் அயற் கிராமங்களுக்கு மாப்பிள்ளை தேடிச் செல்வர். 


ஆனால், இன்று  நயத்தகு  பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் இந்தத் தையிலாவது பௌத்த - சிங்களப் பண்பாட்டு மேலாதிக்கத்தில் இருந்துவிடுபட வழிபிறக்காதா என்று அங்கலாய்த்திருக்கின்றனர். பொங்கல் வாழ்த்துச் செய்திகளை அடுத்தவர்களுக்குப் பரிமாறும் இவ்வேளையில் தமிழ் மக்களின் சுதந்திரமானதும் சுபீட்சமானதுமான வாழ்வுக்கு வழிபிறக்கச் செய்ய இயற்கை என்ற பேரிறைவனை வேண்டி நிற்போமாக என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேராயர் டெஸ்மன்ட் டுட்டு – அட்டூழியங்களுக்கு எதிரான உலகின் முகவரி

இரங்கற் செய்தியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்

மனித உரிமைகளுக்காகவும் உலக சமாதானத்துக்காகவும் தனது தள்ளாத வயதிலும் போராடிவந்த பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும். தென்னாபிரிக்காவில் தனது கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறிக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவந்த டெஸ்மன்ட் டுட்டு மனித உரிமைகளின் ஒரு சர்வதேச அடையாளமாக விளங்கிவந்துள்ளார். தென்னாபிரிக்காவைத் தாண்டியும் பூமிப்பந்தில் எங்கெல்லாம் மனிதம் வதைபடுகின்றதோ அங்கெல்லாங்கூட அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு உலகின் முகவரியாகத் திகழ்ந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.

பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள இரங்கற் செய்தியிலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த இரங்கற் செய்தியில் மேலும்,

பேராயரான டெஸ்மன்ட் டுட்டு மனிதம் என்பது இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்த ஓர் உயரிய மாண்பு என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். இதனால், இஸ்ரேலிய யூதர்களால் பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பி வந்தார். ஈராக் மீது பொய்க் காரணங்கள்கூறிப் போர் தொடுத்தார்கள் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயர் இருவரையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி வந்தார். 

ஈழத்தமிழர்கள்மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நிகழ்த்தியது யுத்தக் குற்றமல்ல; அது இனப்படுகொலையே என்று சர்வதேச அரங்கில் உறுதிபடக்கூறி நின்றார். விடுதலைப் புலிகளை உலகம் பயங்கரவாதிகளாகச் சித்திரித்தபோது புலிகளைத் தமிழர்களது பிரதிநிதிகளாகக் கண்டார். ஆனால், வெள்ளையர்களின் கரங்களைப்பற்ற விழைந்த எமது தலைவர்களின் இராஜதந்திரம் துரதிர்ஸ்டவசமாக, ஈழத்தமிழர்களின்பால் இக்கறுப்பினப் போராளி பரிவுடன் நீட்டிய கரங்களை இறுகப் பற்றத்தவறிவிட்டது.

உலக அமைதிக்கான குரலாக ஒலித்ததால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட டெஸ்மன்ட் டுட்டு தனது 90ஆவது வயதில், 26.12.2021 அன்று தனது குரலை நிரந்தரமாகவே நிறுத்திக்கொண்டார். உலகம் முழுவதிலுமிருந்து அவரை அஞ்சலித்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஈழத்தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் இணைந்து தனது அஞ்சலியைச் சிரம் தாழ்த்தித் தெரிவித்துக்கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய அரசியலின் சரியான செல் திசைக்கு

வலுவான சிவில் சமூகக் கட்டமைப்பு அவசியம்

பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு


ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை சர்வதேசம் அவர்களைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதியாக ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா இருந்தபோது இலங்கையின் கதவுகளை அமெரிக்காவுக்கு அகலத் திறந்துவிட்டிருந்தார். அப்போது, அமெரிக்கப் பிரசன்னத்தை இலங்கையில் தவிர்ப்பதற்காக இந்தியா ஈழத்தமிழர்களைக் கையாண்டிருந்தது. இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து இலங்கையைத்தன் வழிக்குக் கொண்டுவந்திருந்தது. இப்போது, ராஜபக்ச அரசாங்கம் இலங்கையைச் சீனாவுக்குத் திறந்துவிட்டுள்ள நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையைப் பணியவைக்கும் முயற்சியில் தமிழ்க்கட்சிகளைக் கையாளத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழ்த்தேசிய அரசியலைச் சரியான செல்திசைக்கு நகர்த்துவதற்கு வலுவானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் அரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வரங்குக்குத் தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும் தமிழ்க் கட்சிகளைக் கையாளத் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில் இக்கட்சிகள் இராஜதந்திர ரீதியாக இந்நாடுகளைக் கையாளுவதில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றன. தனித்தனிக் கட்சிகளாக ஏனைய கட்சிகளுக்கு எதுவும் தெரியாமலும், ஒரு கட்சிக்குள்ளேயே தனிநபர்களாக ஏனைய உறுப்பினர்களுக்குத் தெரியாமலும் இந்நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இவ்விடயங்களை மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவது இராஜதந்திரமாக ஆகாது என்று கூறிவருகின்றனர். மைத்திரி-ரணில் கூட்டை உருவாக்கியபோதும் தமிழ் மக்களின் நலன் தொடர்பாகப் பேசப்பட்டதென்றும் அதனை வெளிப்படையாகப் பேசுவது இராஜதந்திரம் அல்ல என்றும் கூறியிருந்தனர். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பைத் தனிக் கட்சிகளிடமும் தனிநபர்களிடமும் இவ்வாறு விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. 

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் கூறுவதற்காகப் பல தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டுச்சேர்ந்துள்ளன. இக்கட்சிகளின் கூட்டில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இவை வடக்குக்கிழக்கு இணைப்பை ஒருபோதும் ஆதரித்தவை அல்ல. தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொண்டமை ஏற்கனவே பலவீனமாகவுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை மேலும் பலவீனப்படுத்துவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலோ என்றே எண்ணத்தோன்றுகிறது. அவ்வாறுதான் அது அமையவும் போகின்றது.

கூட்டுக்கட்சிக்குள்ளே கட்சிகளாகவும், கட்சிகளுக்குள்ளே தனித்தனித் தலைவர்களாகவும் பிரிந்து நிற்பது ஈழத்தமிழர்களைக் கையாளுவதற்குச் சர்வதேசத்துக்கு இலகுவானதாக இருக்கும். ஆனால், ஈழத்தமிழ் இனத்துக்கு மிகவும் ஆபத்தானது. இந்நிலையிலேயே தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகளை ஒருங்கிணைக்கவும், சர்வதேசங்களைத் தமிழ்த் தரப்புக் கையாளுவதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் சிவில் சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இச்சிவில் சமூக அமைப்பு கடந்த காலத்தில் கட்டப்பட்ட சிவில் சமூக அமைப்புகளின் தோல்விகளைக் கருத்திற்கொண்டு அரசியல் கட்சிகளின் பினாமிகளாக அல்லாமலும் இவ்வமைப்பின் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தித் தனிப்பட்ட அரசியல் ஆதாயம் தேடுவனவாக அல்லாமலும் இருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வுரையரங்கில் “தமிழர் தாயக அபிவிருத்தியில் அரசியலின் வகிபாகம்” என்ற கருப்பொருளில் சமூகச் செயற்பாட்டாளர் இ. செல்வின் அவர்களும், “தமிழ்த்தேசிய அரசியலில் சிவில் அமைப்புகளின் வகிபாகம்” என்ற கருப்பொருளில் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி. ரகுராம் அவர்களும், “தமிழ்த்தேசிய அரசியலில்  பூகோள அரசியலின் வகிபாகம்” என்ற கருப்பொருளில் யாழ். பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் அவர்களும் உரையாற்றியிருந்தார்கள். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் வீ.ரீ. ராஜேந்திரா அவர்கள் வரவேற்றபுரையை நிகழ்த்தியதோடு நிகழ்ச்சியைத் தொகுத்தும் வழங்கினார். 

கொரோனாப் பேரிடர் காலச் சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தார்கள். 

கடற்கோள் காவுகொண்ட உறவுகளுக்குத்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி


இலங்கையைக் கடற்கோள் தாக்கிய 17ஆவது நினைவுநாளில், இந்த இயற்கைப் பேரனர்த்தத்தில் சிக்கிப் பலியானவர்களை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மகேசன் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இவ்வஞ்சலி நிகழ்ச்சி இடம் பெற்றது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுக்கு அருகே இந்து சமுத்திரத்தின் அடித்தளத்தில் 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி நிகழ்ந்த பாரிய நில நடுக்கமே கடற்கோளைப் பிரசவித்திருந்தது. இதன்போது மேலெழுந்துவந்த இராட்சத ஆழிப்பேரலைகளில் சிக்கி இந்து சமுத்திரக் கரையோர நாடுகள் பலவற்றில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருந்தார்கள். இவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் கடற்கோள் நினைவுநாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

வடக்கு மாகாணசபை இத்தினத்தை வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால்

இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்


கடற்கோள் நினைவுதினச் செய்தியில் ஐங்கரநேசன் எச்சரிக்கை


பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரம் பேர் வரையில் கொல்லப் பட்டிருந்தனர். இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது போனாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிவிக்க முடியும். இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கண்டல் மரங்கள் அடர்ந்திருந்த கப்புஹென்வல கிராமத்தில் கடற்கோளால் இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறிக்க முடிந்திருந்தது. ஆனால், அதே மாவட்டத்தில் கண்டல்கள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் ஆழிப்பேரலை ஆறாயிரம் உயிர்களை வாரிச் சென்றுள்ளது. கடல் அலைகளின் சீற்றத்தை 90 விழுக்காடு குறைத்துவிடும் வல்லமை கண்டற் காடுகளுக்கு உண்டு. ஆனால், கடற்கோள் “இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” என்று உலகு அதிரப் போதித்த பின்பும் பட்டும் திருந்தாத பாவிகளாக இயற்கையை நாம் தொடர்ந்தும் சூறையாடி வருகிறோம்.  

கடலோரக் கண்டற்காடுகளை நாம் மென்மேலும் கபளீகரம் செய்துவருகிறோம். கடற்கரையோர மணல் மலைகள் தினம் தினம் கொள்ளை போகின்றன. சுண்ணக் கற்பாறைகள் அகல பாதாளத்துக்குத் தோண்டப்படுகின்றன. கடலருகே இறாற் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. கடலக முருகைக் கற்பாறைகள் அழிக்கப்படுகின்றன. இழுவைப் படகுகள் கடலடி வளங்களை இடையறாது துவம்சம் செய்து வருகின்றன. இப்படி, தலைமுறை தலைமுறையாக வளமூட்ட வேண்டிய கடலையும் கடல் சார்ந்த வளங்களையும் தொடர்ந்தும் சூறையாடி வருகின்றோம். இவற்றுக்கும் மேலாக நாம் வளியில் குவித்துக்கொண்டிருக்கும் கரிக்காற்று பூமியைச் சூடுபடுத்துவதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.

மிகப்பெரும் மனிதப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எதுவுமே நடவாதது போல உறங்கிக்கிடக்கும் கடல் இன்னொரு முறை பொங்கிச் சீறமாட்டாது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. இன்னுமொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் அது ஏற்படுத்தும் அழிவு முன்பைவிட பன்மடங்கானோரைப் பலியெடுக்கும் பேரழிவாகவே அமையும். எனவே, கடற்கோளின் படிப்பினைகளை ஏற்று இயற்கையோடு இசைவுற வாழ்ந்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோமெனக் கடற்கோள் நினைவுநாளில் உறுதியேற்போம். இதுவே கடற்கோளில் மாண்ட நம் உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வவுனியா தச்சன் குளத்தில்

உலருணவு விநியோகமும் மரநடுகையும்

 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நேற்று வியாழக்கிழமை (23.12.2021) வவுனியா தச்சன் குளத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் காரணமாக தொழில்வாய்ப்பிழந்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே வவுனியாவின் தச்சன் குளப்பகுதியில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அக்கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அன்றைய தினம் இப்பகுதியில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியின்போது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், வவுனியா மாவட்ட இணைப்பாளர் கா.சோ.சிவநேசன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திருமதி வ. தேவிகா, உபதலைவர் சு. சுந்தரமூர்த்தி, செயலாளர் செ. விஜயரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்ததோடு, மரக்கன்றுகளையும் நடுகை செய்துள்ளனர்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால்

வேலணையில் உலருணவு விநியோகம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் நேற்று 19.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) வேலணை, தாவடி, நாவற்குழி, மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற, தொழில்வாய்ப்பிழந்த மற்றும் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதனொரு கட்டமாகவே ஞாயிற்றுக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ள  100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள

கார்த்திகை வாசம் - மலர் முற்றம் 

28 ஆம் திகதி வரை நீடிப்பு


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை கடந்த 20ஆம் திகதி (சனிக்கிழமை) திறந்து வைத்துள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மலர் முற்றத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர். இம்மலர் முற்றத்தில் தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மலர்ச் செடிகளையும் மரக்கன்றுகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழமைபோன்றே இந்த ஆண்டும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றமையால் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இம் மலர் முற்றத்தில் காட்சிக்கூடங்களுடன் பார்வையாளர்களுக்கு ஆரோக்கிய இலைக்கஞ்சி வழங்கும் மையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மலர் முற்றம் 26ஆம் திகதிவரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மலர் முற்றம் தினமும் காலை 8.30 மணிமுதல் முன்னிரவு 7.00 மணிவரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம்

நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி இன்று ஆரம்பம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை இன்று சனிக்கிழமை (20.11.2021) திறந்து வைத்துள்ளது. இம்மலர் முற்றத்தை இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமான இத்திறப்பு நிகழ்ச்சியில் அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலியின் அனுசரணையுடன் ‘நடிகர் விவேக்கின் நற்பணியில் நாமும் நடுவோம் ஒரு மரம்’என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளார். 

வடக்கு மாகாணசபை 2014ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. இதைக் கடைப்பிடிக்கும் முகமாக இம்மாதத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பெரிய அளவில் மரநடுகையை மேற்கொள்வதோடு பொதுமக்களுக்கும் பொது அமைப்புகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் வருகிறது. இக்காலப்பகுதியில் உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலையும் நல்லூர் கிட்டு பூங்காவில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த ஆண்டு கொரோனாப் பேரிடர் காரணமாக மிகவும் எளிமையாகவே நடைபெற்ற மலர் முற்றத் திறப்பு நிகழ்ச்சியில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தனர். இம்மாதம் 26ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணியில் இருந்து முன்னிரவு 7.00 மணிவரை இம் மலர் முற்றம் திறந்திருக்கும் எனவும், இதனை பார்வையிட வரும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படும் எனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் 

பளையில் மரநடுகை


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுப் பல்வேறு இடங்களிலும் மரநடுகையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று பளையில் மரநடுகை இடம் பெற்றுள்ளது. 

முகமாலை தெற்கு தூய ஆரோக்கியமாதா ஆலய வளாகத்தில் நிழல் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இம்மரநடுகையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர்  க. கேதீஸ்வரநாதன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ், ஆலயத்தின் அருட்பணிச் சபையின் அங்கத்தவர்கள்  ஆகியோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுப் பொதுமக்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுக் கார்த்திகை மாதத்தில் பொது மக்களிடையே மரங்களின் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டு வருவதோடு, மரநடுகையையும் ஊக்குவித்து வருகிறது. இதனொரு கட்டமாக, வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம் 07.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் மரக்கன்றுகளை வழங்கிவைத்து அப்பகுதிகளில் மரநடுகையையும் ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை 2014ஆம் ஆண்டு வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியது. இதையடுத்து ஆண்டுதோறும் இம்மாதத்தில் தமிழ் மக்கள் மரநடுகையை உணர்வுபூர்வமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்

வடமாகாண மரநடுகை மாத ஆரம்ப மரநடுகை


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மரநடுகையை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள், பொதுஅமைப்புகளுக்கு மரக்கன்றுகளை விநியோகித்து மரநடுகையை ஊக்குவிப்பதோடு, தனது உறுப்பினர்கள் மூலமும் மரநடுகையை ஓர் பெரும் இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறது. 

இந்த ஆண்டுக்கான மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி 01.11.2021 (திங்கட்கிழமை) அன்று கோண்டாவில் தில்லையம்பதி மத்திய கிராம முன்னேற்றச் சங்கத்தில் இடம்பெற்றது. கோண்டாவில் மத்திய கிராம முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் சி. ஆனந்தராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் கலந்துகொண்டி ருந்தனர். இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மரநடுகையும் இடம்பெற்றது. 

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால்

சிறுப்பிட்டியில் குருதிக்கொடை முகாம்


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் நேற்று சனிக்கிழமை (18.09.2021) சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் வட பிராந்திய இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திரு. ம. பிரதீபன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு. த. ரவீனதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கொரோனாப் பெரும் தொற்றுக்காரணமாக மருத்துவமனை களுக்குச் சென்று குருதி வழங்குபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவசர சிகிச்சைகளுக்குத் தேவையான குருதிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கி விடுத்த அவசர வேண்டுகோளை ஏற்றுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கோப்பாய்த் தொகுதிக் கிளையால் சிறுப்பிட்டியில் குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைப் பொதுச்செயலாளர் திரு. தா. யுகேஸ் அவர்கள் கலந்துகொண்டு பங்கேற்ற அனைவருக்கும் செவ்விரத்தம் பூச்செடிகளை வழங்கி வைத்தார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால்

கிளிநொச்சியில் உலருணவு விநியோகம்


கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்த குடும்பங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய குடும்பங்களை அடையாளங்கண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் பணியைத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று செவ்வாய்க்கிழமை (07.09.2021) கிளிநொச்சி மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பளை, பரந்தன், பிரமந்தனாறு, தருமபுரம், கனகாம்பிகைக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி, சோயா மீற், பால்மா, தேயிலை ஆகியவை அடங்கிய இப்பொதிகளை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்துள்ளார்.

கொரோனாப் பெருந்தொற்று கடந்த ஆண்டு ஆரம்பித்த காலப் பகுதியில் இருந்து தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இப்பணியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் மெய்நிகர் உரையரங்கு 29-08-2021 அன்று நடைபெற்றபோது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் மீளெழுச்சி - நடந்ததும் நடக்கப்போவதும் என்ற தலைப்பில் போரியல் ஆய்வாளர் திரு. இரவி பிரபாகரன் (அருஸ்) அவர்கள் ஆற்றிய உரையின் முழுமையான காணொலி 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் மெய் நிகர்  உரையரங்கு  29.08.2021   அன்று நடைபெற்றபோது இலங்கையில் கொரோனாவுக்குப் பின்னரான அரசியல் - நடப்பதும் நடக்கப்போவதும் என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் திரு. குணா கவியழகன் அவர்கள் ஆற்றிய உரையின் முழுமையான காணொலி