பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு

கொட்டும் மழையின் மத்தியிலும் சிறப்பாக நிகழ்ந்தேறியது

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு 12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.00 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை பருத்தித்துறை வீதியில், நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் 'தமிழ் மக்களும் செம்மணியும்' என்ற தலைப்பில் சுயாதீன ஊடகவியலாளர் து. ஜெயராஜ் (ஜெரா), 'தமிழ் மக்களும் தேசிய மக்கள் சக்தியின் ஒரு வருடகால ஆட்சியும்' என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், 'தமிழ் மக்களும் புதிய அரசியல் அமைப்பும்' என்ற தலைப்பில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உரையாற்றியிருந்தார்கள்.

செம்மணிப் படுகொலைகள் தொடர்பான கவிதை வாசிப்பும் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் கொட்டும் மழையின் மத்தியிலும் மண்டபம் நிறைந்த அளவுக்குப் பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.