விடுதலை அரசியலில் பண்பாட்டின் வகிபாகம் இன்றியமையாதது

ஆடிப்பிறப்பு விழாவில் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

விடுதலைக்காகப் போராடும் இனமொன்று மக்களை எழுச்சி கொள்ளவைத்து ஒருங்கிணைக்கத் தேசிய வாதத்தை முன்னிலைப்படுத்துகின்றது. இதில் அந்த இனத்தேசியத்தின் கூறுகளான மொழி, பாரம்பரிய நிலபுலங்கள், பண்பாடு ஆகியவை முதன்மை பெறுகின்றன. ஆனால், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் மொழி, நிலம் பற்றிப் பேசுகின்ற அளவுக்கு பண்பாட்டைக் கருத்திற் கொள்ளுவதில்லை. பண்பாட்டை உள்வாங்காத தேசியவாதம் முழுமை பெறாது. அதுவும் விடுதலை அரசியலில் பண்பாட்டின் வகிபாகம் மிகவும் இன்றியமையாதது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா கடந்த வியாழக்கிழமை (17.07.2025) நாவற்குழி முத்தமிழ் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு இனத்தின் தனித்துவமான பண்பாட்டின் வெளிப்பாடுகளாகவே விழாக்களும் பண்டிகைகளும் அமைகின்றன. தமிழ் மக்களின் அறிவு ரீதியான காலக்கணிப்பீட்டையும் பகிர்ந்துண்ணும் ஆரோக்கிய உணவுப் பண்பாட்டையும் பறைசாற்றுகின்ற பண்டிகைகளாகத் தைப்பொங்கலும் ஆடிப்பிறப்பும் கொண்டாடப்படுகின்றன. சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையான காலப்பகுதி உத்தராயண காலம் எனவும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆடி முதல் மார்கழி வரையான காலப்பகுதி தட்சணாயண காலம் எனவும் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில் உத்தராயண காலத் தொடக்கம் தைப்பொங்கல் ஆகவும், தட்சணாயண காலத்தொடக்கம் ஆடிப்பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் அளவுக்கு ஆடிப்பிறப்பு இப்போது கொண்டாடப்படுவதில்லை. ஆடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய காலமொன்றும் இருந்தது. ஆனால், இன்று விடுமுறை இல்லை. 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!' என்ற நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் மாத்திரம்தான் பாடப்படுகின்றது. தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கிலாவது கல்வியமைச்சு ஆடிப்பிறப்பு நாளுக்கு விடுமுறையை வழங்கி அதற்கு மாற்றீடாக சனிக்கிழமை ஒன்றில் பாடசாலையை நடாத்துவதற்கு முன்வரவேண்டும். அப்போதுதான் எமது இளைய தலைமுறைக்கு ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் விளங்கும்.

தமிழ்ப்பண்பாடு ஒருபுறம் சிங்களபௌத்த மேலாதிக்கத்தினாலும் இன்னொருபுறம் உலகமயமாக்கலினாலும் அதன் அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறது. இவற்றோடு எமது அக்கறையின்மையினாலும் நாம் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்து வந்த பண்பாட்டு விழுமியங்களும் பாரம்பரிய விழாக்களும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருதேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்யும் அளவு கோல்களில் அது பேசும் மொழி, அதன் வாழிடம் என்பனவற்றுக்கு நிகராக அதன் தனித்துவமான பண்பாடும் உள்ளது. இதனைத் தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் கருத்தில் எடுத்துப் பண்பாட்டுச் செயற்பாடுகளை மக்களிடையே எடுத்துச்செல்வதற்கு முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.