ஊடக அறிக்கை - Press Release

மாவீரர்களின் நினைவுநாளை ஆயர்மன்றம் மாற்றியமைப்பது

துயிலுமில்லங்களைப் படையினர் தகர்த்தமைக்கு ஒப்பானது


முடிவைப் பரிசீலனை செய்ய ஐங்கரநேசன் கோரிக்கை


இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும். இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும். அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம் போரால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுநாளாக நொவம்பர், 3ஆவது சனிக்கிழமையைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் இன்று திங்கட்கிழமை (15.11.2021) விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் நினைவாகவும் போரால் இறந்த பொதுமக்களின் நினைவாகவும் ஆண்டுதோறும் நொவம்பர் மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையைப் பொது நினைவுநாளாகக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இறந்தோரை நினைவுகூரும் நாள் ஒவ்வொரு வருடமும் நொவம்பர் மாதத்தில் வந்தாலும் அதற்குப் பலதடைகள் இருந்து வருகின்றமையே இதற்கான காரணமெனவும் தெரிவித்துள்ளது. தமிழ்மக்கள் போராடி மடிந்த வீரமறவர்களின் நினைவாக நொவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளையும், போரால் இறந்த பொதுமக்களின் நினைவாக மே 18 இல் முள்ளிவாய்க்கால் தினத்தையும் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்து வரும் நிலையில் ஆயர் மன்றத்திடமிருந்து இக்கோரிக்கை எழுந்துள்ளது.

கூட்டுப் பிரார்த்தனைகளைப்போன்று கூட்டு அஞ்சலிகளுக்கும் வலிமை மிக அதிகம். இதனாலேயே வெவ்வேறு காலப்பகுதிகளில் இறந்தாலும் போராடி மடிந்தவர்களுக்கான கூட்டு நினைவுநாளாக நொவம்பர் 27உம், போரில் மடிந்த பொது மக்களுக்கான கூட்டு நினைவுநாளாக மே 18உம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டு நினைவுநாளுக்கான இத்திகதிகள் எழுந்தமானமான தெரிவுகள் அல்ல. ஒவ்வொரு திகதியும் தன்னகத்தே தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான வரலாறுகளைப் பொதிந்து வைத்திருக்கிறது. இத்தினங்கள் தமிழ்த்தேசிய இனத்தின் வலிமிகுந்த போராட்ட வரலாற்றைச் சந்ததிகள் தோறும் கடத்தும் வரலாற்றுக் கடத்திகளாகும்.

இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும். இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும். அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைச் சர்வதேசங்களுக்கு எடுத்துச்சென்ற வெள்ளாடைப் போராளிகளாகக் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குருவானவர்கள் பலர் இருந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் சார்ந்த அமைப்பிடமிருந்து கெடுபிடிகளைக் காரணங்காட்டி இக்கோரிக்கை எழுந்திருப்பது தமிழ் மக்களிடையே பெருங் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, ஆயர் மன்றம் தங்களது இந்த முடிவை மீள்பரிசீலனை செய்து, தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் இறந்த தங்கள் தலைவர்களின் நினைவுகளைக் கார்த்திகை வீரர்கள் தினமாக வெளிப்படையாகவே கடைப்பிடிப்பதைப்போன்று தமிழ்மக்களும் போரில் இறந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் நினைவுநாட்களைக் கடைப்பிடிக்கும் உரித்துடையவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்குத் தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

நாகவிகாரையின் நாட்டாண்மையை

ஆரியகுளத்தில் அனுமதிக்க முடியாது

-பொ. ஐங்கரநேசன் கண்டனம்


யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது. குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், இப்போது குளத்தின் பருத்தித்துறை வீதிப்பக்கமாக நடைபாதை அமைக்கப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்துமாறும், குளத்தைச் சுற்றுலாத் தேவைகளின் பொருட்டுப் பயன்படுத்தக்கூடாது என்றும் மாநகர முதல்வருக்குக் கடிதம் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளார். குளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் இத்தகைய நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆரிய குளத்தின் புனரமைப்புப் பணிகளில் அண்மைக்காலமாக நாகவிகாரை தலையிட்டு வருவது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் இன்று திங்கட்கிழமை (25.10.2021) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆரியகுளம் நாகவிகாரைக்கு உரித்தான குளம் அல்ல. ஆன்மீகத் தேவைகளின் பொருட்டு வேறு ஆலயங்களால் உருவாக்கப்பட்ட குளமும் அல்ல. இது மழைநீர் சேகரிப்பு மற்றும் வெள்ள நீர்முகாமைத்துவத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த அறிவைப் பறைசாற்றுகின்ற பண்டைய குளங்களில் ஒன்றாகும். வேறு குளங்களில் இருந்து படிமுறைகளில் நிரம்பிவழிகின்ற மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டும், மிகை மழைநீரைக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் யாழ்நகர் வெள்ளத்தினுள் மூழ்காதிருக்கும் பொருட்டும் அமைக்கப்பட்ட குளம் ஆகும்.

ஆரியகுளம் தொடர் பராமரிப்பின்மையால் நாற்றமெடுக்கும் கழிவுக்குளமாக மாறி நிலத்தடி நீர் மாசுபாட்டையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வந்ததால் இது புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பலதரப்பும் பலகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ள யாழ் மாநகரசபை, குளம் யாழ்நகர மையத்தில் நுழைவாசலில் அமைந்திருப்பதால் அதனை மக்களைக் கவரும் சூழல்சார் சுற்றுலா மையமாக அமைத்து வருகிறது. இதனை விரும்பாத விகாராதிபதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்.

ஆரியகுளத்தில் ஒரு காலத்தில் பிக்குகள் நீராடினார்கள் என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம் குளத்தின் மீது உரிமை கொண்டாட முயலும் விகாராதிபதி அபிவிருத்திப் பணிகளை நிறுத்துவதற்கு அல்லது தமக்குரியதாக மாற்றி அமைப்பதற்கு யாழ்மாநகர சபையை வற்புறுத்தி வருகிறார். இலங்கையில் பௌத்தத்துக்கே முதலிடம் என்ற வகையில் இவர் யாழ்மாநகர சபையின் மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் கூடும். ஆனால், யாழ்மாநகர சபை குளத்தின் அருகேயுள்ள மக்கள் குடியிருப்புகளினதும் வணக்கத் தலங்களினதும் இயல்பு நிலையைச் சீர்குலைக்காத வகையிலும், பண்பாட்டுப் பிறழ்வுகளை ஏற்படுத்தாத வகையிலும் அபிவிருத்திப் பணிகளை உறுதி செய்துகொண்டு எவ்விடர்வரினும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்த

பசுமை அமைதி விருதுகள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வழங்குகிறது


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களிடையே சூழல் பொது அறிவுப் போட்டிப் பரீட்சையினை நடாத்தி நாட்டுப் பற்றாளர், சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளை வழங்கவுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில்,

கொரோனாப் பெருங் கொள்ளைநோய் இயற்கையை நாம் அழித்தால் இயற்கையால் நாம் அழிவோம் என்ற வலுவான பாடத்தை எமக்குப் போதித்துள்ளது. இயற்கையை நாம் மென்மேலும் சூறையாடினால் கொரோனாப் பேரிடரைவிடப் பெரும் பிரளயத்துக்குள் உலகம் தள்ளப்படும் என்று ஐக்கியநாடுகள் சபை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும், இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி இயற்கைச் சூழலை நாம் அபிவிருத்தியின் பெயராலும் உலகமயமாக்கலின் பெயராலும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறோம்.

இந்த ஆக்கிரமிப்பை நிறுத்திச் சூழலுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகச் செய்து கொண்டால் மாத்திரமே பேரழிவில் இருந்து எம்மையும் பாதுகாத்து உலகத்தையும் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பசுமை அமைதி விருதுகளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்படியாக மாணவர்களிடையே சூழல் பொது அறிவுப் போட்டிப் பரீட்சையினை நடாத்தி நாட்டுப் பற்றாளர், சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகள் வழங்கப்படவுள்ளன.

பரீட்சை இணையவழியூடாக 03.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரம் முன்னிரவு 7.00 மணி தொடங்கி 8.30 மணிவரை நடைபெறவுள்ளது. 100 பல்தேர்வு வினாக்களைக் கொண்ட இப் பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் மாணவர்கள் தோற்ற முடியும். பரீட்சையில் சித்தி அடையும் அனைவருக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழ் வழங்கப்படும். சிறப்புச் சித்தி அடைபவர்களுக்குச் சான்றிதழோடு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொதியும், முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தினால் ஆன பசுமை அமைதி விருதுகளும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.

சூழல் பொது அறிவுப் போட்டிப் பரீட்சைக்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றிருக்கும். இப்பரீட்சையில் இலங்கையை வசிப்பிடமாகக் கொண்ட எவரும் கலந்துகொள்வதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இலங்கைக்கு வெளியே வாழ்பவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள். எனினும், இவர்கள் முதல் மூன்று பசுமை அமைதி விருதுகளுக்கும் உரித்துடையவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.

இப் பரீட்சைக்குத் தோற்ற விரும்புபவர்கள் www.tamilnationalgreen.org என்ற இணையதளத்தின் மூலம் 27.09.2021இற்கு முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். சிறப்புப் பரிசுகளையும் விருதுகளையும் தீர்மானிப்பதற்கு புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஒரு தொகுதி மாணவர்கள் தேவையேற்படின் இரண்டாவது சுற்றுப் பரீட்சைக்கும் தோற்ற நேரிடலாம். இதுபற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் கார்த்திகை மாதம் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் நடாத்தப்படவுள்ள வடமாகாண மரநடுகை மாத நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கள சமரவீர - பேரினவாதச் சேற்றில் மலர்ந்த வெண்தாமரை

பொ. ஐங்கரநேசன் இரங்கல்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர; தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாறு வழங்கப்படாத நிலைமையிலேயே அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்கள் எனத் தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட மங்கள சமரவீர பேரினவாதச் சேற்றில் மலர்ந்த ஒரு வெண்தாமரை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி பொ. ஐங்கரநேசன் இன்று செவ்வாய்க்கிழமை (24.08.2021) வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரங்கற் செய்தியில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

மங்கள சமரவீர பிற்காலத்தில் தேர்தல் அரசியலில் இருந்து விலகி கட்சி அரசியலைத் தாண்டி கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். இக்காலப்பகுதியில் தன்னைத்தானே சுயபரிசீலனை செய்பவராக விளங்கிய இவர், நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து தான் உட்பட அனைத்து அரசியல் வாதிகளும் அரசாங்கங்களும் இனவாதத்தை ஆதரித்த வாக்காளர்களும் பொறுப்புக்கூற வேண்டும்; அரசாங்கம், எதிர்க்கட்சி, பேரினவாதம் உள்ளிட்ட அனைத்துமே தோல்வியடைந்து விட்டது என்ற முடிவுக்கு வந்திருந்தார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது. இது தற்போது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை மாத்திரமே வழங்கக்கூடிய வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது என்று தெரிவித்த மங்கள சமரவீர தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் இதயசுத்தியுடன் உழைத்தவர் ஆவார். சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது முன்னெடுத்த புதிய அரசியல் யாப்பை சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ள வைக்க வெள்ளைத் தாமரை இயக்கத்தினூடாகக் கடுமையாக உழைத்திருந்தார்.

தற்போதைய அரசாங்கம் ஏனைய பலம்வாய்ந்த சக்திகளைப் புறந்தள்ளிச் சீனாவுடன் மாத்திரம் நெருங்கிப் பயணிப்பதால் வருங்காலத்தில் பூகோள அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டி நேரிடும் என்று எச்சரித்த மங்கள சமரவீர சீனாவுடனும் இந்தியாவுடனும் இலங்கை சமாந்தரமான நெருக்கத்தைப் பேணுவது அவசியமாகும், என்றும் சுட்டிக்காட்டி வந்தார். நாடு பேரினவாதச் சகதியிலும் கொரோனாவின் கோரப்பிடியினுள்ளும் சிக்கித்தவிக்கும் நிலையில் மங்கள சமரவீரவை கொரோனா பலிகொண்டிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆத்மா இயற்கை அன்னையின் மடியில் சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான

காலக்கெடு யூலை 30ஆம் திகதி

தவறவிடவேண்டாம் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வேண்டுகோள்


இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் புதிய வாக்காளர்களாகத் தகுதி பெற்றுள்ளவர்கள் தங்கள் பெயர்களைத் தேருநர் இடாப்பில் சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை யூலை 30ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளவேண்டும் என அறிவித்துள்ளது. மேலும், கொரோனாப் பேரிடர் காரணமாக அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று படிவங்களை விநியோகித்து வாக்காளர்களைப் பதிவு செய்யும் வழமையான நடைமுறை இந்த ஆண்டு நடைபெறாது என்றும் தகுதி பெற்ற வாக்காளர்கள் தாமாகவே கிராம சேவையாளரிடம் சென்று படிவங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, பதிவு செய்வதற்கு இன்னும் இரண்டொரு தினங்களே இருக்கும் நிலையில் புதிய வாக்காளர்கள் இந்தக் காலக்கெடுவைத் தவற விட்டுவிடவேண்டாம் எனத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மகேசன் கஜேந்திரன் இன்று திங்கட்கிழமை (26.07.2021) அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வாக்குரிமை இலங்கைக் குடிமகனாகவுள்ள ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமையாகும். இலங்கையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டுவரும் யூன் 01 ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்த இலங்கைக் குடிமகனாகவுள்ள எவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். தேருநர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்வதன் மூலம் மாத்திரமே இவ்வாக்குரிமை உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடையும் போது தேர்வாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும். உதாரணமாக, 1989ஆம் ஆண்டு யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததன் காரணமாகத் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைவடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி யாழ் மாவட்டத்துக்கு 6 பாராளுமன்ற ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லுதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களில் மாத்திரம் குறைவை ஏற்படுத்தும் ஒன்றல்ல. மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதி, மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை போன்றவற்றிலும் குறைவை ஏற்படுத்தும் ஒன்றாகும். அந்தவகையில், வாக்களிக்கத் தகுதிபெற்ற அனைவரும் தங்களை வாக்காளராகப் பதிவு செய்தல் ஒரு தேசிய கடமையாகும். எனவே, யூலை 30 ஆம் திகதிக்கு முன்பாக புதிய வாக்காளர்கள் அனைவரும் தமது பகுதிக் கிராமசேவையாளரிடம் சென்று தவறாது பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை

பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம்

- பொ. ஐங்கரநேசன் கடுங்கண்டனம்


வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவிவகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம செயலாளராகப் பணியாற்றுவதற்கு இலங்கை நிர்வாக சேவையில் உயர்தகைமை பெற்ற தமிழ் அதிகாரிகள் பலருள்ள நிலையில் அவர்களைப் புறமொதுக்கி இந்நியமனம் இடம்பெற்றுள்ளது. தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொ.ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை (21.07.2021) வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தொடர் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்; வலுப்பெற்றதன் விளைவாகவே இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறைமை தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபைக்குப் பிரதம செயலாளராகச் சிங்கள இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பது மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களையே நிராகரிக்கும் ஓர் இனவாதச் செயற்பாடாகும்.

மாகாண சபைகளுக்கான 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதம செயலாளரை நியமிப்பது ஜனாதிபதிதான் எனினும் அந்நியமனம் மாகாண முதல்வரின் உடன்பாட்டுடனேயே செய்யப்படல் வேண்டும். வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த உடனேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்தியிருக்கவேண்டிய அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கபடநோக்கங்களுடன் தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது. தேர்தலுக்கு முன்பாக மாகாணசபைக்கூடாக தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகக் குறைந்தபட்ச அதிகாரங்களையும் பிடுங்கிவிட வேண்டும் என்பதில் குறியாகச் செயற்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தனித்துவமான மொழி, பண்பாடு, பாரம்பரிய வாழிடம், ஆள்புலம் என்பனவற்றைக் கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் தனியானதொரு தேசம் ஆகும். ஆனால், இதனை நிராகரித்து ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்று முழக்கமிட்டு வரும் பேரினவாதம் தற்போது ‘ஒரே நாடு ஒரே நிர்வாகம்’ என்று ஒடுக்குமுறையின் அடுத்த கட்டத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சிகரமான இத்தகைய திட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கான சரியான எதிர்வினைகளை ஆற்றுவதற்குக் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அதிகாரங்களைப்

பறித்துவிட வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரம்

பொ. ஐங்கரநேசன் கண்டனம்

இலங்கையின் மாகாண சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் இயங்கி வந்த ஒன்பது பொது மருத்துவமனைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்க்கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் நான்கு பொது மருத்துவமனைகளும் அடங்கும். அரசியலமைப்பு மாற்றம், கொரோனாப் பேரிடர் போன்றவற்றைக் காரணங்காட்டி மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தாது பிற்போட்டுவரும் அரசாங்கம் தேர்தலுக்கு முன்பாகவே அதற்குரிய அதிகாரங்களைப் பறித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மாவட்டப் பொதுமருத்துவமனைகளை மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்கும் சுகாதார அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை (16.06.2021) விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் மாகாணசபை முறைமை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் விளைவாக இந்திய அரசு இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட தொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இது ஒருபோதும் தீர்வாகாது என்றபோதும் இதனை ஒரு ஆரம்பப்புள்ளியாகக் கருதி தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைப் புறந்தள்ளி மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட அற்பசொற்ப அதிகாரங்களைக்கூடத் தோலிருக்கச் சுளை பிடுங்கும் கதையாகப் பேரினவாத அரசாங்கம் பறித்து வருகிறது.

மாகாண நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த பிரதேசசெயலர்களை மத்திய அரசின் மாவட்டச் செயலகங்களுக்குள் உள்ளீர்த்த அரசாங்கம், பின்னர் கமநல சேவைகள் திணைக்களத்தையும் பறித்துக்கொண்டது. இன்று வடக்கு மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தரக் குளங்கள் எதிலும் மாகாண நிர்வாகம் நேரடியாகத் தூர்வாரவோ அபிவிருத்திகளை மேற்கொள்ளவோ இயலாது. மாகாணத்துக்கென்று எஞ்சியுள்ள பெருங்குளங்கள் சிலவற்றையும் மாகாணங்களுக்கு இடையில் நீரைப் பங்கிடுதல் என்ற செயற்றிட்டத்தின் மூலம் பறிப்பதற்கான பாசனத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சமான நோக்கு என்ற செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 25 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக்கிய அரசாங்கம் தற்போது அடுத்தகட்டமாக 32 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக மாற்றும் நோக்குடன் அடையாளப்படுத்தியுள்ளது. வடக்குக் கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பறிகொடுப்பதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அது அவர்களது அரசாங்கமே.

மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்குத் தாரைவார்ப்பதில் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் துணைபோவது பெருஞ்சோகம். மாகாண நிர்வாகத்துக்கு மத்தியிடமிருந்து மென்மேலும் அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்துப் பலப்படுத்த வேண்டிய இவர்கள் மாகாணத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்தூதுபவர்களாக இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்த்தேசியப் பற்றுறுதியுடன் இயங்கும் அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தின் கரவான இந்த முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம்

மே தினச் செய்தியில் பொ. ஐங்கரநேசன்


முதலாளி வர்க்கத்தால் ஈவிரக்கமின்றி நாள் முழுவதும் வேலை வாங்கப்பட்ட தொழிலாளிகள் இரத்தம்சிந்தி நிகழ்த்திய நெடிய போராட்டத்தின் விளைவாக வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் இந்த வெற்றி ஆண்டுதோறும் மே முதலாம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக மில்லியன் கணக்கான தொழிலாளிகள் தொழில் வாய்ப்பை இழந்து நாள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கும் நிலையே நீடிக்கிறது. கொரோனா வைரஸ் விலங்கு வைரசுக்களில் இருந்து உருமாறிய திரிபு என அடையாளம் காணப்பட்ட நிலையில், வலிய பாடம் ஒன்றை எமக்குப் போதித்திருக்கிறது. அது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதே எமது உழைப்புக்கான உத்தரவாதம் என்பதாகும்.

மே தினம் தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இன்று சனிக்கிழமை (01.05.2021) விடுத்திருக்கும் ஊடகச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அந்த ஊடகச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாப் பெருங்கொள்ளை நோய் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்ததோடு இதைவிடப் பன்மடங்கு அதிகமானோரின் தொழில் வாய்ப்பைப் பறித்துள்ளது. இவர்களிற் பெரும்பான்மையானோர் தினக்கூலியைத் தவிர வேறு எந்தக் கொடுப்பனவுகளையோ சலுகைகளையோ பெறாத முறைசாராத் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களைக் கொரோனா தாங்கொணாத வறுமையின் பிடிக்குள் தள்ளி வருகிறது.

திறந்த வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற முறைசாராத் தொழிலாளர்களின் எதிர்காலம் மென்மேலும் கேள்விக்குறியாகி வருகிறது. பூமி சூடாகி வரும் சூழற் பிரச்சினையால் வெப்ப அலைகளின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு வேலை நேரத்தைக் குறைப்பதுதான் இவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்னும் 9 ஆண்டுகளில் 80 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழப்பர் என்பது இவர்களின் கணிப்பு.

உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு முன்னெடுத்த போராட்டமே எட்டு மணி நேர வேலை என்ற வெற்றியை அவர்களுக்குப் பெற்றுத்தந்துள்ளது. அந்த வேலையைக் கொரோனா, காலநிலை மாற்றம் மற்றும் பிற சூழற் பாதிப்புகளால் பறிகொடுக்காதிருப்பதற்கும் போராட வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரம் தொழிலாளர்களுக்கு மாத்திரமல்ல; சுற்றுச்சூழலுக்கும் எதிரானது. வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் சூழலைப் பாதிக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் நிராகரிப்போம். செம் மே தினம் இனி செம் பசுமை மே தினம் ஆகட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக் அவர்கள் நாட்டிய மரங்களால்

என்றென்றும் எம் நினைவில் வாழ்வார்

பொ.ஐங்கரநேசன் அஞ்சலி


நடிகர் விவேக் அவர்கள் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிச் சின்னக் கலைவாணர் என்று தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்றவர். வெள்ளித் திரையில் கிடைத்த புகழைக் கட்டாந்தரையில் மரங்களை நடுகை செய்வதற்குப் பயன்படுத்திப் பசுமைக் காவலர் என்று பெயர் பெற்றவர். அவர் புகழுடம்பு மறைந்தாலும் அவர் நாட்டிய மரங்களால் எம் நினைவில் என்றென்றும் வாழ்வார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான விவேக்கின் மறைவு குறித்து பொ.ஐங்கரநேசன் இன்று சனிக்கிழமை (17.04.2021) வெளியிட்டிருக்கும் அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அஞ்சலிக்குறிப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நடிகர் விவேக் நகைச்சுவையில் தனக்கெனத் தனியான பாணியை உருவாக்கியவர். ரசிகர்களைச் சிரித்துவிட்டு மட்டும் போகாமல் சிந்திக்கவும் தூண்டியவர். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் மூட நம்பிக்கைகளைக் களைவதற்குத் தன்நடிப்பாற்றலால் விழிப்புணர்வு ஊட்டியவர் . நிழலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சீர்திருத்தக் கருத்துகளின் பரப்புரையாளராகச் சளைக்காது பணியாற்றியவர்.

பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவுரைப்படி சூடாகும் பூமியைக் குளிர்விக்கும் நோக்கில் ஒருகோடி மரங்களை நடுகை செய்யும் பணியை ஆரம்பித்தவர். கிறீன் கலாம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக முப்பத்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்த நிலையில் மரணம் அவரை அரவணைத்துக் கொண்டது.

மரங்களை நடுகை செய்பவர்களின் நினைவுகளுக்கு மரணம் இல்லை. அவர்கள் நடுகை செய்த மரங்களாலும், அம்மரங்களிலிருந்து வீழ்ந்து பரவும் விதைகளின் துளிர்ப்பாலும் சந்ததிகள் கடந்தும் அவர்கள் நினைவிற்கொள்ளப்படுவார்கள். விவேக் அவர்களின் நாமமும் பசுமை உலகில் அழியாது நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக்கூட

தமிழர்களிடம் விட்டுவைக்க அரசாங்கம் தயாராக இல்லை

மணிவண்ணன் கைது குறித்து ஐங்கரநேசன் கடுங்கண்டனம்


யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கவும் முயன்றதாலேயே இவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். யாழ் மாநகர சபையில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களைக் கண்காணிப்பதற்கென உருவாக்கப்பட்ட பணிக்குழாமுக்கு வழங்கப்பட்ட நீலநிறச் சீருடைகள் விடுதலைப்புலிகளின் காவல் துறையின் சீருடைகளை ஒத்திருப்பதாகக் குற்றம் சாட்டியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கை மாநகர சபைகள் சிலவற்றில் பணியாளர்கள் இதே நீலநிறச் சீருடைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மணிவண்ணன் அவர்களைக் கைது செய்ததின் மூலம் சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அற்ப அதிகாரத்தைக்கூட தமிழர்களிடம் விட்டுவைக்கத் தான் தயாராக இல்லை என்பதைப் பேரினவாத அரசாங்கம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் கைது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் பொ. ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (09.04.2021) நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடைகள் அவர்களுக்கே உரித்தான தனித்துவமான வரிகளை அடையாளமாகக் கொண்டவை. ஆனால், காவல்துறைக்கு அவர்கள் பயன்படுத்திய நீலநிறச் சீருடைகள் உலகப் பொதுவானவை. காக்கிச் சட்டைகள் மக்களின் மனங்களுக்கு அந்நியப்பட்டதாக உள்ளதால் மனங்களுக்கு மிகவும் நெருக்கமான உளவியல் நட்புமிக்க நீல நிறத்தைப் பெரும்பாலான நாடுகளில் காவல்துறையும் தனியார் பாதுகாப்புத் துறையும், இதர நிறுவனங்களும் சீருடைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், யாழ் மாநகர சபை நீலநிறச் சீருடையைத் தெரிவு செய்ததைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயல்வதாக அரசாங்கம் சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

உள்ளூராட்சிச் சபைகள் சுயாதீனமானவை. மாகாணசபைகளின் நிர்வாகத்தின்கீழ் இருந்தாலும் உள்ளூராட்சிச் சபைகளின் சுயாதீனத்தில் மாகாணசபைகள் தலையிடுவதில்லை. இந்நிலையில் மாகாணசபையின் கீழுள்ள மாநகரசபையின் சீருடை விடயத்தில் காவல் துறையின் மூலம் அரசாங்கம் தலையிடுவது அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது. சீருடையை வடிவமைத்த விடயத்தில் ஏதேனும் நிர்வாக ரீதியான முறைகேடுகள் இருப்பின் உள்ளூராட்சித் திணைக்களமே அதற்கான விசாரணையை மேற்கொள்ள முடியும். மாகாணசபைகள் இயங்காத நிலையில் ஆளுநர் இவ்விடயத்தில் தலையிட்டிருக்க முடியும். இதைத்தாண்டி பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இந்த விடயம் கையாளப்படுவதை அதிகாரப் பரவலைக் கோரும் சிறுபான்மை மக்களுக்குப் பேரினவாத அரசாங்கம் விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருத வேண்டும்.

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ்க் கட்சிகள் இதனை நியாயப்படுத்தக்கூடும். ஆனால், தங்களுக்கு இடையே முரண்பாடுகள், பிளவுகள் இருந்தாலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் யாவும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைதுக்கு எதிராகவும் அவரின் விடுதலையை வேண்டியும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின்

நியாயத் தராசு : ஆயர் இராயப்பு யோசப்

பொ. ஐங்கரநேசன் அஞ்சலி


தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அது கருக்கொண்ட காலம் முதல் கத்தோலிக்க மதகுருமார்கள் பலர் காத்திரமான பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். இவர்களில் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை முதன்மையானவர். தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மதத்தின் குரலாக அல்லாமல் இனத்தின் குரலாகவே ஒலித்தவர். அதேசமயம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசாகவும் விளங்கியவர். மதத்தையும் தாண்டிய தனது நடுநிலை தவறாத இனப்பற்றால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின்பால் சர்வதேசங்களின் பார்வையைக் குவித்தவர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பொ. ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (02.04.2021) வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அஞ்சலிக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை நெஞ்சுரம் மிக்கவர். முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பாதுகாப்பின் பொருட்டுக் கூடவே சென்ற பிரான்சிஸ் யோசப் அடிகளார் உட்படத் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுக்கொண்ட பல குருமார்கள் காணாமல் ஆக்கப்பட்டமை முன்னுதாரணங்களாக உள்ளன. இருந்தபோதும், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனவழிப்பே என்று சொல்லி சரியான புள்ளிவிபரங்களுடன் உலகுக்கு முரசறைந்தவர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆயுதப் பலத்தால் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்தார். அதன் பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தனது ஆன்மீகப் பலத்தால் ஒன்றிணைத்திருந்தார். இலங்கைத்தீவின் சிங்கள பௌத்த பேரினவாதம் மென்மேலும் வலுப்பெற்று வரும் இன்றைய சூழ்நிலையில் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். தமிழ்த் தேசியக் கட்சிகள் கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதே ஆண்டகைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம்

சூழற்படுகொலையில் கோட்டா அரசாங்கம்

- பொ. ஐங்கரநேசன் கண்டனம்


இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இவற்றை நிர்மாணிப்பதற்காகச் சீன நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. உலகின் உயிர்ப் பல்வகைமை மிக்க வெகுசில இடங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படும் சிங்கராஜாக் காட்டைச் சீர்குலைப்பது சூழற்படுகொலையே அன்றி வேறல்ல. இனப்படுகொலையாளிகளான இவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே இல்லை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காடழிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ. ஐங்கரநேசன் இன்று செவ்வாய்க்கிழமை (23.03.2021) நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்த இடமான அம்பாந்தோட்டையின் வீரக்கெட்டிய நகரத்துக்கு ஜின் கங்கையில் இருந்தும் நிலவள கங்கையில் இருந்தும் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே சிங்கராஜக் காட்டின் உள்ளே இரண்டு நீர்த்தேக்கங்களைக் கட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சரும் ராஜபக்ச சகோதரர்களில் ஒருவருமான சமல் ராஜபக்ச அவர்கள் அழிக்கப்படும் காட்டுக்குப் பதிலாகப் புதிதாகக் காடு உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான வயதுடைய இந்தக் காட்டை எந்தப் புதிய காட்டாலும் ஈடுசெய்ய முடியாது.

இலங்கையின் மிகமுக்கிய பன்னிரு ஈரவலயங்களில் ஒன்றான நீர்கொழும்பின் முத்துராஜவெல கண்டற் சூழலும் அழிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த முத்துராஜவெல வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து இப்போது நகர அபிவிருத்திச் சபையிடம் கைமாற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் சரணாலயத்தின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டு தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. ஒருபுறம், ஏற்கனவே கொழும்பின் குப்பைகளால் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் முத்துராஜவெல ஈரநிலம், இன்னொரு புறம் அபிவிருத்தியின் பெயராலும் நிரப்பப்படவுள்ளது.

இலங்கையின் அரசியற் ஸ்திரத்தன்மை பற்றிக் கருத்திற் கொள்ளாமல் சீன சார்பு நிலையெடுத்து இலங்கையை வல்லரசுகளின் போட்டிக் களமாக்கியுள்ள அரசாங்கம் இப்போது இலங்கையின் சூழல் ஸ்திரத் தன்மையையும் சீர்குலைப்பதில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றது. இவை தென்னிலங்கைச் சம்பவங்கள் என்று நாம் பேசாது இருக்க முடியாது. இயற்கைச் சூழலுக்கு எல்லைகள் இல்லை. இவை தென்னிலங்கையை மாத்திரம் அல்ல; ஒட்டுமொத்த இலங்கையையும், உலகையும் பாதிக்கப்போகின்ற சூழற் பேரழிவுகள். இவற்றின் காரணமாகத் தென்னிலங்கையில் காடழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பேராட்டத்தை நாம் வரவேற்கிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பான நியாயப்பாடுளை ஏற்றுக் கொண்டவராகவோ, இனப்படுகொலைக்கு நீதி வேண்டுபவராகவோ, வடக்கு கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளச் சுரண்டல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராகவோ இருந்தவர் அல்லர். ஆனாலும் சூழலியம் என்ற கோட்பாட்டைத் தேசியத்தின் ஒரு கூறாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள சூழற்படுகொலைக்கு எதிரான போராட்டத்துக்குத் தனது தார்மீக ஆதரவை வழங்குகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்குக்காணி ஆவணங்களின் இடமாற்றம்

தமிழ் நிலங்களை அபகரிக்கும் கபடத்திட்டம்

பொ. ஐங்கரநேசன் கண்டனம்


யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் வடமாகாணத்துக்கான அலுவலகத்தில் இருந்து காணி ஆவணங்கள் அநுராதபுர அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு இடம்மாற்றப்படுவதற்குப் பலரும் எதிர்ப்பை வெளியிட்டபோதும், இரவோடு இரவாக யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழ் நிலங்களை அபகரித்து தென் இலங்கை வாசிகளுக்குக் கையளிக்கும் அரசாங்கத்தின் கபடத் திட்டமே இதுவாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

வடக்கின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்கு இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் இன்று (15.03.2021) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வசமுள்ள காணிகள் அரச காணிகள் என்றாலும் இவை மக்களின் உறுதிக் காணிகள் ஆகும். இவை 1972ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அவர்களால் 50 ஏக்கர்கள் காணிக்கு மேல் ஒருவர் உரிமையாளராக இருக்க முடியாது என்று கொண்டுவரப்பட்ட நிலஉச்சவரம்புச் சட்டத்தின் காரணமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட காணிகள் வடக்கில் எமது மக்களால் கையளிக்கப்பட்ட ஏறத்தாழ 12,000 ஏக்கர் பரப்புடைய காணிகளின் ஆவணங்களே இப்போது அநுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிடமுள்ள வடக்கு மாகாணக் காணிகள் பற்றிய விபரங்கள் எவையும் வடக்கு மாகாண சபையிடம் இல்லை. வடமாகாணக் காணித் திணைக்களம், வடமாகாண ஆளுநர் அலுவலகம் இவை பற்றிய விபரங்களைக் கோரியபோதும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு இவற்றைத் தெரியப்படுத்த மறுத்ததோடு, மிகவும் இரகசியமாகக் காணிகளைச் சிங்கள மக்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, பளையில் சிங்கள மக்களுக்குக் காணிகள் ஒதுக்கப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரு இலட்சம் காணித் துண்டுகளைச் சுயதொழில் முனைவோருக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் வடக்கின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது, வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகளை வழங்கும் கரவான திட்டத்தின் முதற்படியேயன்றி வேறல்ல; இது, தமிழ் மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலேயே சிறுபான்மையினராக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு நிகழ்ச்சி நிரலின் ஓரங்கம் ஆகும். இக்காணிகள் வடக்கைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கப்படுவதைத் தமிழ்மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எப்பாடுபட்டேனும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரைப் போன்று இலங்கையிலும்

இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம்

பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கியநாடுகள் சபை தொடங்கி உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ள இந்த ஜனநாயகப் படுகொலையை இலங்கை மக்கள் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். விழித்துக்கொள்ளாவிடில் மியன்மாரைப் போன்று இலங்கையிலும் விரைவில் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறியுள்ளமை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் இன்று செவ்வாய்க்கிழமை (02.02.2021) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

பௌத்தம் பெரும்பான்மையாக உள்ள மியன்மாரில் இராணுவத்தால் சிறுபான்மையினராகிய ரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனவழிப்புத் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டில் மியன்மார் சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி அம்மையாரின் வெற்றி இந்தப் புலனாய்வுப் பொறிமுறைக்கு இடங்கொடுக்கும் என்று அஞ்சியே நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆதரவுடன் போட்டியிட்ட கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இராணுவம் சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் தாங்கள் நிகழ்த்திய தமிழின அழிப்புக்கு எதிரான கத்தி தங்கள் தலைக்கு மேல் எந்நேரமும் தொங்கிக்கொண்டிருப்பதை ராஜபக்க்ஷ சகோதரர்கள் நன்கு அறிவார்கள். இதனாலேயே, மீளவும் ஆட்சி பீடம் ஏறியதும் முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்த ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இப்போது, மனித உரிமைகள் பேரவை ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் நிலையில் பேரவையின் ஆணையாளர் இவ்விவகாரம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படல் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன் குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து அதற்கான தண்டனைகள் குறித்தும் பேசி வருகின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஜனாதிபதி ஆனவுடன் சிவில் நிர்வாகத்தைப் படிப்படியாக இராணுவமயப்படுத்தி வருகின்றார். தனது முன்னாள் இராணுவ சகாக்களை சிவில் நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாக நியமித்து வருகிறார். இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சர்வதேச ரீதியாகப் பலம்பெற்று வரும் நிலையில், அதிலிருந்து தப்புவதற்காக, எதனையுமே இராணுவ ரீதியான மனோநிலையுடன் அணுகும் ஜனாதிபதி முற்றுமுழுதான இராணுவ ஆட்சிக்குள் பிரவேசிக்க மாட்டார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. நடைபெற்றது தமிழினப் படுகொலையாயினும் அதன் பொருட்டு இலங்கையில் இராணுவம் மேலாதிக்கம் பெறுவது சிங்கள தேசத்துக்கும் உகந்தது இல்லை என்பதைச் சிங்கள மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர்

அடிபணிவதைவிடப் பதவி துறப்பதே மேலானது

பொ. ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த ஈனச்செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசற் கதவுகளைப் பூட்டி விளக்குகளை அணைத்துவிட்டுத் திருட்டுத்தனமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே செய்து முடித்திருக்கிறது. இதற்கு, சட்டவிரோத தூபி என்பதால் அழுத்தங்கள் காரணமாகவே அகற்ற வேண்டி ஏற்பட்டது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் விளக்கம் அழித்துள்ளார். துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது தொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் இன்று சனிக்கிழமை (09.01.2021) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை நிகழ்த்திய ராஜபக்ச சகோதரர்கள் அதற்கான சாட்சியங்களையும், தடயங்களையும் அழித்தொழிப்பதில் முழுவீச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அவர்தம் உறவினர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியைத் தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரைக் கொண்டே இடித்தழிப்பித்துள்ளனர்.

நினைவுத்தூபிகள் வெறுமனே சீமேந்தாலும் கற்களாலும் ஆன உயிரற்ற தூண்கள் அல்ல. கருங்கல்லாக இருக்கும் வரைக்கும் காலடியில் மிதிபடும் பாறையாகக் கருதப்படுகின்ற கருங்கல் தெய்வச்சிலையாக வடிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு புனிதம் பெற்று வணக்கத்துக்குரியதாக மாறுகின்றதோ அதேபோன்றுதான் நினைவுக்கற்களும் நினைவுத்தூபிகளும். இவற்றில் மரணித்துப் போனவர்களின் ஆன்மா குடிகொண்டிருப்பதாகவே அவற்றை அஞ்சலிப்பவர்கள் நம்புகிறார்கள்.

தமிழத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வரலாற்றுப் பங்களிப்பை நல்கிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் இழிசெயலால் தன் மீது கழுவ முடியாத கரியைப் பூசிக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், அரசின் சேவகர்களாக இருக்கும் அதேசமயம் அவர்கள் சார்ந்த இனத்தின் நலன்களையும் அபிலாசைகளையும் கருத்தில் கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அ. துரைராஜா அவர்கள் ஒரு துணைவேந்தராக பல்கலைக்கழகத்தை நல்வழி நடத்திச் சென்ற அதேவேளை, தமிழ் இனத்தின் அரசியல் விடுதலை குறித்த தெளிவான பார்வையுடனும் செயற்பட்டிருந்தார். அதனாலேயே அவர் மாமனிதராகப் போற்றப்படுகின்றார். இப்போதுள்ளவர்கள் மாமனிதர்களாக வேண்டாம்; குறைந்தபட்சம் மனிதர்களாகக்கூட நடந்திருந்தால் மரணித்தவர்களின் நினைவுகளைச் சுமந்துள்ள தூபியை இடிப்பதற்கான உத்தரவைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றியிருக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நல்லூர்ப் பிரதேசசபைக்கான தவிசாளர் தெரிவில்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடு

பொ. ஐங்கரநேசன் தெளிவுபடுத்தல்


நல்லூர்ப் பிரதேசசபையின் புதிய தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சியான ரெலோவின் உறுப்பினர் கௌரவ கு. மதுசுதன் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால், தவிசாளர் கௌரவ தா. தியாகமூர்த்தி அவர்கள் தங்களின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அவரை வீழ்த்தித் தான் தவிசாளராக வேண்டும் என்ற நோக்கில் இவர் இரண்டு தடவையும் பாதீடைத் தோற்கடிப்பதற்குத் தீவிரமாகச் செயற்பட்டிருந்தார். எமது உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாதீடைத் தோற்கடித்துத் தனக்கு ஆதரவை வழங்குமாறு கேட்டிருந்த இவர் பாதீடின்போது அதற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார். இதனாலேயே, அரசியல் அறத்தின் பாற்பாட்டு இவருக்கு எம்மால் வாக்களிக்க முடியாமற் போனது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர்ப் பிரதேசசபைத் தேர்தலில் புதிய தவிசாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்றது. இதுதொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடுபற்றி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும்,

ஜனநாயக ரீதியாகப் பதவியொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் வலுவான காரணங்கள் எதுவும் இல்லாமல் அரசியல் காழ்ப்பின் காரணமாகக் கவிழ்க்கக்கூடாது என்பது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும். அதன் அடிப்படையில் ஏனைய எதிர்க்கட்சிகள் யாவும் ஓரணியில் நிற்பதால் பாதீடு தோற்கும் என்று தெரிந்திருந்தும் பாதீடுக்கு ஆதரவாகவே நல்லூர்ப் பிரதேசசபையில் உள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்களும் இரண்டு தடவைகளும் வாக்களித்தார்கள்.

வடக்கு மாகாண சபையில் விவசாய அமைச்சர் பதவியை நான் துறந்தபோது இதற்கான நெருக்கடிச் சூழலை ஏற்படுத்திய தரப்பிலிருந்தே, கௌரவ முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் அவர்களைப் பதவி விலக்கக்கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் என்னைக் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டதோடு, என்னைப் பதவி விலகவேண்டாம், அமைச்சராக நான் பதவியைத் தொடரலாம் என்றும் தெரியப்படுத்தியிருந்தார்கள். இந்த இழிசெயலை நான் செய்ய விரும்பாததோடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாகக் கையெழுத்தும் இட்டிருந்தேன்.

இந்தச் சம்பவத்தை கௌரவ கு. மதுசுதன் அவர்களை ஆதரிக்குமாறு என்னைக் கேட்ட தரப்பினர்களிடம் நான் சுட்டிக் காட்டியிருந்ததோடு, ரெலோவின் தலைவர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம் அவர்களிடமும் பொருத்தமான பிறிதொரு வேட்பாளரை நிறுத்தினால் எமது ஆதரவை வழங்குவோம் என்றும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், பாதீடைத் தோற்கடிப்பதற்கு ஒத்துழைத்ததைப்போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ வேட்பாளரை மாற்றுவதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.

நல்லூர்ப் பிரதேசசபைத் தேர்தல் 2018இல் நடைபெற்றபோது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடனேயே தமிழரசுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்போது, இந்த அணிக்கு எதிராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கௌரவ செ. கஜேந்திரன் அவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் எமது கட்சியின் கருத்தியலின் அடிப்படையிலும் வெற்றி, தோல்வி பற்றிச் சிந்திக்காது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்திருந்தோம். ஆனால், ஜனநாயக ரீதியாகக் கௌரவ தா.தியாகமூர்த்தி அவர்கள் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அவருக்கு எமது உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பை எப்போதும் வழங்கி வந்துள்ளார்கள்.

இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாதீடைத் தோற்கடிப்பதற்குக் காரணமாக அமைந்தவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான கௌரவ ப. மயூரன் அவர்களுக்கு அவர் வெல்லுவாரா தோற்பாரா என்ற கணிப்பீடு எதுவுமின்றி அறத்தின்பாற்பட்டு எமது உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். புதிய தவிசாளராகப் பதவியேற்றுள்ள அவர் கட்சி முரண்பாடுகளைக் கடந்து சேவையாற்ற வேண்டும் எனவும் சபையின் உறுப்பினர்கள் மீளவும் ஒருதடவை பாதீடைத் தோற்கடிக்காது மக்கள் நலன் சார்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். தனிப்பட்ட அரசியல் வாதிகளை விடக் கட்சிகளின் நலன் முக்கியமானது. கட்சிகளின் நலனைவிட மக்களின் நலன் முதன்மையானது. இந்நலன்கள் யாவும் அரசியல் அறத்தின்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.