பசுமை இயக்கத்திடம் விதைகளை மீளளித்த விவசாயிகள்

மாண்புறு உழவர் சான்றிதழ் வழங்கிக் கௌரவிப்பு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தில் விதைகளைப் பெற்ற விவசாயிகள் அறுவடையின் பின்னர் விதைகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் மீள வழங்கும் மாண்புறு உழவர் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (24.09.2022) நவக்கிரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது விதைகளை மீளக்கையளித்த விவசாயிகள் மாண்புறு உழவர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் பிரதான இடத்தைப் பெற்றிருந்த சிறுதானியங்கள் தற்போது வழக்கொழிந்து வருகின்றன. சிறுதானியங்கள் வறண்ட நிலத்துக்குப் பொருத்தமான அதிக கவனிப்புத் தேவையில்லாத போசாக்கு நிறைந்த பயிர்களாகும். நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருக்கும் உணவுப்பற்றாக்குறைவைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சிறுதானியங்களை மீள மூடிசூட்டுவோம் என்ற கருப்பொருளில் இராசதானியத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இராசதானியத் திட்டத்தில் விதைகளைப் பெறும் விவசாயிகள் அறுவடையின் பின்னர் பெற்றுக்கொண்ட விதைகளின் இரட்டிப்பு மடங்கு விதைகளை ஏனைய விவசாயிகளுக்கு வழங்குவதற்காகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் மீளக் கையளிக்கவேண்டும் என்ற உடன்பாட்டுடன் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விதைகளைப் பெற்று ஆர்வத்தோடு சிறுதானியச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் அறுவடையை முடித்த ஒரு தொகுதி விவசாயிகளே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனிடம் விதைகளைக் கையளித்துள்ளனர்.

நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக விவசாய விஞ்ஞானி கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் ம. இரேனியஸ் செல்வின், நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச. சர்வராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் குரக்கன் கஞ்சி வழங்கி உபசரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பசுமை இயக்கத்தின்

ஆடிப்பிறப்பு விழா

உரும்பிராயில் சிறப்பாக இடம்பெற்றது


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது. உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன் சனசமூகநிலைய முன்றலில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்> கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன் ஆகியோருடன் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன் கலந்து கொண்டிருந்தார்.

திருமதி ரேணுகா அன்ரன்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் பரிமாறப்பட்டதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன.

தமிழர்களுக்கே உரித்தான ஒரு பண்பாட்டு அடையாளமான ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் தற்போது அருகிவந்துள்ளன. இந்நிலையில், மீளவும் அதனை வெகுசனமயப்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொதுமக்களுடன் இணைந்து ஆடிப்பிறப்பைச் சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

சிறுப்பிட்டியில் சிறுதானிய விதைகள் விநியோகம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் சிறுப்பிட்டியைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உரங்கள் மற்றும் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் உணவுற்பத்தி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு குறைந்தளவு நீரும் பசளைகளுமே போதுமான சிறுதானியச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற திட்டத்தைக் கடந்த மாதம் முதல் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நேற்று திங்கட்கிழமை (27.06.2022) சிறுப்பிட்டியில் 50 விவசாயிகளுக்குக் குரக்கன், பயறு, காராமணி ஆகியவற்றின் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூக நிலையத்தில் கு. மயூரதன் தலைமையில் நடைபெற்ற விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இராசதானியத் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார். வளவாளராகக் கலந்துகொண்ட ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் குறைந்தளவு நீர்ப்பாசனத்துடனும் பசளைகளுடனும் எவ்வாறு சிறுதானியச் செய்கையினை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் பயிர்களில் பீடைகளின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

வழங்கப்படுகின்ற விதைகளின் நிறையின் இரட்டிப்பு மடங்கு விதைகளை விவசாயிகள் அறுவடையின் பின்னர் சுழற்சி முறையில் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இராசதானியத் திட்டம் முனனெடுக்கப்பட்டு வருகின்றது. விதை இரட்டி என்ற இந்த முறைமை எமது பண்டைய விவசாய மரபில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டம்

அளவெட்டியிலும் முன்னெடுப்பு


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியத் திட்டத்தின்கீழ் அளவெட்டியில் விவசாயிகளுக்குத் தானியங்களை வழங்கியுள்ளது. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக விரைவில் உணவுப்பஞ்சம் ஏற்படலாமென பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இதற்கு முகங்கொடுக்கும் விதமாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் இருந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாகவே அளவெட்டியில் நேற்று திங்கட்கிழமை (20.06.2022) விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அளவெட்டி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் விவசாயச் சம்மேளனத்தின் தலைவர் வை. சின்னப்பு தலைமையில் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார். ஓய்வுநிலைப்பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் தானியங்களின் செய்கைமுறை பற்றி விளக்கமளித்ததோடு விவசாயிகளின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் அளவெட்டி மற்றும் அயற்கிராமமான மல்லாகம் கல்லாரையைச் சேர்ந்த 25 விவசாயிகளுக்குக் குரக்கன், வரகு, பயறு, காராமணி விதைகள் உடனடி விதைப்புக்கென வழங்கப்பட்டுள்ளன.

வழங்கப்படும் விதைகளின் எடையின் இரட்டிப்பு மடங்கு விதைகளைச் சுழற்சிமுறையில் வேறு விவசாயிகளுக்கு வழங்கும்பொருட்டு அறுவடையின் பின்னர் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்கவேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதும் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கன.

மீட்பர்கள் எவருமிலர்;

பட்டினிச் சாவில் இருந்து

எங்களை நாங்களேதான் காப்பாற்ற வேண்டும்

பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீர்ந்து விடப்போவதில்லை. உணவுப் பற்றாக்குறைவு தானாகத் தீரும் என்று எவரும் காத்திருக்கவேண்டாம். மீட்பர்கள் எவருமிலர்; பட்டினிச் சாவில் இருந்து எங்களை நாங்களேதான் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (14.06.2022) அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு மீண்டெழப் பதினெட்டு மாதங்கள் ஆகும் என்று அறிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தங்களால் ஐந்து வருடங்களில் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சாதாரண மக்கள் அடுத்த மாதம் பற்றியோ, அடுத்த வருடம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. அடுத்த வேளைக்குச் சாப்பாடு கிடைக்குமோ என்றே அங்கலாய்க்கின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தலாம் என்று ஜக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை அல்ல. உணவுற்பத்தி குறைந்து வருவதாலும் உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாலும் ஒருவர் நாளாந்தம் எடுக்கும் உணவின் அளவு குறைந்து வருகிறது. பசியால் மயங்கி விழுகின்ற சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

பொருளாதார நெருக்கடி எப்போது தீரும் என்று எமது தலைவர்கள் சோதிடக்காரர்கள்போல ஆருடங்களை மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளிடம் இருந்து கடன்பெறுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். மக்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு எந்தவொரு தீர்வையும் அவர்கள் முன்வைக்கவில்லை. நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய அவர்களால் அதற்கான தீர்வை முன்வைக்கவும் இயலாது.

போர்க்காலங்களில் தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கும் நெருக்கடிகளைவிட மிகமோசமான நெருக்கடிகளையெல்லாம் அனுபவித்திருந்தார்கள். ஆனால், அப்போது மக்களின் பாதி வலிகளை விடுதலைப்புலிகள் தங்கள் தோள்களில் தாங்கியதால் நெருக்கடிகளை எங்களால் கடந்துவர முடிந்தது. தற்போது, ஒவ்வொருவரும் எங்களால் இயன்றளவு உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் மாத்திரமே ஏற்படவுள்ள உணவுப் பஞ்சத்துக்கு முகங்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டம் அராலியில் முன்னெடுப்பு

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டத்தின் கீழ் அராலியில் 50 விவசாயிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (14.06.2022) விதைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சி அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலைய மண்டபத்தில் தே. மிதுசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், செயலாளர் ம. கஜேந்திரன், ஓய்வுநிலைப் பிரதி விவசாயப்பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதோடு, தெரிவுசெய்யப்பட்ட 50 விவசாயிகளுக்குக் குரக்கன், காராமணி (கௌபி), பயறு ஆகிய விதைகளையும் வழங்கி வைத்துள்ளனர்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் காலநிலை மாற்றங்களையும் கருத்திற்கொண்டு, சிறுதானியச் செய்கைகளை ஊக்குவிக்கும் முகமாக இராசதானியம் திட்டத்தை விவசாயக் கிராமங்களில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராசதானியம் திட்டம் சங்கானையில் முன்னெடுப்பு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (12.06.2022) சங்கானையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப்பசுமை இயக்கம் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்று கருப்பொருளில் இராசதானியம் என்ற திட்டத்தை விவசாயக் கிராமங்களில் முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இத்திட்டத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கானை மடத்தடியில் இடம்பெற்றுள்ளது.

மடத்தடி வரசித்தி விநாயகர் ஆலய முன்றலில் தி. சத்தியேந்திராவின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் இராசதானியத் திட்டம் தொடர்பான கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். ஓய்வுநிலைப் பிரதி விவசாயப்பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் சிறுதானியங்களின் செய்கை முறைபற்றிய வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்.

இதன்போது ஐம்பது விவசாயிகளுக்குக் குரக்கன், காராமணி (கௌபி), பயறு விதைகள் வழங்கி வைக்கப்பட்டன. இலவசமாக வழங்கப்பட்ட விதைகளின் இரட்டிப்பு மடங்கு விதைகள் சுழற்சி முறையில் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும்பொருட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இவ்விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள உணவுப் பஞ்சத்துக்கு முகங்கொடுக்கும் விதமாக அதிக நீரும், அதிக உரங்களும் தேவைப்படாத குறுகிய காலப்பயிர்களான சிறுதானியங்கள் மற்றும் அவரையினப் பயிர்களை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியம்

சிறுதானிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற பெயரில் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற மகுட வாசகத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இராசதானியத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (29.05.2022) அச்சுவேலி பத்தமேனியில் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக ஓய்வுநிலை பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன், சமூகச் செயற்பாட்டாளர் ம. செல்வின் இரேனியஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

சிறுதானியங்கள் தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் முதன்மை இடத்தைப் பெற்றிருந்தன. தற்போது இவை வழக்கொழிந்து வரும் நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியையும், காலநிலை மாற்றங்களையும் கருத்திற்கொண்டு மீளவும் இவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அச்சுவேலிப் பகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 விவசாயிகளுக்கு குரக்கன், வரகு, பயறு ஆகியவற்றின் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

விவசாயிகள் பெற்றுக்கொண்ட விதைகளின் இரண்டு மடங்கு விதைகளை அறுவடையின் பின்னர் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கட்டணம் எதுவுமின்றி வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளுடனேயே விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சிறுதானிய உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வசதிகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் விவசாயிகளுக்குச் செய்துகொடுக்கும் எனவும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்துடன் தொடர்புகொண்டு சிறுதானிய விதைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை

ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம்

இயக்குநர் கேசவராஜ் நினைவு நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன்


இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரத்தைப் போட்டுத் தந்துள்ளது. அந்த அத்திவாரம் இன்றும் அப்படியே உள்ளது. அந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி எமக்கான தனித்துவமான ஈழ சினிமாவைக் கட்டியெழுப்புவதற்குத் திரைத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் இளங்கலைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ஈழத்திரைச் செயற்பாட்டாளர் அமரர் ந. கேசவராஜ் அவர்களின் நினைவரங்கு நிகழ்ச்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியால் நேற்று (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெகுசன ஊடகங்களில் காட்சி ஊடகமான திரைத்துறை மிகப்பலம் வாய்ந்தது. மக்களிடம் எளிதில் சென்றடையக்கூடிய இவ்வூடகம் அவர்களிடையே கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி கதாபாத்திரங்கள் பற்றிய விம்பங்களைக் கட்டியமைக்கின்றது. இத்திரைத்துறையைப் பயன்படுத்தியே தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் அவர்களால் முதலமைச்சராக முடிந்தது. இன்றும் பல நடிகர்கள் இந்த வழியூடாகவே அரசியலில் பிரவேசிக்க முயன்றுகொண்டிருக்கின்றனர்.

திரைத்துறையின் முக்கியத்துவங்களைப் புரிந்துகொண்டதாலேயே போராட்ட நெருக்கடிகளின் மத்தியிலும் விடுதலைப் புலிகள் தனியானதொரு துறையாக திரைப்படத் துறையை வளர்த்தெடுத்தனர். போரின் நியாயங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கும், போரினால் மக்கள் படும் வலிகளை வெளியுலகுக்குக் கொண்டு செல்வதற்கும் குறும் படங்களையும் முழுநீளத் திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் உருவாக்கினார்கள். ஆனால், தமிழ் நாட்டின் வியாபார நோக்கைக்கொண்ட திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு இத்திரைப்படங்களைக் கலைத்துவ ரீதியான படங்களாக, தனித்துவமான ஈழ சினிமாவாக உருவாக்குவதில் கூடிய சிரத்தை எடுத்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறையின் பாசறையில் போராளி இயக்குநர்களான பரதன், சேரலாதன், குயிலினி ஆகியோருடன், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்லாத இயக்குநர்களான ஞானரதன், கேசவராஜ், முல்லை யேசுதாஸ், தாசன் ஆகியோரும் எங்களது வாழ்வியலைப் பிரதிபலிக்கத்தக்க படங்களை உருவாக்கியிருந்தார்கள். போதிய தொழில்நுட்பவசதிகளும் முன் அனுபவமும் இல்லாது இருந்தபோதும் அவர்கள் உருவாக்கிய பல படங்கள் இப்போது பார்க்கும்போதும் பிரமிக்க வைக்கின்றன. திரைத்துறையில் இப்போது கால்பதித்திருக்கும் எமது இளங்கலைஞர்கள் இப்படங்களைத் தங்களுக்கான பாடங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில்

ஈழத்திரைச் செயற்பாட்டாளர்

அமரர் கேசவராஜா அவர்களின் நினைவரங்கு


ஈழத்திரையுலகில் ந. கேசவராஜா அவர்கள் ஒரு இயக்குநராக, கதையாசிரியனாக, வசன கர்த்தாவாக, நடிகனாகக் காத்திரமான பங்களிப்பை நல்கி வந்தவர். கடந்த ஜனவரி 9ஆம் திகதி தனது 58 ஆவது வயதில் அமரத்துவமடைந்த கேசவராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியினரால் நேற்று (24.01.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்றக் கலாமண்டபத்தில் நினைவரங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அமரர் கேசவராஜா அவர்களுடன் இணைந்து திரைத்துறையில் பணியாற்றிய இயக்குநர் திருமதி ஷாலினி சாள்ஸ், இசையமைப்பாளர் கண்ணன் முரளி, மூத்த படைப்பாளி திரு. நா. யோகேந்திரநாதன் ஆகியோரும் அரசியல் ஆய்வாளர் திரு. நிலாந்தன் அவர்களும் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நினைவரங்கு நிகழ்ச்சியில் கேசவராஜா அவர்களின் திரைப்படங்களில் இருந்து காட்சிகள் தொகுக்கப்பட்டுத் திரையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.