வனமே என் இனமே காணொலிப்பாடல் வெளியீடு

வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நேற்று வெள்ளிக்கிழமை (25.11.2022) வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்துள்ள மலர்க்கண்காட்சியின்போதே இக் காணொலிப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைச்செயலாளர் கை. சரவணனின் தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் இசைவாணர் கண்ணன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு காணொலிப்பாடலின் முதல் திரையிடலைத் தொடக்கி வைத்தார். திரையிடலைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் சி. ரகுராம் கருத்துரையை வழங்கினார்.

வனமே என் இனமே பாடலை பூவன் மதீசன் எழுதிப்பாடி நடிக்க ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். இது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஒரு தயாரிப்பாகும்.

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள

சங்கிலியன் பூங்காவின்

கார்த்திகை வாசம்

ஞாயிறு இறுதி நாள்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற மலர்க் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மலர் முற்றம்’ என்ற காட்சித் திடல் சங்கிலியன் பூங்காவில் கடந்த 18ஆம் திகதி (வெள்ளிக் கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மலர் முற்றத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர். இதனைத் தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதோடு மலர்ச் செடிகளையும் மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழமைபோன்றே இந்த ஆண்டும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு, ஆலயங்களுக்கும் அதன் பழமுதிர்ச்சோலை திட்டத்தின் கீழ் இலவசமாகப் பழமரக்கன்றுகளை வழங்கி வருகிறது. பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இக் கார்த்திகை வாசத்தில் காட்சிக் கூடங்கள் எதிர்வரும் 27ஆம் திகதிவரை (ஞாயிற்றுக் கிழமை) தினமும் காலை 8.30 மணிமுதல் முன்னிரவு 7.00 மணிவரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

முள்ளியான் ஆலயங்களில் பழமரநடுகை

தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆலயங்களில் பழமரச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் பழமுதிர்ச்சோலை என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நேற்று ஞாயிற்றுக் கிழமை (20.11.2022) வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியிலுள்ள ஆலயங்களில் பழமரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேவில் முத்துமாரியம்மன் ஆலயம், வேதக்குளம் மயிலிய வைரவர் ஆலயம், உணவத்தை கண்ணகை அம்மன் கோவில், வெற்றிலைக்கேணி செல்வவிநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களின் அறங்காவல் குழுவினரிடம் பழமரக்கன்றுகளைக் கையளித்ததோடு பழமரக்கன்றுகளை நாட்டியும் வைத்தார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மரநடுகை மாதத்தை முன்னிட்டுக் கார்த்திகை வாசம் என்ற மலர்க்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் முறையாகப் பராமரிக்கக்கூடிய ஆலயங்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பழமரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகைப்பூ தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம்

பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப் புலிகள் தேசியமலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதால் அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம். அந்தவகையில், அது தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.11.2022) ஆரம்பமாகியுள்ளது. கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமான இதன் தொடக்கவிழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லை. அந்த அளவுக்குத் தமிழ்மக்களின் வாழ்வியலில் கார்த்திகைப் பூவுக்குத் தனியானதொரு இடமுண்டு. இதனாலேயே, இந்தியாவில் தமிழ்நாடு தனது மாநில மலராகக் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்துள்ளது. கார்த்திகைப்பூவின் பிரகாசமான மஞ்சள், சிவப்பு வர்ணங்களும் மாவீரர்களை நினைவேந்தும் கார்த்திகையில் மலரும் அதன் பண்பும் மேலதிக காரணங்களாக அமைய, விடுதலைப்புலிகளும் கார்த்திகைப்பூவைத் தேசியமலராக அறிவித்தார்கள்.

விடுதலைப்புலிகள் இப்போது இல்லை என்பதற்காகக் கார்த்திகைப்பூ தமிழ்மக்களின் தேசிய அடையாளங்களில் ஒன்று என்ற அந்தஸ்தை ஒருபோதும் இழந்துவிடாது. அது யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுபோன்று ஆண்டுதோறும் கார்த்திகையில் மொட்டவிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவை காரணமாகவே கார்த்திகை மாத மரநடுகை விழாக்களில் கார்த்திகைப்பூச்சூடுவதை நாம் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். இதன்மூலம் எமது சுற்றுச்சூழல் பற்றியும் வரலாறுபற்றியும் இளையதலைமுறைகளுக்கு நாம் எடுத்தியம்புகிறோம்.

கார்த்திகைப்பூவை அதிலுள்ள நஞ்சு காரணமாக நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். பூக்கும் தாவரங்கள் எல்லாமே ஏதோவொரு அளவில் ஏதோவொரு நஞ்சை எதிரிகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகக் கொண்டிருக்கின்றன. கார்த்திகைப்பூச்செடியிலுள்ள நஞ்சு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் கார்த்திகைப் பூச்செடி பயிரிடப்படுகிறது. பலகோடி ரூபாய்கள் அந்நியச்செலாவணியாகக் கிடைக்கிறது. நாமும் கார்த்திகைச்பூச்செடிகளை பெரும்பண்ணைகளாக அமைக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

பசுமை இயக்கத்தின் பழமுதிர்ச்சோலை

மரநடுகைமாத செயற்றிட்டம் ஆரம்பம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாகப் பழமுதிர்ச்சோலை என்ற திட்டத்தை இந்த ஆண்டு முன்னெடுத்துள்ளது. ஆலயங்கள் தோறும் பழமரங்கள் நாட்டுவோம் என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (07.11.2022) சம்பிரதாயபூர்வமாகப் பூநகரியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி ஸ்ரீ சர்வவிக்கின விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலய அறங்காவலர் குழுவினர்களிடம் பழமரக்கன்றுகளை வழங்கியதோடு, மரக்கன்றுகளை நாட்டியும் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பூநகரி பிரதேசமருத்துவமனை மருத்துவ பொறுப்பு அதிகாரி ஸ்ரீ. ஆனந்தசிறி அவர்களும் கலந்துகொண்டிருந்தார். தொடர்ந்து, பூநகரி ஞானிமடம் கொட்டிலுப் பிள்ளையார் ஆலயம் மற்றும் பூநகரி பிரதேசமருத்துவமனைக்கும் பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாணசபை 2014ஆம் ஆண்டு கார்த்திகையை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. கார்த்திகை மழைவீழ்ச்சிகூடிய மாதம் என்பதோடு தமிழ்த்தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். தமிழ்மக்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்யும் பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளனர். மாவீரர்களை நினைவேந்தும் நாட்களும் இம்மாதத்திலேயே அடங்குவதால் இம்மரநடுகை மாதத்தைப் பொதுஅமைப்புகளும் பொதுமக்களும் ஆண்டுதோறும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல;

தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்

- பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு


வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டுமுதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு;

பூமி சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளன. கடும் வறட்சி, காலம்தப்பிய பெருமழை, வேகமெடுக்கும் சூறாவளிகள், கடல்மட்ட உயர்வு, உயிரினங்களின் அழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப்பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது தமிழ்த்தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ்மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன்கூடிய ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும்.

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும்.

- இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர்

வீட்டுத்தோட்டப் போட்டிக்கான விதைகள் விநியோகம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்துகின்றது. இதற்கான விதைப் பொதிகளை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (03.09.2022) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற விதைப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் விவசாய விஞ்ஞானியும், யாழ் பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி, ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் ஆகியோர் வீட்டுத்தோட்டச் செயன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் அனைவருக்கும் வீட்டுத்தோட்டத்துக்கான பத்து வகையான விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் தொடர் மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் அறிவைப்புகட்டி அவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழற்பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்கில் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டும் சூழலுக்கு இசைவான சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் தற்போது ‘மாணாக்க உழவர்’ என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்துவது குறிப்பிடத்தக்கது.

பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர்

மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டி


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘மாணாக்க உழவர்’ என்ற பெயரில் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டியொன்றை நடாத்துகின்றது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செயன்முறை வழிகாட்டற் கருத்தமர்வும் விதைப்பொதிகள் விநியோகமும் எதிர்வரும் 03.09.2022 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நல்லூர், சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ஓய்வுநிலைப்பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன், விவசாய விஞ்ஞானி கலாநிதி எஸ். ஜே அரசகேசரி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை மற்றும் உணவுக்கான நெருக்கடி ஆகியனவற்றைக் கருத்திற்கொண்டு வீட்டுத்தோட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களை 01.09.2022 மாலை 5.00 மணிக்கு முன்பாக 0777969644 அல்லது 0741471759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் ‘மாணாக்க உழவர்’ சான்றிதழ்களும், சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சி இடம்பெற்றது


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (15.07.2022) வவுனியாவில் நடைபெற்றது. மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவைப் புகட்டி அவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமைத்திறனை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே வவுனியா கோயிற்குளத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சோ. சிவநேசன் தலைமையில் கோயிற்குளம் விஷ்ணு ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினராகச் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி. தேவராஜ் கலந்துகொண்டிருந்தார். பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து உரையாற்றியிருந்தார். இந்நிகழ்ச்சியில் கண்ணன் அறநெறிப் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆலய அறங்காவற் குழுவினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மாணவர்கள் அனைவருக்கும் கனடா ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் அனுசரணையுடன் சூழல் விழிப்புணர்வு மேற்கோள்கள் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

கொல்லங்கலட்டியில் நடைபெற்றது


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிறுக்கிழமை [09-06-2022]தெல்லிப்பளை கொல்லங்கலட்டியில் நடைபெற்றுள்ளது .தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்கோடும் அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கோடும் கிராமங்கள் தோறும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே கொல்லங்கலட்டியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.


பா.நவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன் , சி.சிவகஜன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள். அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் மரநடுகை மேற்கோள்கள் அடங்கிய அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன. இவ்வப்பியாசக்கொப்பிகள் ரொறன்ரோவின் மனித நேயக்குரல் என்னும் அமைப்பின் அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பூமியை நாம் சூடுபடுத்துவதால் கொரோனாவைவிடக்

கொடும் நோய்கள் தாக்கும் அபாயம்


சூழல்தின நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

கொரோனா நோய் இதுவரையில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி எடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகையும் முடக்கிப் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா ஓர் முடிவல்ல. இதைவிடக் கொடிய நோய்களை எல்லாம் மனுக்குலம் அனுபவிக்கப்போகிறது. பூமியை நாம் சூடுபடுத்துவதால் கொரோனாவைவிடக் கொடும் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு சூழல்தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் எரிபொருட்களை அளவுகணக்கின்றி எரித்துத்தள்ளுகிறோம். இதனால் வெளியேறும் கரிக்காற்று நாளுக்கு நாள் பூமியைச் சூடுபடுத்தி வருகிறது. இவ்வெப்பம் காரணமாகத் துருவப்பகுதிகளில் உறைந்திருக்கும் பனி உருகிவழியத் தொடங்கியுள்ளது. பனிப்பாளங்களின் கீழே மனிதன் பூமியில் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய வைரசுக்கள் இப்போதும் உறைநிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பனி உருகுவதால் இவ்வைரசுக்கள் வெளியேறி மனிதர்களைத் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

காட்டு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தாவித் திரிபடைந்த வைரசுக்களே கொரோனாக் கிருமிகள். இவை மனிதர்களுக்குப் புதியவை என்பதாலேயே இவற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களிடம் இருக்கவில்லை. இதனாலேயே கொரோனா பெருங்கொள்ளை நோயாக உருவெடுத்து உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உறைபனிகளின் கீழிருந்து வெளிப்படும் வைரசுக்களும் மனிதர்களுக்குப் புதியவை என்பதால் இவை தொற்றும்போதும் புதுப்புதுக் கொள்ளை நோய்களாகவே உருவெடுக்கும்.

எமது பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான வெள்ளுடுத்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு வெள்ளுடுத்தொகுதியிலும் பில்லியன் கணக்கான கிரகங்கள் உள்ளன. ஆனால், பூமிக் கிரகம் ஒன்றே ஒன்றுதான். உயிரினங்கள் வாழுகின்ற வேறு கிரகங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால், நாம் பூமியின் அத்தனை வளங்களையும் சூறையாடி வருகின்றோம். இருக்கின்ற ஒரேயொரு பூமியை நாம் பாதுகாத்தாலே நோய்நொடியின்றி நாமும் வாழ்ந்து ஏனைய உயிரினங்களும் இந்தப் பூமியில் வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கத்தின்

சூழல்தின உரையரங்கு

ஆவரங்காலில் இடம்பெற்றது


தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) சிறப்பாக நடைபெற்றுள்ளது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் தலைமையில் ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் சபா. குகதாசன் வரவேற்புரை நிகழ்த்த யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் ச. ரவி, தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் சுற்றுச்சூழல் தொடர்பாகச் சிறப்புரையை ஆற்றியிருந்தார்கள்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கிலும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகவே உலக சூழல் தின உரையரங்கு நடைபெற்றுள்ளது. இவ்வுரையரங்கில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் தொடர்பான வினாக்கள் வினவப்பட்டுச் சரியாக விடையளித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சூழல் பாதுகாப்பு மேற்கோள்கள் அடங்கிய அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் அப்பியாசக் கொப்பிகளுக்கான அனுசரணையை கனடாவிலுள்ள ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் எனும் அமைப்பு வழங்கியிருந்தது.

நெருக்கடி காலங்களில் வழிகாட்டுவதற்குத்

தமிழர்களுக்கு இப்போது

தலைமை இல்லை

பசுமை அறிவொளி நிகழ்ச்சியில்

பொ. ஐங்கரநேசன்

இலங்கை முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், யுத்த காலத்தில் பாரிய நெருக்கடிகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டோம் என்ற மனோநிலையில் இருக்கும் தமிழ்மக்கள் இந்தப் பிரச்சினைகளை அவற்றின் பாரதூரம் புரியாமல் இலகுவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யுத்த காலத்தில் தமிழ் மக்களை வழிப்படுத்த விடுதலைப்புலிகள் இருந்தார்கள். ஆனால், நெருக்கடி காலங்களில் வழிகாட்டுவதற்குத் தமிழர்களுக்கு இப்போது ஒரு தலைமை இல்லை. இப்போதைய நெருக்கடிச் சூழலை நாம் சரியான முறையில் கூட்டாக எதிர்கொள்ளத் தவறினால் தமிழினம் பாரிய எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் நேற்று திங்கட்கிழமை (23.05.2022) நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பெற்றோர்களினதும் மாணவர்களினதும் மத்தியில் உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் பெரும் மூலதனம் கல்வி ஒன்றுதான். இதனாலேயே யுத்த நெருக்கடிகளின் மத்தியிலும் விடுதலைப்புலிகள் கல்விக்கென்று தனியானதொரு பிரிவை உருவாக்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கூடிய சிரத்தை எடுத்திருந்தார்கள். இடப்பெயர்வுகளின் மத்தியில் குப்பி விளக்குகளில் படித்தும்கூட மாணவர்களால் சிறந்த பெறுபேறுகளை எட்டக்கூடியதாக இருந்தது. ஆனால், இப்போது தமிழ்மக்கள் தொடர்ந்து கல்வியில் வீழ்ச்சியையே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் இப்போது இல்லாத நிலையில் வன்முறைகளுக்கும் போதைப் பொருள் பாவனைக்கும் மாணவர்கள் திட்டமிட்டுப் பழக்கப்படுகிறார்கள். இந்தத் திசைதிருப்புதல்களுக்கும் மேலாக, கொரோனாப் பெருங்கொள்ளை நோயால் பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டதாலும் மாணவர்கள் கல்வியில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்கள். இவற்றுடன் இப்போது நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவும் கல்வியைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ முடியாமல் இருக்கும் தமிழ் மக்களைப் பொருட்களின் உச்ச விலையேற்றம் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. வறுமை கல்வியை மோசமாகப் பாதிக்கும். ஏழைக் குடும்பங்கள் மாணவர்களை வேலைக்கு அனுப்புகின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கடுமையான சூழ்நிலையிலும் எதற்காகவேனும் பிள்ளைகளின் கல்வியை நாம் பலியிட்டுவிடக்கூடாது. இவ்விடயத்தில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் உடனடியாகக் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாவற்குழியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் நேற்று திங்கட்கிழமை (23.05.2022) நாவற்குழியில் இடம்பெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களிடையே சூழல் அறிவைப் புகட்டி சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கோடும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நேற்று நாவற்குழி ஐயனார் கோவிலடியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். மாணவர்கள் அனைவருக்கும் சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்ட மாணவர் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. இக்குறிப்பேடுகளுக்கான அனுசரணையைக் கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல் அமைப்பு வழங்கியிருந்தது.

பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுப்பு


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சூழற் பாதுகாப்பில் அவர்களைப் பங்குபற்றுநர்களாக்கும் நோக்கோடு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்துள்ள இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.03.2022) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பின் தலைவருமான என்.ஆர்.லோகேந்திரலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் விரிவுரையாளர் பா.பாலகணேசன், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் மு. கனகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் திட்டம் தொடர்பான விளக்கவுரையை ஆற்றியிருந்தார்.

திட்டவுரையில் பொ. ஐங்கரநேசன் தெரிவிக்கையில்,

ஒரு அரசியற்கட்சி மேடைகளில் வெறுமனே அரசியலை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அரசியல் மக்களுக்கானது என்ற வகையில், சமூகத்தைப் பாதிக்கும் அனைத்து விடயங்களிலும் அது கரிசனை கொள்வது கட்டாயமானதாகும். அதன் அடிப்படையிலேயே, பரீட்சைகளை மையப்படுத்திய கல்வி முறையால் வகுப்பறைகளுக்குள் புறொயிலர் கோழிகள் போல முடக்கப்பட்டிருக்கும் மாணவர்களை வகுப்பறைகளுக்கு வெளியே அழைத்து வந்து அவர்களிடையே இயல்பாகவே குடிகொண்டிருக்கும் இயற்கை மீதான ஆர்வத்தைச் சூழல் மீதான அக்கறையாக மாற்றும் வகையில் அவர்களுடன் சூழல் சார் அறிவைப் பகிர்ந்து கொள்ளவுள்ளோம். இதன் மூலம் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களைச் சூழல் பாதுகாப்பில் பார்வையாளர்களாக இல்லாது பங்குபற்றுநர்களாக ஆக்க முடியும். இதனை முன்னெடுப்பதற்கு வளவாளர்கள் கிராமங்கள் தோறும் மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நிகழ்த்தவுள்ளார்கள்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல்பாதுகாப்பு அணியும் மாணவர் அணியும் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம் கட்சி அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் அப்பாற்பட்டது. சூழல் நலனை, அதன் மூலம் இனத்தின் நலனை மாத்திரமே குறியாகக் கொண்டதாகும். இத்திட்டம் தங்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டும் என்று விரும்பும் பொது அமைப்புகள், பொது மக்கள் பசுமை இயக்கத்துடன் தொடர்பு கொண்டால் ஒழுங்கு செய்து தரப்படும் என்று குறிப்பிட்டார்.

அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் சுற்றுச்சூழலின்மீது

அக்கறை கொள்வது

தேசியத்துக்கான அவர்களின் அதிசிறந்த பங்களிப்பாக அமையும்

பசுமை அமைதி விருது விழாவில்

ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை, வாழிடம் என்று பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் முறைமையாகும். மொழி, உணவு, உடை, வாழிடம் என்று எல்லாமே அவை சார்ந்துள்ள இயற்கைச் சூழலாலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இயற்கைச் சூழல்பாதிக்கப்படும்போது இவையாவுமே பாதிக்கப்பட்டுக் கடைசியில் தேசியமே கேள்விக்கு உள்ளாகிறது. அந்தவகையில், மாணவர்கள் இயற்கையோடு இசைந்து வாழ்வதும் சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொள்வதும் தேசியத்துக்கான அவர்களின் அதிசிறந்த பங்களிப்பாக அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்களாகக் கொரோனாப் பெருங்கொள்ளை நோயும், காலநிலை மாற்றமும் உள்ளன. இரண்டும் மனுக்குலத்துக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இரண்டும் இயற்கையை நாம் அழித்ததால் ஏற்பட்டுள்ள விளைவுகளேயாகும். இதனை, இயற்கையை நாம் அழித்ததால் இயற்கை எமக்கு வழங்கிய தண்டனைகளாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா சீனாவின் தயாரிப்பா இல்லையா என்பது விவாகத்துக்கு உரியது. ஆனால், இந்நோய் காட்டு விலங்குகளில் உறையும் வைரசுக்கள் விகாரம் பெற்று மனிதர்களுக்குத் தாவியதால் ஏற்பட்டுள்ளது என்பதே அறிவியல். அந்த வகையில், காடுகளில் இருக்க வேண்டிய விலங்குகளை, இயற்கையையும் மீறி நாட்டுச் சந்தைக்குள் கொண்டுவந்ததன் விளைவே இன்று முழு உலகத்தையும் முகக்கவசம் மாட்ட வைத்திருக்கிறது.

நாம் எரிபொருட்களை எரித்து வளியில் குவித்துக் கொண்டிருக்கும் கரிக்காற்றே பூமியைச் சூடுபோட்டு வருகிறது. பூமி வெப்பம் அடைவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வழிகின்றன. இதனால், இவற்றுக்கு கீழே உறங்கு நிலையிலுள்ள, மனிதன் தோன்ற முன்னரே தோற்றம் பெற்ற வைரசுக்கள் வெளிக்கிளம்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவை பரவ ஆரம்பித்தால் அது கொரோனாவைவிடப் பன்மடங்கு கொடிய நோய்களை ஏற்படுத்துவதாக அமையும்.

கொரோனா என்ற கொள்ளை நோயாகவும், காலநிலை மாற்றங்களாகவும் இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளாது, நாங்கள் அனைவருமே இயற்கையுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகவே செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இதில் மாணவர்களே பெரும் பங்காற்ற முடியும். அதனாலேயே மாணவர்களுக்குச் சூழற்கல்வி, சூழல் விழிப்புணர்வு, சூழல்பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்குடன் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

பசுமை அமைதி விருது விழாவில்

தவில்-நாத இசை மழை

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) அன்று வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் விதமாக விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சிறார்களின் தவில்-நாத இசை மழை இடம்பெற்றது. பிரபல நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களின் புதல்வர் சரண்ஜன், பிரபல தவில் வித்துவான் செந்தில்நாதன் அவர்களின் புதல்வர் சபரிஷன் ஆகிய இரு சிறார்களும் இணைந்து நாதஸ்வர இசை மழை பொழிய இவர்களுக்கு இணையாக செந்தில் நாதன் அவர்களின் இன்னுமொரு புதல்வரான பிருத்விகன், தவில் வித்துவான் பிரபாகரன் அவர்களின் புதல்வர் வேந்துஷன் ஆகிய இருவரும் இணைந்து தவில் வாத்திய இசை முழங்கினர்.

தங்கள் தவில் நாதஸ்வர இசையால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியின் துணைப் பொதுச் செயலாளர் கை. சரவணன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பை வழங்கினார்.

மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறிய

பசுமைஅமைதி விருதுகள் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கடந்த ஆண்டு தேசிய ரீதியில் மாணவர்களிடையே இணைய வழியில் சூழல் பொதுஅறிவுப் பரீட்சையொன்றை நடாத்தியிருந்தது. இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றிருந்த இப்பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பசுமை அமைதி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இவர்களோடு விசேட சித்தி மற்றும் அதிதிறமைச் சித்தி பெற்ற மாணவர்களில் ஒரு தொகுதியினர் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் சிவகரன் அபிசாய்ராம் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும், யாழ் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி ஷண்முஹி கருணாநிதி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும், மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த செல்வி டிலுக்சினி டன்ஸ்ரன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்துக்கொண்டார்கள். இவ்விருதுகள் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான பசுமை அமைதி விருதை இயற்கை விவசாயி அல்லைப்பிட்டி மகேஸ்வரநாதன் கிரிசன் பெற்றுக்கொண்டார். தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட இவ்விருதோடு, ஒரு இலட்சம் ரூபா பொற்கிழி வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வரவேற்புரையை தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல்பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் ஆற்ற, நன்றியுரையை பொதுச் செயலாளர் ம. கஜேந்திரன் நிகழ்த்தியிருந்தார். பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்த இவ்விழாவுக்கான அனுசரணையை புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பு வழங்கியிருந்தது.