தேசியத்தின் பிரிக்கப்பட முடியாத, இன்றியமையாத ஒரு கூறாகச் ‘சூழலியம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வருகின்ற இவர், அரசியல் அதிகாரம் இல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது என்ற வலுவான நிலைப்பாட்டோடு அரசியலில் பிரவேசித்துள்ளார்.


வடக்கு மாகாண சபையில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றியிருந்த இவர், மாகாண சபைக்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்படாதிருக்கும் நிலையிலும் மக்கள் நலன் சார்ந்தும் சூழல் நலன் சார்ந்தும் பல திட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்தியிருந்தார். இத் திட்டங்களை முன்னெடுத்தபோது இவர் எதிர்கொண்ட பல்வேறு சவால்கள் இவரைத் தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பசுமைக் கட்சியின் அவசியம் குறித்து உணரவைத்தது. இதன் விளைவாகவே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தை நிறுவினார்.


சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியலில் இளவிஞ்ஞானமாணி பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்த இவர் சூழல் மாசடைதல் என்பதைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தாவர உடற்றொழிலியலும் பயிற்செய்கையியலும் துறையில் முதுவிஞ்ஞான மாணிப் பட்டத்தைப் பெற்றுள்ள இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் வெகுசனத் தொடர்பாடலில் முதுநிலை பட்டயப் படிப்பைப் பயின்றவரும் ஆவார்.